search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் பகுதி
    X
    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் பகுதி

    ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 30 பேர் பலி

    ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 30 பேர் பலியாகினர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    நிஜாமீனா:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாத் நாட்டின் மத்திய பகுதியில் லிபியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது டிபெஸ்டி பிராந்தியம். இங்கு தங்கம் மிகுதியாக கிடைப்பதால் பல்வேறு குழுக்கள் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுத்து வெளிசந்தைகளில் விற்றுவருகின்றனர்.

    குறிப்பாக அண்டை நாடான சூடானை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்ல எளிதில் பணம் பெறவும், கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரிட ஆயுதங்களை வாங்கவும் டிபெஸ்டி பிராந்தியத்தில் சட்டவிரோத சுரங்க பணியில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில், அங்குள்ள கொவ்ரி பவ்டி நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கத்தை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 30 பேரை பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×