search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் 4-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது

    சார்ஜாவில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் வருகிற 4-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
    சார்ஜா:

    சார்ஜா பகுதியில் பல்வேறு நர்சரி பள்ளிக்கூடங்கள் இருந்து வருகின்றன. இந்த பள்ளிக்கூடங்களில் 29 நர்சரி பள்ளிக்கூடங்கள் வருகிற 4-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சார்ஜா தனியார் கல்வி ஆணையத்தின் அனுமதியை பெற்று செயல்பட்டு வருகின்றன.

    மீண்டும் திறக்கப்பட இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்படுவதற்கு முன்னதாக சார்ஜா தனியார் கல்வி ஆணையம், ஆரம்ப கால குழந்தை பருவ மேம்பாட்டுத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் அங்குள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஒவ்வொரு பகுதியையும் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தனர்.

    மேலும் ஊழியர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இதுமட்டுமல்லாமல் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்ட பின்னர் அங்கு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும்.

    சிறு குழந்தைகள் மற்றும் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டி கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொண்டு பள்ளிக்கூட வளாகத்தை தொடர்ந்து தூய்மைப்படுத்தி வருவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமானது.

    குழந்தைகளின் உணவு குறித்தும், கழிவறைகளைப் பயன்படுத்துவது பற்றியும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது பராமரிப்பு பணிகளை செய்யும் ஊழியர்கள் வகுப்புகள் நடக்கும்போது பள்ளிக்கூட வளாகத்துக்குள் வர அனுமதிக்க கூடாது. குழந்தை அல்லது பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பெற்றோர்கள் தங்களது குழந்தையின் உடல் நலம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட நர்சரி பள்ளிக்கூடத்துக்கு தகவல் தர வேண்டும். உடல் நலக்குறைவுடன் இருக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    மேற்கண்ட தகவலை சார்ஜா கல்வி கவுன்சிலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×