search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனுவாட்டுவில் எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம்: பொதுமக்கள் வெளியேற்றம்
    X

    வனுவாட்டுவில் எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம்: பொதுமக்கள் வெளியேற்றம்

    வனுவாட்டுவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறும் நிலையில் சீற்றத்துடன் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    போர்ட் விலா:

    பசிபிக் கடலில் எரிமலைகளைக் கொண்ட தீவு நாடு வனுவாட்டு. இங்குள்ள எரிமலைகளில் பெரும்பாலானவை செயல்நிலையில் உள்ளன. அவ்வப்போது கரும்புகையை கக்குவதுடன், சில நேரங்களில் வெடித்து சிதறி மக்களை பீதிக்குள்ளாக்குகிறது.

    அவ்வகையில், ஆம்பீ தீவில் உள்ள மனாரோ வூய் என்ற எரிமலை கடந்த சில தினங்களாக கரும்புகை மற்றும் சாம்பலை கக்கியவண்ணம் சீற்றத்துடன் காணப்படுகிறது. பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ள இந்த எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து நெருப்புக் குழம்புகள் வெளிப்படலாம் என்பதால், பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தீவில் வசிக்கும் மக்களில் 6000 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு, அந்த தீவில் உள்ள வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது எரிமலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் தீவுப்பகுதியில் உள்ள 11000 மக்களும் வெளியேறி மற்ற தீவுகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர். வெள்ளிக்கிழமைக்குள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலான மக்கள் அருகில் உள்ள பெந்தேகோஸ்ட் தீவில் தங்க வைக்கப்படலாம் என தெரிகிறது.

    இதே எரிமலையானது கடைசியாக 2005ம் ஆண்டு வெடித்தது. அப்போது 5000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×