என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.
- இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன.
புதுடெல்லி:
'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊழல் புலனாய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் 2024-ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சி.பி.ஐ.) தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 96-வது இடத்தைப் பிடித்து உள்ளது.
நிபுணர்கள் மற்றும் வணிகர்களின் கூற்றுப்படி, பொதுத்துறை ஊழலின் அளவை இந்த அமைப்பு மதிப்பிடுகிறது. அதன்படி 180 நாடுகளின் நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டது. நாடுகளுக்கு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதில் 'பூஜ்ஜியம்' என்பது மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், '100' என்பது ஊழலற்ற நிர்வாகத்தையும் குறிப்பதாகும்.
அந்த வகையில் இந்த பட்டியலில், 180 நாடுகளில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. 2024-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த மதிப்பெண் 38 ஆக உள்ளது. 2023-ல் 39 மதிப்பெண் பெற்றிருந்த இந்தியா, தற்போது ஒரு மதிப்பெண் குறைந்துள்ளது. அதாவது ஊழல் மலிந்து உயர்ந்துள்ளது. 2022-ல் இந்த மதிப்பெண் 40 ஆக இருந்தது. 2023-ல் இந்தியாவின் தரவரிசை 93 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135 வது இடம் மற்றும் இலங்கை 121-வது இடம் பெற்று உள்ளன. வங்காளதேசத்தின் தரவரிசை 149 ஆக பின்தங்கி உள்ளது. சீனா 76-வது இடத்தைப் பிடித்து உள்ளது. ஊழல் குறைந்த நாடாக பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளன.
- ரோகித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
- மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று மதியம் நடக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று, தொடரை முழுமயாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. ரோகித் சர்மா கடந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து நல்ல நிலைக்கு திரும்பி உள்ளார்.
அதே நேரத்தில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டியதும் அவசியமாகும். முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத அவர் 2-வது போட்டியில் 5 ரன்னில் வெளியேறினார். இதனால் அவர் ரன்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 110-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 ஆட்டத்தில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் சமனில் முடிந்தது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
- இன்று பவுர்ணமி.
- சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவிலில் தெப்ப உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-30 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி இரவு 8.12 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.24 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி, சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர், சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில்களில் தெப்ப உற்சவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருது நகர் ஸ்ரீ சிவபெருமான் வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராம பிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-கடமை
மிதுனம்-நற்செயல்
கடகம்-ஜெயம்
சிம்மம்-அன்பு
கன்னி-ஆசை
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- நிறைவு
மகரம்-தெளிவு
கும்பம்-பயணம்
மீனம்-உண்மை
- அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
- ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை நேரில் சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பாரிஸ் நகரில் வைத்து அமெரிக்க துணை அதிபரை அவரது குடும்பத்தாருடன் சந்தித்தார்.
சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் அருமையான சந்திப்பு. பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவரது மகன் விவேத் பிறந்த நாளில் அவர்களை சந்தித்தது பெருமகிழ்ச்சியை கொடுத்தது," என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் மோடி கருணை கொண்டவர். அவர் அளித்த பரிசுகளால் எங்களது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அருமையான உரையாடலுக்காக அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவில் பிரதமர் மோடி, ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உரையாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
- சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன.
- உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
புதுடெல்லி:
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி, ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்தது. பத்திரிகையில் அச்செய்தியை பார்த்த அசாம் ஐகோர்ட்டு, தானாக முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கி, மத்திய அரசு, அசாம் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து வங்கி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புக்கு ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அதை அமல்படுத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஏ.டி.எம்.களில் வரிசையை ஒழுங்குபடுத்தவும், ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவும் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன. அசாம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-
அசாம் மாநிலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்.களிலும் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிப்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசாம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று கூறினர்.
- நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த பல்வேறு முக்கியமான தரவுகளையும் பெற்றுள்ளது.
- ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவின் தென்துருவத்தில் எந்த நாடுகளுமே இறங்காத இடத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி வெற்றிகரமாக தரை இறங்கி, 13 நாட்கள் நிலவில் பல முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சாதனை படைத்தது.
