search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்கள் ஓட்டு போட்ட காட்சி
    X
    வாக்காளர்கள் ஓட்டு போட்ட காட்சி

    சுரிநாமில் பாராளுமன்றத் தேர்தல்- கொலை வழக்கில் தண்டனை பெற்ற அதிபருக்கு நெருக்கடி

    தென் அமெரிக்க நாடான சுரிநாமில் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கொலை வழக்கில் தண்டனை பெற்ற அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    பரமரிபோ:

    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தென் அமெரிக்க நாடான சுரிநாமில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வாக்காளர்கள் தனிமனித இடைவெளியுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சுரிநாம் அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் அதிபர் தேசி பூட்டர்ஸ் (வயது 74), மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஆனால் அரசியல் எதிரிகளை கொலை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற அதிபருக்கு இந்த தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்படும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன.

    சுரிநாம் அதிபர் பூட்டர்ஸ்

    மொத்தம் உள்ள 51 தொகுதிகளில் அதிபர் தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சிக்கு 14 முதல் 17 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்றும், எதிர்க்கட்சிகள் 12 முதல் 17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. பூட்டர்சின் ஆட்சிக்காலத்தில் நாடு கடும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆனால் சமீபத்தில் நாட்டின் கடலோர பகுதியில் பரவலான எண்ணெய் தாதுவளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், தேர்தல் தனக்கு சாதகமாக இருக்கும் என அதிபர் பூட்டர்ஸ் நம்பிக்கையில் இருக்கிறார்.

    அவரது கட்சி வெற்றி பெற்றாலும், கொலை வழக்கு மற்றும் போதை மருந்து கடத்தல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் மீண்டும் அதிபர் பதவி ஏற்பதில் சிக்கல் உள்ளது. அவரது மேல்முறையீட்டு வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×