search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தையுடன் எம்.பி சுலைக்கா ஹசன்
    X
    குழந்தையுடன் எம்.பி சுலைக்கா ஹசன்

    கென்யா பாராளுமன்றத்தில் குழந்தையுடன் வந்த பெண் எம்.பி. வெளியேற்றம்

    கென்யாவில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்டார்.
    நைரோபி:

    கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் சுலைக்கா ஹசன். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 5 மாத குழந்தையை மற்றவரிடம் ஒப்படைக்க முடியாமல் வேறு வழியின்றி பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளார்.

    கையில் குழந்தையுடன் பாராளுமன்றத்திற்கு வந்த ஹசனை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை மீறி உள்ளே நுழைந்த அவரை பாராளுமன்ற  துணை சபாநாயகர் கிறிஸ்டோபர் வெளியே செல்லுமாறு உத்தரவிட்டார்.

    குழந்தையை வெளியே யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு மீண்டும் வருமாறு கூறியுள்ளார். ஹசன், குழந்தையுடன் நாடாளுமன்றதிற்கு வந்ததற்கு அங்கிருந்த ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

    ஹசனின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் அவர் குழந்தையுடன் வெளியேறினார். இது குறித்து ஹசன் கூறுகையில், 'நான் என் குழந்தையை முடிந்த அளவு பாராளுமன்றதுக்கு அழைத்து வரக் கூடாது என்றுதான் முயற்சித்தேன். ஆனால், இன்று என்னால் தவிர்க்க முடியவில்லை.

    ஒருவேளை பாராளுமன்றத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள காப்பகம் இருந்தால், நான் குழந்தையை அங்கு விட்டிருப்பேன். இந்த நாட்டில் வேலைக்கு செல்லும் அனைத்துப் பெண்களும் இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள். அனைவராலும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேலை ஆட்களை வைத்துக் கொள்ள முடியாது.

    கையில் குழந்தையுடன் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் எம்.பி சுலைக்கா ஹசன்

    தனியார் நிறுவனங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன. நாட்டின் உயர்ந்த சட்ட அமைப்பான பாராளுமன்றம் இதுபோன்ற விஷயங்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும்.

    பெண்கள் அரசியலுக்கு அதிகம் வர வேண்டுமெனில், பாராளுமன்றம் அவர்களுக்கு குடும்ப உணர்வை தரக்கூடிய நல்ல சூழலை உருவாக்க வேண்டும்' என கூறியுள்ளார்.
    Next Story
    ×