search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோப் விண்கலம்
    X
    ஹோப் விண்கலம்

    ஹோப் விண்கலம் நாளை நள்ளிரவு 1.58 மணிக்கு ஏவ திட்டம்

    அமீரகத்தின் ஹோப் விண்கலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 1.58 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக அமீரக விண்வெளி ஏஜென்சி தகவல் அளித்துள்ளது.
    அபுதாபி:

    ஜப்பான் டோக்கியோ நகரில் இருந்து மேற்கு பகுதியில் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது டனகஷிமா தீவு. இங்குள்ள விண்வெளி மையத்தில் இருந்து அமீரகத்தின் ஹோப் விண்கலம் செவ்வாய்கிரகத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் மோசமான வானிலை நிலவுவதால், ஹோப் விண்கலத்தை ஏவுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. இந்த விண்கலத்தின் எடை மட்டும் 1.3 டன் ஆகும். ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் எடுத்து செல்லப்பட்டு புவிவட்டப்பாதையில் தனியாக விடப்படும்.

    அதற்கு ஏற்றவாறு ராக்கெட் சரியான வேகம் மற்றும் கோணத்தில் செலுத்தப்படுவது அவசியமாகும். இதற்காக பூமியில் இருந்து ராக்கெட்டானது மணிக்கு 34 ஆயிரத்து 82 கி.மீ. செலுத்தப்பட வேண்டும். இதற்கு சரியான காலநிலை மற்றும் வானம் தெளிவாக இருக்க வேண்டும்.

    பூமியில் இருந்து ஹோப் விண்கலம் மொத்தம் 49 கோடியே 35 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செவ்வாய் கிரகம் நோக்கி பயணம் செய்ய உள்ளது. எனவே பாதுகாப்பான காலநிலையில் விண்கலத்தை செலுத்தினால் மட்டுமே சரியான இலக்கில் எளிதாக செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையை ஹோப் விண்கலம் சென்றடைய முடியும்.

    தற்போது ஆகஸ்டு 3-ந் தேதி வரை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்ற கோணத்தில் பூமி பயணித்து வரும். எனவே மேலும் தாமதமானாலும் அதற்குள் ஒரு தேதியில் விண்கலத்தை செலுத்தி விட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இதனை அடுத்து அமீரக விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஜப்பான் நாட்டின் டனகஷிமா விண்வெளி மையத்தில் ராக்கெட் ஏவுதளத்தில் உள்ள பொறியாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வருகிற 20 முதல் 22-ந் தேதிக்குள் விண்கலத்தை விண்ணில் ஏவ திட்டமிட்டு நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் மேலும் உறுதிப்படுத்தும் விதமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 1.58 மணிக்கு விண்ணில் ஏவ மறு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை நேற்று அமீரக விண்வெளி ஏஜென்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்த முறையும் சரியாக ஏவப்படுமா என்பது சாதகமான வானிலையை பொறுத்துதான் முடிவு தெரியும் என நம்பப்படுகிறது.
    Next Story
    ×