search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு
    X
    இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

    இந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு- பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

    இந்தோனேசியாவில் புத்தாண்டில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புத்தாண்டுக்குப் பிறகு ஜகார்த்தா மற்றும் அதனை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக, கடும் வெள்ளப்பெருக்குடன் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பலரைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

    இந்தோனேசியாவில் கனமழை

    தொடர் மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மீட்புக்குழுவினர் கூட செல்ல முடியாத அளவிற்கு, பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    மழை தொடர்பான விபத்துகளினால் ஏற்பட்டுள்ள ஆபத்துகளைத் தவிர, டைபாய்டு காய்ச்சல், காலரா மற்றும் வயிற்றுப்போக்கு என நீரினால் பரவும் அபாயகரமான நோய்களும் பரவும் சூழல் உள்ளது.

    2013க்குப் பிறகு ஜகார்த்தா பிராந்தியத்தில் மிக மோசமான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×