என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார் மகேஷ் நாராயணன்
    • மகேஷ் நாராயணன் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் தற்காலிகமாக MMMN என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆவார்  மகேஷ் நாராயணன். இவர் இயக்கத்தில் வெளிவந்த டேக் ஆஃப், மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப்பெற்றது. ஃபகத் ஃபாசில் நடித்த மாலிக் திரைப்படம் மலையாள சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் என கூறலாம்.

    மகேஷ் நாராயணன் அடுத்ததாக மம்மூட்டி நடிப்பில் தற்காலிகமாக MMMN என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இலங்கை, துபாய், கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இப்படத்தில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் ஃபகத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன், தர்ஷனா ராஜேந்திரன், ரேவதி, சரின் ஷிஹாப், ராஜிவ் மேனன், ரெஞி பானிக்கர், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.

    இப்படத்தை ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். நயன் தாரா மற்றும் மம்மூட்டி இதற்கு முன் தஸ்கரா வீரன், ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் புதிய நியமம் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.
    • கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

    தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞரால் பேணிப் பாதுகாக்கப்பட்டு, அவர்தம் உடன்பிறப்புகளால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. வி.சி.சந்திரகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.

    நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டதால், நிரந்தர ஓய்வெடுக்க அலைகள் தாலாட்டும் வங்கக் கடற்கரைக்கு நம் தங்கத் தலைவர் சென்றபிறகு, அவருடைய அன்பு உடன்பிறப்புகளான நீங்கள், கழகத் தலைவர் என்ற பொறுப்பை என் தோளில் சுமத்தினீர்கள்.

    கழகத்தைத் தோளிலும், தலைவர் கலைஞரையும் - அவருடைய உடன்பிறப்புகளான உங்களையும் நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது. அந்த வரிசையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதில் உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உறுதியாக இருந்தேன்.

    இடைத்தேர்தல் பணிகளைக் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிப் பிரமுகர்களும் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். பிப்ரவரி 6, 7 தேதிகளில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளுக்காகவும், கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் நெல்லை மாவட்டத்திற்கு உங்களில் ஒருவனான நான் மேற்கொண்ட பயணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது.

    ஒவ்வொரு மாவட்டமாக நடைபெறும் ஆய்வுப் பணிகள் மற்றும் கழக நிர்வாகிகளுடனான சந்திப்புக்காக அந்தந்த மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஒன்றையொன்று விஞ்சி நிற்கும் வகையிலே மக்களின் பேரன்பும், தாய்மார்களின் பாசமும், உடன்பிறப்புகளின் கொள்கை உணர்வும் பொங்கிப் பெருகுவதைக் காண்கிறேன். அதில் நெல்லைப் பயணம் மிகுந்த உற்சாகத்தை எனக்கு அளித்துள்ளது.

    வழிநெடுகத் திரண்டிருந்த மக்கள், குறிப்பாகப் பெண்கள் சகோதரப் பாசத்துடன் அன்பைப் பொழிந்து அகம் மகிழச் செய்தனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் சீர் செய்கிற அண்ணனாக, விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தங்கள் வேலை சார்ந்த பயணத்தை எளிதாக்கிய சகோதரனாக என் மீது அவர்கள் அன்பு காட்டினார்கள். மாணவியர் பலரும் வாழ்த்து முழக்கங்களை எழுப்பியதுடன், செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகக் கழக அரசு இருப்பதால், மாணவிகள் பலரும் திட்டங்களின் பெயர்களைச் சொல்லி, "இவையெல்லாம் எங்களுக்கு ரொம்பவும் பலன் தருகிறது" என்று தெரிவித்ததைக் கேட்டதைவிட, உங்களில் ஒருவனான எனக்கு வேறு என்ன பேறு வேண்டும்? "அப்பா.. அப்பா.." என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம்தான் கழக ஆட்சியின் ஒரே இலட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன்.

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டாடா பவர் குழுமத்தின் சேலார் நிறுவனத்தைத் தொடங்கி வைத்ததன் மூலம், சூரிய ஒளி மின்கல உற்பத்தித் துறையில் தமிழ்நாடு புதிய பாய்ச்சலை மேற்கொள்ளவிருப்பதுடன், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 4000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அமையும் நல்ல சூழலும் உருவாகியுள்ளது. அரசு நலத்திட்ட விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் 1304.66 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 23 பணிகளைத் தொடங்கி வைத்து, 309.05 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி நெல்லை மக்களின் நலன் காப்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருப்பதைச் சொல்லால் மட்டுமின்றி செயலாலும் மெய்ப்பித்துள்ளேன், உங்களில் ஒருவனான நான்.

