search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபுதாபியில் அல் சஹாமா பகுதியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தின் மாதிரி
    X
    அபுதாபியில் அல் சஹாமா பகுதியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தின் மாதிரி

    அபுதாபியில் பிரமாண்ட கிறிஸ்தவ தேவாலயம் கட்டுமான பணிகள் தொடங்கியது

    இந்து கோவிலை தொடர்ந்து அபுதாபியில் அமையும் பிரமாண்ட கிறிஸ்தவ தேவாலயத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது.
    அபுதாபி:

    தென்னிந்திய திருச்சபை (Church of South India) என்னும் கிறிஸ்தவ சபை பிரிவானது இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பை பின்பற்றி இந்தியாவில் 1947-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது 40 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இந்தியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்த நிலையில் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய கிறிஸ்தவ சபை அமைப்பாக திகழ்கிறது.

    இது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புராட்டஸ்டன்ட் ஆகிய திருச்சபை குழுக்களை இணைத்து கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 14 ஆயிரம் உள்ளூர் பிரார்த்தனை கூடங்கள் இந்த திருச்சபையின் கீழ் உள்ளது. இதில் உள்ள உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியாவிலும் அதனை அடுத்து இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பக்ரைன், குவைத், கத்தார் மற்றும் அமீரகம் ஆகிய பகுதிகளிலும் அதிகமாக உள்ளனர். அமீரகத்திலும் இந்த திருச்சபையை பின் தொடரும் மக்களுக்காக பிரமாண்டமான தேவாலயத்தை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக கடந்த ஆண்டு இந்த தேவாலயத்தை கட்டுவதற்காக அபுதாபிக்கு உட்பட்ட அல் சஹாமா பகுதியில் 4.37 ஏக்கர் நிலத்தை அளிக்க அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமீரக சகிப்புத்தன்மைக்கான மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் பின் அல் நஹ்யான் கலந்து கொண்டார். தற்போது இந்த பகுதியில் தேவாலயத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த தேவாலயத்தில் தரைத்தளம் மட்டும் பால்கனி பகுதிகள் கட்டப்பட உள்ளது. இதில் மொத்தம் 750 பேர் ஒரே நேரத்தில் பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அளவிற்கு இட வசதியுடன் கட்டப்பட உள்ளது. துபாயில் வசிப்பவர்களும் ஜெபல் அலி பகுதியில் இருந்து இந்த தேவாலயத்திற்கு 40 நிமிட பயணத்தில் வந்து விடலாம்.

    கிறிஸ்தவ தேவாலயத்தின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் அடுத்த ஆண்டு (2021) ஜூன் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமீரகத்தில் கடந்த 1979-ம் ஆண்டில் 50 ஆக இருந்த தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தை பின்பற்றும் மக்கள்தொகை தற்போது 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×