என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.
- துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மசூர் பருப்பு என கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தற்போதைய கொள்கையின்படி, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சைப் பட்டாணியை இறக்குமதி செய்ய முடியும், குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவுக்கு ரூ.200 (MIP) ஆகும். மஞ்சள் பயறு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதை மசூர் பருப்பாக தவறாக அறிவித்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
- நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து நேற்று இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வரில் இருந்து அகமதாபாத் புறப்பட்டனர்.
இதற்காக இந்திய அணி வீரர்கள் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலி பெண் ஒருவரை கட்டிப்பிடித்து பேசினார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வரும் ரசிகர்களில் ஒருசாரார் அப்பெண் கோலியின் நெருங்கிய உறவினர் என்றும் மற்றொரு சாரார் அப்பெண் "அதிர்ஷ்டசாலி" ரசிகை என்றும் கூறி வருகின்றனர்.
- வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
- அ.தி.மு.க. பொதுக்குழு குறித்த மனுக்களையும் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அதுதொடர்பான மனுக்களை விசாரிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி ஓ.பி.ரவீந்திரநாத், வ.புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன். எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள் முருகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.ஆர்யமா சுந்தரம், 'அ.தி.மு.க.வின் உள்கட்சி விதிகளில் திருத்தம் செய்தது, அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்தது உள்ளிட்ட உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையீடு செய்ய எந்த அதிகாரமும் இல்லை. சிவில் கோர்ட்டுக்கு மட்டுமே அந்த அதிகாரங்கள் உள்ளன.
மேலும் தற்போது தடையை நீக்கக்கோரி மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட கிடையாது. அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். கட்சியில் எந்த பிளவும் கிடையாது.
எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் ஏற்கனவே என்ன ஆதரவு இருந்ததோ அதே ஆதரவு அப்படியே உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை முடக்கினால் அது கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். எனவே தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன், 'ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் இறுதி முடிவுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்படும். தற்போது இந்த மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை' என்று வாதிட்டார்.
பிற மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி வாதிட்டனர்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் மீது இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுறுத்தினார்கள்.
அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது. அ.தி.மு.க. உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.
- வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க உள்ளேன்.
- சினிமா சேவைகளுக்காக மட்டும் கட்சி தலைவர்களை சந்திப்பேன்.
திருப்பதி:
தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு ஆந்திரா தெலுங்கானாவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி பிரஜ்ஜா ராஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய நடிகர் சிரஞ்சீவியால் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை.
இதனால் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று பிரம்மானந்தம் என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் வெளியீட்டு விழாவும் முக்கியம். அப்போதுதான் அந்த திரைப்படம் ரசிகர்களை விரைவாக சென்றடையும்.
நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க உள்ளேன். மீண்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன். சினிமா சேவைகளுக்காக மட்டும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- அவரது உடல் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் தகனம் செய்யப்படும்.
அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது (85).
லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையின்போது தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உயிரிழந்ததை அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
மூளை பக்கவாதம் காரணமாக ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அவர் இன்று காலமானார். அவரது உடல் நாளை அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் தகனம் செய்யப்படும். தற்போது அவரது உடல் லக்னோவிலிருந்து புனித நகரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று கூறினார்.
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மறைவு ஆன்மிக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது.
- சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை வேளையில் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். சென்னையில் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் நிலவிய பனிமூட்டம் காரணமாக 10 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என 14 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்தனர். இதனிடையே சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
- சென்னையில் மட்டும் 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது.
- இங்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.08.2024 அன்று சுதந்திர தினவிழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்" என்று அறிவித்தார்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மக்கள் மருந்தகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்காக 2000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தது. அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதில் இதுவரை 840 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு கடைகளை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்டுறவுத்துறைக்கு வந்துள்ள மற்ற மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தொடர்ந்து சென்னையில் வரும் 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
இதில் சென்னையில் மட்டும் கொளத்தூர் ,தி.நகர் ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. இங்கு குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும்.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-பார்ம், டி-பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
- சத்தீஸ்கரில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு அவருடைய மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் அவருடைய மனைவி கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜக்தல்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.
இது குறித்து கணவன் சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் 2013-ம் ஆண்டு ஐ.பி.சி. பிரிவு 375-ல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவரின் செயலை குற்றமாக கருத முடியாது. மனைவி குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் போது கணவன் செய்யும் எந்த ஒரு பாலியல் செயலும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. சம்மதம் இனி முக்கியமில்லை.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமில்லை.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
- இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
- சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது அருள்நிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருள்நிதி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடை கூட்டியும் அருள்நிதி தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது.
கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் இப்படத்தின் வில்லனாக ஹரீஷ்பேரடி நடிக்கிறார். இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது.
- 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி , மேற்கு வங்காவரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
பறவை காய்ச்சல் காரணமாக கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் பல லட்சம் கோழிகள் தினமும் இறந்து வருகின்றன.
இதனால் ஆந்திராவில் பொதுமக்களிடையே பறவைக் காய்ச்சல் பீதி நிலவி வருகிறது.
ராஜ மகேந்திரவரம், மேற்கு கோதாவரி, மாவட்டம், தனுகு,வேல்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழிப்பண்ணைகள் வைக்கவும், கோழிக்கறி மற்றும் முட்டை விற்பனை செய்யும் தடை விதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கோழி மற்றும் முட்டைகளை பயன்படுத்தாமல் எச்சரிக்கையாகவும், சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
பறவைக் காய்ச்சலை தடுப்பதற்காக தமிழ்நாடு,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கோழி குஞ்சுகள் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வருகின்றனர். திருப்பூரில் இருந்து தெலுங்கானா மாநிலம், காமி ரெட்டிக்கு 2 லாரிகளில் 30 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் கொண்டு செல்லப்பட்டன.
அந்த லாரிகளை புல்லூர் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 60 மணி நேரம் லாரிகள் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இன்று காலை மீண்டும் லாரிகளை திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் இருந்து இதுவரை 7 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட கோழி குஞ்சுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரான்ஸ் நாட்டில் சர்வதேச ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்றது.
- ஏஐ மாநாட்டில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்ஸ்-இல் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.
அந்த வகையில், பாரிசில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவிற்கு கொண்டு வரும் "நம்பமுடியாத வாய்ப்புகளை" எடுத்துரைத்தார்.
மேலும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக கூகுள் மற்றும் இந்தியா இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து பேசிய அவர், "AI உச்சி மாநாட்டிற்காக பாரிசில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பாரிஸில் நடந்த இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார், அப்போது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த கருத்தரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
- நேற்று சவரன் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.920 உயர்ந்தது. நேற்று சவரன் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஏழு நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-02-2025- ஒரு கிராம் ரூ.107
10-02-2025- ஒரு கிராம் ரூ.107
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
07-02-2025- ஒரு கிராம் ரூ.107






