search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்பைடர் மேன் உடை அணிந்த நபர்
    X
    ஸ்பைடர் மேன் உடை அணிந்த நபர்

    இந்தோனேசியாவில் குப்பைகளை சுத்தம் செய்யும் ‘ஸ்பைடர் மேன்’

    இந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்யும் நபர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
    ஜகார்ட்டா: 

    ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்க திரைப்படமான ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும்  வெற்றி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளின் மனதிலும் இடம் பிடித்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  இப்படத்தின் பல பாகங்கள் வெளிவந்தன. அதேசமயம் ஸ்பைடர் மேன் உடையும் உலக அளவில் பிரபலமானது. 

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்து குப்பைகளை சுத்தம் செய்யும் நபர் ஒருவர் சமூக  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். 

    இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான பரேபேரைச் சேர்ந்தவர் ரூடி ஹர்டானோ. இவர் அப்பகுதியில்  உள்ள பிரபல கஃபே ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இயற்கை ஆர்வலரான இவர் ஸ்பைடர் மேன் போல் உடையணிந்து  அப்பகுதியில் உள்ள பிளாஸ்டி குப்பைகளை சுத்தம் செய்து வருகிறார். இது அனைவரையும் சற்றே யோசிக்கவும், வியக்கவும் வைத்தது.  

    இது குறித்து ரூடி ஹர்டானோ செய்தியாளர்களிடையே கூறுகையில், ‘ உலகில் அதிக அளவில் குப்பைகளை உருவாக்குவதில்  இந்தோனேசியா 4 வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நமது கவனக்குறைவாலும், அலட்சியத்தினாலும்  வீதிகளிலும், கடற்கரைகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்படுகின்றன.  

    மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நானே வீதிகளில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்தேன். ஆனால் யாரும்  கண்டுகொள்ளவில்லை. என்னுடன் இணைந்து பொதுப்பணி ஆற்ற யாரும் முன்வரவுமில்லை. இதையடுத்து ஸ்பைடர் மேன்  உடையணிந்து குப்பைகளை சுத்தம் செய்ய துவங்கினேன். தற்போது பொதுமக்கள் இந்த விஷயத்தில் நல்ல ஈடுபாட்டுடன் உள்ளனர். 

    ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சமூகத்தினரிடையே ஈடுபாட்டை வளர்ப்பதற்கு எங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான முன்மாதிரி தேவை’  என தென்மேற்கு சுலவேசியில் உள்ள பரேபேரில் வசிக்கும் சைபுல் பஹ்ரி என்பவர் கூறினார்.
    Next Story
    ×