    மாவட்டக் கழகத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சார்ந்தவர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் என நெல்லை மாவட்ட உடன்பிறப்புகளைச் சந்தித்து அவர்களின் கழகப் பணிகளை ஆய்வு செய்தபோது, ஆட்சியின் அடித்தளமாக இருக்கின்ற கட்சியின் செயல்வீரர்களில் ஆற்றல் மிக்கவர்களை அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள முடிந்ததது. ஆற்றல்மிக்கவர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட்டால் நெல்லை மாவட்டம் என்றும் கழகக் கோட்டையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு அறிவுறுத்தும் வாய்ப்பும் கிடைத்தது.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணத்தில் தனக்கேயுரிய ஆற்றலுடன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அவர்கள். சொந்த மாவட்டமான திருச்சியாக இருந்தாலும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள எந்த மாவட்டமாக இருந்தாலும் எதையும் நேர் செய்துவிடக்கூடியவர் நேரு என்பதை நெல்லை மாவட்ட விழா மேடையிலேயே தெரிவித்தேன். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் திரு.டி.பி.எம்.மைதீன்கான் அவர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகள் சிறப்புடன் நிறைவேற முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

    நெல்லை மாவட்டச் சுற்றுப்பயணம் என்பது இருட்டுக்கடை அல்வாவின் இனிய சுவையாக நெஞ்சில் இனித்த வேளையில்தான், பிப்ரவரி 8ஆம் நாள் காலை முதலே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது. முதல் சுற்றில் தொடங்கி வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எல்லாச் சுற்றுகளிலும் கழக வேட்பாளர் சந்திரகுமார் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டே இருந்தார். இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.

    மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் மற்ற நிர்வாகிகளும் தோழமைக் கட்சியினருடன் இணைந்து நின்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், அதனால் தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அடைந்துள்ள பயன்களையும் எடுத்துரைத்து வாக்குகளைச் சேகரித்தார்கள். மக்கள் வைத்த கோரிக்கைகளைச் செவிமடுத்தார்கள். உங்களில் ஒருவனான நான் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு, கழக வேட்பாளரை ஆதரிக்குமாறு வாக்களார்களுக்குக் கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன்.

    மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்திற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்து, தி.மு.கழக வேட்பாளரை 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிர்த்து நின்ற மற்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்திருக்கிறார்கள்.

    இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கழக நிர்வாகிகள் – செயல்வீரர்கள் - உடன்பிறப்புகள் அனைவருக்கும், தோழமைக் கட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியினையும், கழகத்தின் வெற்றி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், 'வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன். 'இருநூறு இலக்கு' என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.

    அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, நேற்றைய நாளில் (பிப்ரவரி 8) மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் கெடுக்கும் வகையிலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் வஞ்சகப் போக்கைத் தொடர்ந்து மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினேன். உங்களில் ஒருவனான நான் என்ன உணர்வுடன் ஆவடிப் பொதுக்கூட்டத்தில் பேசினேனோ, அதே உணர்வுடன் தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழகத்தினர் பேசிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

    ஒன்றிய பா.ஜ.க அரசிடம் நிதியும் இல்லை, நீதியும் இல்லை என்று நெல்லையில் நடந்த விழாவில் நான் சுட்டிக்காட்டியதுபோலவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் புள்ளிவிவரங்களுடன் நம்முடைய கழகத்தினர் உரையாற்றியிருக்கிறார்கள். இது வெறும் கண்டனக் கூட்டமாக முடிந்துவிடாமல், நல்லாட்சி தரும் திராவிட மாடல் அரசை முடக்குவதாக நினைத்து தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதையும், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றிபெற முடியாது என்பதால் அமைதியைக் கெடுக்கும் வேலைகளைத் தூண்டி விடுவதையும் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்து, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களின் நல்லிணக்க நிலமாக தமிழ்நாடு என்றும் தொடரவேண்டும் என்கிற உறுதியை ஏற்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

    வஞ்சிப்பது பா.ஜ.க. அரசின் பழக்கம். அதனையும் எதிர்கொண்டு, தமிழ்நாட்டை வாழவைப்பது தி.மு.கழகத்தின் வழக்கம் என்பதை ஆவடிப் பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் உரையாற்றியபடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான நம்முடைய பணிகள் தொடரும். மாநில உரிமைக்கான துணிச்சலான குரல் தொடர்ந்து ஒலிக்கும். சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தி.மு.கழகம் முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.

    இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி.மு.கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.
    • ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது.

    ராஜஸ்தானில் மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் கொடுத்த தகவல் ரெயில்வே ஆட்சேர்ப்பில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மணீஷ் மீனா என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு ரெயில்வேயில் பாயின்ஸ் - உமன் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.

    அதாவது, தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து மோசடியாக வேலை வாங்கி தர ரெயில்வே காவலரான ராஜேந்திரா என்ற முகவருக்கு ரூ.15 கோடி கொடுத்துள்ளார். இந்த பணத்தை தனது விவசாய நிலத்தை அடைமானம் வைத்துத் திரட்டியுள்ளார்.

    ஆனால் வேலைக்குச் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.

    ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மனீஷ், பணம் கொடுத்த விவகாரத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மேற்கு மத்திய ரெயில்வேயின் விஜிலென்ஸ் துறை விசாரணையைத் தொடங்கியது.

    இந்த விவகாரம் இறுதியில் சிபிஐயிடம் சென்றது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மனீஷின் மனைவி ஆஷா உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    போலி தேர்வரை பயன்படுத்தி வேலை பெற்ற ஒரே நபர் ஆஷா மட்டுமல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெயில்வேயில் ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலி இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கவுள்ளது.

    • செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
    • உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.

    தமிழகத்திற்கான நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகம் தனது பெருமையைத் தொலைத்து, எண் கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும் (தமிழ்) கடைசி இடத்தில் உள்ளது.

    கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழகக் குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

    இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்தே PMSHRI உட்பட சமக்ர சிக்ஷாவின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை நீங்கள் நிறைவேற்றினீர்களா இல்லையா, மு.க.ஸ்டாலின் அவர்களே?

    செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

    சமக்ர சிக்ஷாவின் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கையின்படி, 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இன்னும் 2024-25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு நிதி விடுவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யைப் பரப்ப உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண் பயணியும், பெண் காவலர் ரூபாலியும் நடைமேடையில் விழுந்தனர்.
    • ரெயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு காப்பாற்றினர்.

    மும்பை:

    மும்பையில் கிழக்கு புறநகர் பகுதியில் சுனாபட்டி ரெயில் நிலையம் உள்ளது. சம்பவத்தன்று இந்த ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் ரெயிலில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார்.

    அப்போது அவரது ஆடை மற்றொரு பயணியின் பையில் சிக்கிக் கொண்டது. மேலும் ரெயில் வேகம் எடுத்த போது அந்த பெண் சமநிலை இழந்து நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டார்.

    இதை அங்கிருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் ரூபாலி ஓடிச்சென்று, ஓடும் ரெயிலில் இழுத்து செல்லப்பட்ட பெண் பயணி ரெயில் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில் அந்த பெண்ணை இழுத்தார். அப்போது பெண் பயணியும், பெண் காவலர் ரூபாலியும் நடைமேடையில் விழுந்தனர். உடனே அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் இருவரையும் மீட்டு காப்பாற்றினர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் இருவருக்கும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பெண் காவலர் ரூபாலி சரியான நேரத்தில் தைரியமாக செயல்பட்டு, ரெயிலில் சிக்கிய பெண் பயணியை காப்பாற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இதைப்பார்த்த பலரும் பெண் காவலரின் தைரியத்தையும், துணிச்சலான செயலையும் பாராட்டி பதிவிட்டனர்.


    • கேரள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
    • இந்தாண்டு தற்பொழுது வரை மலையாள திரையுலகில் மட்டும் 28 படங்கள் வெளியாகியுள்ளது

    கேரள தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கமும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதன்படி வரிகளும் நடிகர்களைன் சம்பளங்கள் அதிகமாக இருப்பதால் மலையாள சினிமாவின் படப்பிடிப்பு பணிகளை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இந்த விதிமுறை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இந்தாண்டு தற்பொழுது வரை மலையாள திரையுலகில் மட்டும் 28 படங்கள் வெளியாகியுள்ளது ஆனால் அதில் ரேகாசித்திரம் திரைப்படம் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஆவேஷம், பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை தவிர 176 திரைப்படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் மலையாள திரையுலகிற்கு 101 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டது.

    ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் செலவு தற்பொழுது அதிகமாக இருக்கிறது. 60 சதவீத தயாரிப்பு செலவுகள் படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளமாக மட்டுமே செல்கிறது. 50 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 150 நாட்கள் வரை நீடிக்கப்படுகிறது. இதில் 30 சதவீத வரிகள் வேறு. இச்சுழ்நிலையில் திரையரங்கிள் வெளியாகும் திரைப்படங்கள் வெறும் 10 சதவீத அதன் தயாரிப்பு செலவுகளை வசூலிக்கிறது. இதனால் இந்த முடிவு எடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி. சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது
    • 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 75 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது .

    இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒயிட்வாஸ் செய்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

    156 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
    • பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    இந்தியாவின் ஐடி தலைநகராக விளங்கும் பெங்களூரு சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. ஐடி நிறுவனங்கள் நிறைந்த பெங்களுரில் தமிழ்நாடு உள்ளிட்ட பலவேறு மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வேலைக்கு தாமதமாக செல்லக்கூடாது என இளைஞர் ஒருவர் எடுத்த வினோத முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஓலா மற்றும் உபர் டாக்ஸிகள் கிடைக்காததால் பொருட்களை டெலிவரி செய்யும் போர்ட்டர் செயலி மூலம் தன்னைத்தானே அந்த இளைஞர் தனது அலுவலகத்துக்கு டெலிவரி செய்து கொண்டார். பதிக் குகரே என்ற அந்த இளைஞர் தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.

    அவர் தனது பதிவில், "ஓலா உபர் இல்லாததால் இன்று இப்படித்தான் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் போர்ட்டர் டெலிவரி ஏஜென்ட்டுடன் பைக்கில் பயணிக்கும் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது பதிவு 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. பலரும் அவரின் புதுமையான யோசனையை பாராட்டி வருகின்றனர்.

    வடிவேலு காமெடி ஒன்றில் டிக்கெட் செலவை மிச்சப்படுத்த கணவன் தனது குடும்பத்தை பார்சலில் அனுப்பி வைப்பார். அதுபோல இந்த இளைஞர் தன்னைத் தானே டெலிவரி செய்து கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. 

    • தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்.
    • தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ₹2,152 கோடி நிதி, வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய அரசின் இந்த முடிவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகாத மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஆளும் பாசிச பா.ஜ.க அரசு.

    தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட இதுவரை நிதி ஒதுக்கவில்லை.

    தற்போது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    ஆளும் பா.ஜ.க. அரசின் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் வரி செலுத்துவதற்கேற்ப ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை என்று கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார். 

    • அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் வெளியானது.
    • தற்பொழுது அசோக் செல்வன் 23 - வது படத்தின் பூஜை விழா நடைப்பெற்றுள்ளது.

    அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு எமக்கு தொழில் ரொமான்ஸ் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது அசோக் செல்வன் 23 - வது படத்தின் பூஜை விழா நடைப்பெற்றுள்ளது.

    இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். படத்தின் கதாநாயகியாக ஸ்டார் திரைப்பட கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தை அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து ஹாப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர்.
    • பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டம்.

    திருப்பரங்குன்றத்தை மையபடுத்தி, மதவெறித் திட்டத்தை பாஜக, சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

    இதுகுறித்து மதச்சார்பற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டுகளில் ஒன்று தமிழ்நாடாகும். தமிழ்நாட்டின் ஆன்மீகத் தலங்களான பழனியாண்டவர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட இந்துமத திருத்தலங்கள், அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா போன்ற அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் மத வேறுபாடு இன்றி பொதுமக்கள் வழிபடுவதே இதற்கு சான்று.

    இத்தகைய தமிழ்நாட்டில் மத வேறுபாடுகளை விதைத்து மக்களைப் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு சில அமைப்புகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

    மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை பாஜகவும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் திட்டமிட்டு செய்து வருவது வழக்கமாகி இருக்கிறது. பாபர் மசூதி, அஜ்மீர் தர்கா என வரிசையாக இத்தகைய பிளவுவாத அரசியலைச் செய்து வருகின்றனர். அவர்களின் அடுத்த குறி தமிழ்நாடாக இருக்கிறது.

