search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைக்கிளில் வலம் வந்த துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை படத்தில் காணலாம்.
    X
    சைக்கிளில் வலம் வந்த துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை படத்தில் காணலாம்.

    சைக்கிளில் வலம் வந்த துபாய் ஆட்சியாளர்

    அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் துபாய் நகரில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வலம் வரும் காட்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
    துபாய்:

    துபாயில் உள்ள தண்ணீர் கால்வாய் (வாட்டர் கேனால்) பகுதியில் நேற்று முன்தினம் மாலை துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் 20 பேர் கொண்ட குழுவினருடன் சைக்கிளில் வலம் வந்தார். இதில் தனது சைக்கிளில் ஹெல்மெட், முகக்கவசம், கையுறைகளை அணிந்தபடி சைக்கிள் ஓட்டினார்.

    அந்த சைக்கிளில் அவரது செல்போன் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் எல்.ஈ.டி விளக்குகளை எரிய விட்டபடி சைக்கிளை ஓட்டி வந்தார். அவருடன் 20 பேர் சைக்கிள்களை ஓட்டி வந்தனர்.

    துபாய் தண்ணீர் கால்வாய் பகுதியில் சைக்கிள்களுக்கான பிரத்தியேக சாலையில் அவர் சாதாரணமாக ஓட்டிக்கொண்டு வந்த காட்சி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை புருவம் உயர்த்த வைத்தது. சாதாரணமாக சைக்கிளில் வரும் ஆட்சியாளரை பார்த்து பலர் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

    தண்ணீர் கால்வாய் பகுதி அருகே உள்ள ஷேக் ஜாயித் சாலை பாலத்தை அவர் கடந்து சென்றார். அப்போது அங்கு தொழுகைக்கான நேரம் வந்ததும் செயற்கை நீரூற்று பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு உடன் வந்த குழுவினருடன் சாலையோரம் மணல் பகுதியில் சாதாரண விரிப்புகளுடன் கூட்டு தொழுகையில் பங்கேற்றார். அது குடியிருப்பு என்பதால், அங்கு வசிப்பவர்களுக்கு இது மேலும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

    இந்த காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பதிவிட்டு இருந்தார்.

    மிக எளிமையுடன் சாதாரண மக்களை போல இயல்பாக நடந்துகொள்ளும் துபாய் ஆட்சியாளருக்கு பல தரப்பில் இருந்தும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
    Next Story
    ×