search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜக்மீத் சிங்
    X
    ஜக்மீத் சிங்

    கனடாவின் அடுத்த பிரதமர் யார்? - தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்

    கனடாவில் கூட்டணி அரசு அமையவுள்ள நிலையில் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங்குக்கு கிடைத்துள்ளது.
    ஒட்டாவா:

    338 உறுப்பினர்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிட்டார்.
     
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்பக்காலத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார்.

    ஆனால், தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை அவரின் செல்வாக்கை சரிய செய்தது.

    இந்த 2 விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தேர்தலில் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தன. இதனால் இரண்டாவது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஜஸ்டின் ட்ரூடோ


    இந்நிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியான நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வேட்பாளர்கள் 157 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

    அடுத்தபடியாக, எதிர்க்கட்சியான கனசர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்கள் 121 இடங்களிலும் பிளாக் கியூபெகோய்ஸ் கட்சி வேட்பாளர்கள் 32 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

    புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களையும் பசுமை கட்சி 3 இடங்களையும் பிடித்துள்ளது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    338 இடங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 170 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ(47) கையில் 157 எம்.பி.க்கள் உள்ளனர். அவருக்கு இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்தித்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங்(40) கையில்  24 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது கட்சி இந்த தேர்தலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் இவரிடம் இருக்கும் எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்க முடியும் என கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    அதற்கேற்ப, புதிய அரசு அமைய நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். மந்திரிசபையிலும் இடம்பெற மாட்டோம் என கியூபெகோய்ஸ் கட்சி தலைவர் வேஸ் பிராங்கோயிஸ் பிலான்செட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், 2015-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் பெற்றதைவிட இந்தமுறை குறைவான எம்.பி.க்களை பெற்றிருந்தாலும் மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் எழுப்புவதுடன் பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம் என செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.

    எனவே, கனடாவின் அடுத்த பிரதமர் யார்? என்று நிர்ணயிக்கும் வாய்ப்பும் அங்கு விரைவில் அமைய இருக்கும் கூட்டணி அரசில் இடம்பெறும் வாய்ப்பும் தற்போது இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ஜக்மீத் சிங்குக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
     
    Next Story
    ×