    தமிழ்நாட்டிலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறு சிறு வலது சாரி அமைப்புகள் பாஜகவின் ஆதரவில் முளைவிட்டு வளரத் தொடங்கியிருந்தன. கடந்த மூன்றாண்டுகளாக அடங்கியிருந்தவர்கள் தேர்தலை கவனத்தில் கொண்டு தங்களின் பிளவுவாத அரசியலை தொடங்கியிருக்கின்றனர். பாரதிய ஜனதாவின் தேர்தல் அறுவடைக்காக தமிழ்நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்திட திட்டமிட்டு சதிகளை அரங்கேற்றி வருகின்றன.

    பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசை நடத்துகிற வாய்ப்பு கிடைத்தும் கூட பாஜக தமிழ்நாட்டின் நலன்களுக்கான நடவடிக்கை எதையும் சொல்லிக் கொள்ளும்படியாக செய்திடவில்லை என்பதை தமிழ்நாடு அறியும். 2025 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் கூட தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டிற்கோ, கோவை - மதுரை புதிய மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்போ, தமிழகத்திற்கு உரிய நிதி பங்கீடோ, பேரிடர் கால பாதிப்பு நிதியோ அல்லது மாநிலத்தின் தொழில், வர்த்தக, வேளாண் வளர்ச்சிக்கோ ஒரு சிறு துரும்பையும் கூட கிள்ளிப் போடவில்லை இந்த பா.ஜ.க.

    சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெள்ளப் பெருக்கினாலும், பெரும் புயல்களாலும் தாக்கப்பட்டு, மக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொண்ட போதும் தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டின் மீது வஞ்சனையோடு செயல்படுகிறது பா.ஜ.க. எனவே, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து இவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தற்போது தனது அடுத்தகட்ட மதவெறித் திட்டத்தை பாஜகவும், அதன் சங்பரிவார அமைப்புகளும் அரங்கேற்றியுள்ளன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைஅடிவாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலும், மலையின் தென்புறம் காசி விஸ்வநாதர் கோவிலும், கீழ்புறம் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன.

    2000 ஆண்டுகளுக்கு முன்பாக சமணம் இருந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்க்கா அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக மக்கள் எவ்வித பிரச்சனையுமின்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

    நேர்மையும், அறவுணர்வும் கொண்ட நமது முன்னோர்கள் காலத்தில் இருந்தே அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பூசைகளும், சிக்கந்தர் தர்காவில் அவ்வப்போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளை காணிக்கையாக செலுத்தி அன்னதானம் (கந்தூரி) செய்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் தர்க்காவிற்கு சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனர்.

    மேற்கண்ட வழிபாட்டு முறைகள் குறித்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் இருக்கிற சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொய் செய்திகளைப் பரப்பி பிப்ரவரி 4ம் தேதி திருப்பரங்குன்றத்தில் கூடுமாறு அழைப்பு விடுத்தது. சமூக வலைதளங்களில் மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து பதற்றத்தை உருவாக்க முனைந்துள்ள மதவெறி சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டன.

    அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் இவ்வமைப்புகளின் பொய்யையும், புரட்டையும் நம்பவில்லை; முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். எனினும், அங்கு கூடிய மதவெறி அமைப்பினர் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் வெறியூட்டக்கூடிய விதத்திலும் பேசி தங்களது பிளவுவாதத் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

    மேலும், தமிழ்நாட்டின் பொது அமைதியையும், ஒற்றுமையையும் உயர்த்திப்பிடித்த திருப்பரங்குன்றம் உள்ளிட்டு மதுரை மக்களுக்கும், மதச்சார்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மிகப்பழமையான நகரமான மதுரை எப்போதும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதுரை மக்கள் அனைத்து மத நம்பிக்கைகளை மதித்தும், அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர்.

    மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மக்கள் ஒற்றுமையையும், அனைத்து பகுதி மக்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்க திருப்பரங்குன்றத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இப்போதுபோல் எப்போதும் உறுதிகாட்ட வேண்டும் எனவும், தமிழ்நாடு இத்தகைய மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணித்திட வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

    அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியுடன் செயல்பட்டு அனைத்து மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறோம்

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×