search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரினத்தின் உயிரணு படிவம்
    X
    உயிரினத்தின் உயிரணு படிவம்

    10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறிய உயிரினத்தின் உயிரணு படிவம் கண்டுபிடிப்பு

    10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறிய உயிரினத்தின் உயிரணு படிவம் கண்டுபிடிப்பு தொன்மையான காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை தந்துள்ளது.
    நைபிடா:

    மியான்மர் நாட்டில் தொல்லியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், மிக பழமையான படிவம் ஒன்றில் இருந்து உயிரணு இருப்பது கிடைத்துள்ளது.  அந்த ஆய்வில், நீர்வாழ் உயிரினத்தின் பெண் விலங்கின் இனப்பெருக்க உறுப்பு பாதையில் பிசினுக்குள் உயிரணு பாதுகாப்புடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.  அது 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்தின் உயிரணு என்பது தெரிய வந்துள்ளது.

    இதுவரை அறியப்படாத இனத்தினை சேர்ந்த அந்த உயிரினத்திற்கு மியான்மர்சைப்ரிஸ் ஹுய் என பெயரிடப்பட்டு உள்ளது.  இது தற்கால ஆஸ்டிராகாட் என்ற உயிரினம் போன்ற உருவத்தினை ஒத்துள்ளது.

    இந்த ஆஸ்டிராகாட் உயிரினங்கள் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாழ்பவை.  நண்டுகள், இறால்கள் போன்ற கணுக்காலிகளான இவற்றில் சில சமுத்திரங்கள், நன்னீர் ஏரிகள் மற்றும் ஆறுகளில் இன்றளவிலும் காணப்படுகின்றன.

    ஆய்வாளர்கள் 3டி தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு ஆஸ்டிராகாட் உயிரினங்களின் மாதிரிகளை ஆய்வு செய்தனர்.  அவற்றின் கால்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.  அதில் இந்த உயிரினத்தின் உயிரணு கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கையின்படி, படிவத்தின் உயிரணு மாதிரிகள் கிடைப்பது என்பது மிக அரிது.  இதுவரை மிக பழமையான ஆஸ்டிராகாட் உயிரின உயிரணு 1.7 கோடி ஆண்டுகள் பழமையை கொண்டது.  இதேபோன்று 5 கோடி ஆண்டுகள் பழமையான புழு ஒன்றின் மாதிரி கிடைத்ததே இதற்கு முன்புவரை கிடைத்த பழமையான படிவத்தின் பதிவாக இருந்தது.

    இந்த ஆய்வால், மிக தொன்மையான காலத்தில் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பது உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
    Next Story
    ×