search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரிகையாளர் வழக்கில் சம்பந்தப்பட்ட இரு காவல் அதிகாரிகள் நீக்கம்: அதிபர் புதின் அதிரடி
    X

    பத்திரிகையாளர் வழக்கில் சம்பந்தப்பட்ட இரு காவல் அதிகாரிகள் நீக்கம்: அதிபர் புதின் அதிரடி

    போதை மருந்து கடத்தியதாக புலனாய்வு பத்திரிகையாளரை ஆதாரமின்றி கைது செய்த இரு காவல்துறை அதிகாரிகளை அதிபர் புதின் உடனடியாக நீக்கியுள்ளார்.
    மாஸ்கோ:

    ரஷியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் இவான் கொலனோவ் போதை மருந்து கடத்தியதாக மாஸ்கோவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்த போதும் போலீசார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    இவான் கொலனோவுக்கு ஆதரவாக நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பேரணியாக மக்கள் திரண்டனர். இதையடுத்து அந்நாட்டின் மூன்று முக்கிய நாளிதழ்கள் அவரை விடுதலை செய்யுமாறு முதல் பக்கத்தில் தலையங்க கட்டுரைகளை வெளியிட்டன.

    இதையடுத்து, உள்துறை அமைச்சகம் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தது. மேலும், அந்த வழக்கை விசாரித்த இரு காவல் அதிகாரிகளையும் வேலை நீக்கம் செய்யுமாறு அதிபர் புதினை கேட்டுக்கொண்டது.

    இதையடுத்து, போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு தலைமை அதிகாரி யுரி டேவ்யாட்கின், மேற்கு மாஸ்கோ நகர காவல்துறை அதிகாரி ஆண்ட்ரே புக்கோவ் ஆகிய இருவரும் நீக்கப்படுவதாக ரஷிய அதிபரின் அலுவலகமான கிரெம்ளின் நேற்று அறிவித்தது.

    இதேபோல், 500-க்கும் மேற்பட்ட மக்கள் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டனர் என தனிப்பட்ட கண்காணிப்பு குழுவின் ஆதாரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 200 பேர் மட்டுமே காவலில் வைக்கப்பட்டனர் அதன்பின்பு எந்தவித வழக்குமின்றி விடுவிக்கப்பட்டனர் என போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.



    இவ்விகாரம் தொடர்பாக புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘‘இம்மாதிரியான காவல்துறையின் அடக்கு முறைக்கு எதிரான புகார்களை கருத்தில் கொண்டு தொடர்புடையவர்களை விசாரணைக்கு அழைப்போம். அப்பாவி மக்களின் மீது பொய்யான போதை மருந்து கடத்தல் வழக்குகளை தடுப்பதற்கான சட்டதிருத்த நடவடிக்கைகளை செயல்படுத்த அதிபர் புதின் முயன்று வருகிறார்’’ என்றார்.
    Next Story
    ×