search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒபாமாவால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதர்களுக்கு ‘கல்தா’: டிரம்ப் நிர்வாகம் அதிரடி
    X

    ஒபாமாவால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு தூதர்களுக்கு ‘கல்தா’: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தூதர்களாக நியமிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு விரைவில் அதிபராக பதவியேற்கவுள்ள டொனால் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று வரும் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தனது தலைமையிலான ஆட்சியில் இடம்பெறவுள்ள மந்திரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.

    அவ்வகையில், அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத்துறை மந்திரியாக ஜேம்ஸ் மாட்டிஸ் என்பவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

    அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக ரெக்ஸ் டில்லர்சன் என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தேர்வு செய்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தூதர்களாக நியமிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக பதவி விலகுமாறு விரைவில் அதிபராக பதவியேற்கவுள்ள டொனால் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, உலக நாடுகளில் உள்ள அனைத்து தூதர்களுக்கும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க 7-ம் தேதி (இன்று) கடைசிநாள் என்றும் தெரியவருகிறது.

    டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் வரும் 20-ம் தேதி அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    இந்த தகவலை நியூசிலாந்து நாட்டுக்கான அமெரிக்க தலைமை தூதர் மார்க் கில்பர்ட் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 20-ம் தேதி நான் நியூசிலாந்தில் இருந்து புறப்பட்டு விடுவேன் என தனது டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தற்போதைய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படும்போது, முந்தைய அரசால் முக்கியமான உயர் பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பதவி விலகுவது வழக்கமான நடைமுறைதான் என்று கூறியுள்ளார்.

    எனினும், வெளிநாடுகளில் உள்ள தூதர்கள் பிள்ளைகளின் கல்வி போன்ற முக்கிய காரணங்களுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அந்த நாடுகளில் குறுகிய காலம்வரை சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதுண்டு.

    விரைவில் பொறுப்பேற்கவுள்ள புதிய நிர்வாகம் இந்த விதிவிலக்கை பின்பற்றுமா? என்பது தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×