search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு அம்பலம்: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல்
    X

    அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு அம்பலம்: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெறும் வகையில் அந்நாட்டின் மீது ரஷியா சைபர் தாக்குதல் நடத்தியதற்கு போதுமான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டனை அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடித்து, டொனால்ட் டிரம்பை வெற்றிபெறச் செய்ய அந்நாட்டு பிரதான கட்சிகளின் இணையதளங்களுக்குள் ரஷியா ஊடுருவி, சில ரகசிய தகவல்களை களவாடியதாக ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    குறிப்பாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் நேரடி உத்தரவின் பேரில் இந்த சைபர் குற்றத்தில் ரஷிய ஊடுருவலாளர்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு நேரடியாகவே தெரிவித்தது. இதற்கு, ரஷிய அரசும், விளாடிமிர் புதினும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையில், இந்த ஊடுருவல் தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உளவுத்துறையினர் சில முக்கிய தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து வந்தனர்.

    இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, டொனால்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய ரஷியா முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க உளவுத்துறையினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக, அமெரிக்க உள்துறையின் சார்பில் நேற்று 25 பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில் ஒரு பிரிவினர் தீவிரமாக செயலாற்றியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

    மேலும், ஹிலாரி கிளிண்டன் வேட்பாளர் ஆவதற்கு ஆதரவு திரட்டிவந்தபோது அவரது நன்மதிப்பை குறைப்பதற்கான முயற்சிகளும், அவர் வேட்பாளரான பின்னர் ஹிலாரியை வீழ்த்தி, டொனால்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்யவும், அமெரிக்க ஜனநாயகத்திலும், தேர்தல் நடவடிக்கையிலும் தலையீடு செய்ய ரஷியா முயன்றதற்கான போதுமான ஆதாரம் கிடைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அனுபவத்தை வைத்துகொண்டு, எதிர்காலத்தில் உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் நடைபெறும் ஜனநாயக ரீதியான தேர்தல்களிலும் ரஷியா தலையீடு செய்ய முயற்சிக்கலாம் என கருதுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
    Next Story
    ×