search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜும்ஆ தொழுகையில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஜும்ஆ தொழுகையில் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    அமீரகத்தில், ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசல்கள் மீண்டும் திறப்பு- ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு

    அமீரகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று ஜும்ஆ தொழுகைக்காக பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பொதுமக்கள் ஆர்வத்துடன் தொழுகையில் கலந்து கொண்டனர்.
    அபுதாபி:

    அமீரகத்தில் நேற்று முதல் வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகை பள்ளிவாசல்களில் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு உள்ள பள்ளிவாசல்கள் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதற்காக அபுதாபி, துபாய், சார்ஜா உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஜும்ஆ தொழுகையில் நேற்று காலை முதல் கலந்து கொள்ள பொதுமக்கள் தயாரானார்கள். இந்த தொழுகையில் கலந்து கொள்ள 30 சதவீதம் பேர் மட்டும் பள்ளிவாசல்களின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 1½ மீட்டர் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தொழுகையில் கலந்து கொண்டனர். முன்னதாக பாங்கு எனப்படும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் இமாம்கள் மிம்பரில் (மேடை) ஏறி குத்பா எனப்படும் உரையாற்றினர்.

    தொடர்ந்து 10 நிமிடங்களில் ஜும்ஆ தொழுகையானது சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டது. தொழுகைக்கு செல்பவர்கள் முககவசம் அணிந்து தங்களுக்கான தொழுகை விரிப்புகளை கொண்டு வந்தனர். அதேபோல் திருக்குர்ஆனையும் தனிப்பட்ட முறையில் கொண்டு வந்தனர். பலர் செல்போன்களில் திருக்குர்ஆன் ‘செயலி’கள் மூலம் ஓதினர். இந்த தொழுகையில் சிறுவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

    கடந்த 37 வாரங்களாக வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைகள் நடைபெறவில்லை. நேற்று 9 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக தொழுகைக்கு மிகவும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து பள்ளிவாசல்களிலும் 30 சதவீத மக்கள் வந்து இருந்ததை காணமுடிந்தது.

    அமீரகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிவாசலில் கூட்டுத்தொழுகை நடைபெறுவது கடந்த மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் முதல் சாதாரணமாக மற்ற நாட்களில் நடைபெறும் 5 வேளை தொழுகை 30 சதவீத பேருடன் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகை தொடர்ந்து நடைபெறும் என்பதால் இனி வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலில் அதிகமானோர் செல்ல உள்ளனர்.
    Next Story
    ×