search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    எண்ணெய் கப்பல் தீ விபத்து
    X
    எண்ணெய் கப்பல் தீ விபத்து

    எண்ணெய் கப்பலில் 2-வது முறையாக பற்றிய தீ கட்டுக்குள் வந்தது - இலங்கை கடற்படை தகவல்

    எண்ணெய் கப்பலில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை நேற்று தெரிவித்தது.
    கொழும்பு:

    குவைத்திலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் பயணித்த போது கடந்த 3-ந்தேதி கப்பலில் தீ பிடித்தது.

    இந்த கோர விபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு மாலுமி உயிரிழந்த நிலையில், மற்ற 22 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இதையடுத்து இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு முயற்சியின் மூலம் எண்ணெய் கப்பலில் பற்றிய தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

    தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் கப்பலில் மீண்டும் தீப்பிடித்தது. உ‌‌ஷ்ணம் மற்றும் தீப்பிழம்புகள் காரணமாக மீண்டும் தீ பிடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

    அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை உதவியுடன் கப்பலில் மீண்டும் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை கடற்படை தீவிரமாக இறங்கியது.

    இந்த நிலையில் கப்பலில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை நேற்று தெரிவித்தது.

    இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘எண்ணெய் கப்பலில் 2-வது முறையாக பற்றிய தீயை பேரிடர் மேலாண்மை குழுக்கள் இன்று காலையில் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தன. இப்போதுவரை கப்பலில் தீப்பிழம்புகள் அல்லது புகை எதுவும் இல்லை. பேரழிவுக்கு உள்ளான இந்த கப்பல் பாதுகாப்பான நீர் பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×