என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிரான்ஸ் நாட்டில் சர்வதேச ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்றது.
    • ஏஐ மாநாட்டில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்ஸ்-இல் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களை சந்தித்து பேசினார்.

    அந்த வகையில், பாரிசில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) இந்தியாவிற்கு கொண்டு வரும் "நம்பமுடியாத வாய்ப்புகளை" எடுத்துரைத்தார்.

    மேலும், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக கூகுள் மற்றும் இந்தியா இடையே நெருக்கமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் அவர் குறிப்பிட்டார்.

    இது குறித்து பேசிய அவர், "AI உச்சி மாநாட்டிற்காக பாரிசில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. AI இந்தியாவிற்கு கொண்டு வரும் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் நாம் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் கூறினார்.

    முன்னதாக, பாரிஸில் நடந்த இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார், அப்போது, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த கருத்தரங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

    • நேற்று சவரன் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.920 உயர்ந்தது. நேற்று சவரன் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையாகிறது.



    கடந்த ஏழு நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480

    10-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840

    09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560

    08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560

    07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-02-2025- ஒரு கிராம் ரூ.107

    10-02-2025- ஒரு கிராம் ரூ.107

    09-02-2025- ஒரு கிராம் ரூ.107

    08-02-2025- ஒரு கிராம் ரூ.107

    07-02-2025- ஒரு கிராம் ரூ.107

    • திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது.
    • அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.

    உத்தரபிரதேச மாநிலம் மொராபாத்தில் தாகுர்த்வாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரித்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் (ம) அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. உணவுடன் கேரட் அல்வாவும் பரிமாறப்பட்டது.

    இரவு உணவு சாப்பிட்ட பிறகு, சில விருந்தினர்கள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விருந்தில் சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 150 பேருக்கு வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரின் நிலையும் நார்மலாக உள்ளதாக என்று தாகுர்த்வாரா தொகுதியின் முன்னாள் தலைவர் கூறினார்.

    இனிப்பு உணவை தயாரிக்கும்போது சேர்க்கப்பட்ட கோவா (மாவா) என்ற மூலப்பொருளில் கலப்படம் செய்யப்பட்டதால் அதனை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது.
    • டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

    அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் வெளியான டிரெய்லர் தற்பொழுது வரை 11 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 'டிராகன்' திரைப்படம் வருகிற 21-ந்தேதி வெளியாகிறது.

    இந்த நிலையில், 'டிராகன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரன்-டைம் 2 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

    பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது. பி.சி.சி.ஐ. வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.

    கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.

    இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுகிறார். மேலும், இந்திய அணியில் வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     


    சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி.

    பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய் செல்வார்கள்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.
    • வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறை முகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந்தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    அதன்பின்னர், 'சுபம்' என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.

    இந்த கப்பல் வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, இனி செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று இயக்கப்பட இருந்த கப்பல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிக்கப்படும் என கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    இதன் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு கப்பலில் பயணிக்கலாம் என உற்சாகத்துடன் காத்திருந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உலக அளவில் ரத்தசோகை பிரச்சனை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ரத்தசோகை நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக மகப்பேறு காலகட்டத்தில் பெண்களுக்கு ரத்தசோகை குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. பருவம் அடைதல், மாதவிடாய், பிரசவ நேரங்களில் பெண்கள் உடலில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறுகிறது. இதனால் பெண்கள் இயல்பாகவே ரத்தசோகைக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மட்டுமே ரத்தசோகை நோய் ஏற்படுகிறது.

    நாடு முழுவதும் மத்திய அரசு 15-49 வயது பெண்களிடம் ரத்தசோகை பாதிப்பு தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, இந்தியாவில் அதிகப்படியாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 92.8 சதவீதம் பேரும், மேற்கு வங்காளத்தில் 71.4 சதவீத பேரும், திரிபுராவில் 67.2 பேரும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் 65.9 சதவீத பேரும், ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 25.8 சதவீத பேரும், நாகாலாந்தில் 28.9 சதவீத பேரும், மணிப்பூரில் 29.4 சதவீத பேரும், மிசோரம் மாநிலத்தில் 34.8 பேருக்கும் ரத்தசோகை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை 53.4 சதவீத பேரும், புதுச்சேரியில் 55.1 சதவீத பேரும் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத்துறை 2019-2021 காலகட்டத்தில் எடுத்துள்ளது. இதன்படி, இந்தியாவில் அதிக ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 22-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறும்போது, "ஏறத்தாழ 50 சதவீத ரத்தசோகை நோய் பாதிப்பு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. மற்றவை வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் வருகிறது" என்றார்.

    • ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது.
    • எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் வளர்ச்சி பாதை வழங்கும் எண்ணற்ற வாய்ப்புகளை கருத்தில் கொண்டு பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    பாரிஸ்-இல் நடைபெற்ற 14-வது இந்தியா-பிரான்ஸ் சி.இ.ஓ. கருத்தரங்கில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று உங்களிடம் கூறிக் கொள்கிறேன். ஒவ்வொருத்தரின் வளர்ச்சியும், இந்திய வளர்ச்சியுடன் இணைந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இதற்கு சிறந்த உதாரணம் ஏவியேஷன் துறையில் தெளிவாக காணப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் விமானங்களுக்கு முன்பதிவு செய்துள்ளன. மேலும், நாங்கள் தற்போது 120 புதிய விமான நிலையங்களை திறக்க இருக்கிறோம். இதை வைத்து எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே புரிந்து கொள்ளலாம்."

    "இந்தியாவின் வேகமும் பிரான்சின் துல்லியமும் இணையும் போது; பிரான்சின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணையும் போது... வணிக நிலப்பரப்பு மட்டுமல்ல, உலகளாவிய மாற்றமும் ஏற்படும். இந்தியாவும் பிரான்சும் ஜனநாயக முறையில் மட்டுமே இணைக்கப்படவில்லை. நமது நட்பின் அடித்தளம் ஆழ்ந்த நம்பிக்கை, புதுமை மற்றும் பொது நலனை அடிப்படையாகக் கொண்டது. நமது கூட்டாண்மை இரண்டு நாடுகளுக்கு மட்டும் குறுகி இருக்கவில்லை," என்று கூறினார்.

    • வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
    • வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் சூரியமூர்த்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ் உட்பட அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்க சூரியமூர்த்தி கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 வாரங்களில் முடிவெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி உத்தரவிட்டது.

    இதனால் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் தங்களது தரப்பு வாதங்களை மனுக்களாக தாக்கல் செய்தனர். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த முறையீட்டு மனுவில், அ.தி.மு.க.வில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும்? தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்ககு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 12-ந்தேதி (இன்று) ஒத்திவைத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
    • இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன.

    புதுடெல்லி:

    'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊழல் புலனாய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் 2024-ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சி.பி.ஐ.) தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 96-வது இடத்தைப் பிடித்து உள்ளது.

    நிபுணர்கள் மற்றும் வணிகர்களின் கூற்றுப்படி, பொதுத்துறை ஊழலின் அளவை இந்த அமைப்பு மதிப்பிடுகிறது. அதன்படி 180 நாடுகளின் நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டது. நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதில் 'பூஜ்ஜியம்' என்பது மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், '100' என்பது ஊழலற்ற நிர்வாகத்தையும் குறிப்பதாகும்.

    அந்த வகையில் இந்த பட்டியலில், 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38 ஆக உள்ளது. 2023-ல் 39 மதிப்பெண் பெற்றிருந்த இந்தியா, தற்போது ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது. அதாவது ஊழல் மலிந்து உயர்ந்துள்ளது. 2022-ல் இந்த மதிப்பெண் 40 ஆக இருந்தது. 2023-ல் இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன. வங்காளதேசத்தின் தரவரிசை 149 ஆக பின்தங்கி உள்ளது. சீனா 76-வது இடத்தைப் பிடித்து உள்ளது. ஊழல் குறைந்த நாடாக பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளன.

    • ரோகித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
    • மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று, தொடரை முழுமயாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.

    அதே நேரத்தில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டியதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

    ×