search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய அதிபரான ஜென்னி அனிஸ்
    X
    புதிய அதிபரான ஜென்னி அனிஸ்

    பொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்

    பொலிவியாவில் அரசியல் குழப்பத்திற்கு நடுவே அந்நாட்டு செனட்சபையின் துணை சபாநாயகர் ஜென்னி அனிஸ் புதிய அதிபராக தன்னைத்தானே அறிவித்துள்ளார்.
    சூக்ரே:

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி, அதிபர் இவோ மோரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

    வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் உறுதிப்படுத்தியதால் ராணுவ கிளர்ச்சியின் மூலம் பதவி மாற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதனால், ஜனநாயகத்தை பாதுகாத்து ராணுவ ஆட்சி ஏற்படாமல் இருக்க சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
     
    இப்படி தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவியதால் அதிபர் இவோ மோரல்சை பதவியில் இருந்து விலகுமாறு ராணுவம் நிர்பந்தித்தது. வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இவா மோரல்சும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    அவரை தொடர்ந்து ஆளும் கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க இவோ மோரல்ஸ் மெக்சிகோ நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 

    ஜென்னி அனிஸ்

    இந்நிலையில், அரசியல் குழப்பங்கள் சூழ்ந்துள்ள பொலிவியாவில், செனட் சபையின் துணை சபாநாயகரான எதிர்கட்சியை சார்ந்த ஜென்னி அனிஸ் இடைக்கால அதிபராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். 

    இக்கட்டான சூழ்நிலையில் இடைக்கால அதிபரை தேர்ந்தெடுக்க சட்டமன்ற ஒப்புதலோ அல்லது உறுப்பினர்களின் அனுமதியோ தேவையில்லை என அந்நாட்டு அரசியலமைப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள ஜென்னி அனிஸ்சுக்கு அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் கார்லஸ் மீசா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×