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தனது 'சந்திரயான்-3' திட்டம் மூலம் பெற்றது.
நிலவில் 'சந்திரயான்-3' தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி புள்ளி' என்று பிரதமர் நரேந்திர மோடி பெயரிட்டார். சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடம் 370 கோடி (3.7 பில்லியன்) ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமியில் முதன்முதலாக நுண்ணுயிர் தோன்றியதும் 370 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் என விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டறிந்து உள்ளனர். இது நிலவுக்கும் பூமிக்குமான வரலாற்று தொடர்பு குறித்த பல்வேறு முக்கியமான தரவுகளையும் பெற்றுள்ளது.
'சந்திரயான்-3' விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தின் முதல் வரைபடம் மூலம் இந்த தகவல் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கரடுமுரடாக உள்ள பகுதி, சமவெளி பகுதி, ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதி என 3 வெவ்வேறு தன்மைகள் கொண்ட நிலப்பரப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில், ஓரளவுக்கு சமவெளியாக உள்ள பகுதியில்தான் சந்திரயான்- 3 தரையிறங்கிய இடமான 'சிவசக்தி புள்ளி' உள்ளது.
சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 14 கிலோ மீட்டர் தெற்கே 540 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு புதிய பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பாறைத் துண்டுகள் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தன, அவை அருகில் உள்ள 10 மீட்டர் அகலமுள்ள பள்ளத்தில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும்போது, 'நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கியதே மிகப்பெரும் சாதனைதான். தற்போது அமைவிட ரீதியில் அப்பகுதி பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. பூமியுடன் நிலவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது, மதிப்புமிக்கது' என்றார்.
ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தில் நில அமைப்பியல் மற்றும் நில அடுக்கு ஆகியவற்றை ஆராய்ந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்பட்ட 'இமேஜிங்' கருவிகளை பயன்படுத்தி, நிலவின் பள்ளங்கள் மற்றும் பாறை அமைப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
- பணத்தை அந்த கும்பல் அபகரித்ததும் தெரியவந்தது.
சென்னை:
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர், சென்னை வடக்கு நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 21.7.2023 அன்று எனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது, மறுமுனையில் பேசிய நபர், மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாகவும், நான் அனுப்பிய பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், எனது ஆதார் அட்டை மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் சட்டவிரோதமான பண பரிவர்த்தனை எதுவும் நடந்துள்ளதா? என பார்க்கும்படியும் கூறினார்.
பின்னர், சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனியார் வங்கி கணக்கு விவரங்களை கேட்ட அவர்கள், எனது வங்கி கணக்கில் இருந்து 19 லட்சத்து 91 ஆயிரத்து 687 ரூபாய் பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றினர். எனது வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த பின்பு, இந்த பணம் திரும்ப அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர், செல்போன் அழைப்பை துண்டித்தனர்.
இதன்பின்பு தான், மோசடி கும்பல் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனது வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்து 81 ஆயிரத்து 366 மட்டுமே இருந்தது. இந்த மோசடி கும்பல் என்னிடம் பேசி கொண்டிருந்தபோதே, நான் தனிநபர் கடன் கேட்பது போன்று மோசடி கும்பல் விண்ணப்பம் அனுப்பி உள்ளது.
வங்கி நிர்வாகம் என்னிடம் எந்தவித உறுதியும் செய்யாமல், ரூ.15 லட்சத்தை வங்கி கணக்கில் வரவு வைத்ததும், இந்த பணத்தையும் அந்த கும்பல் அபகரித்ததும் தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தேன். மோசடி கும்பலின் வங்கி கணக்கு தெரிந்த போதும் அதனை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தை திரும்ப பெற்றுத்தரவோ வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எனது வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த ஆணையம், 'மனுதாரர் தான் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்தாரா? என்பதை உறுதி செய்யாமல் வங்கி நிர்வாகம் கடன் அனுமதித்தது சேவை குறைபாடு ஆகும். எனவே, மனுதாரருக்கு அனுமதிக்கப்பட்ட 15 லட்சத்து 4 ஆயிரத்து 101 ரூபாய் கடன் ரத்து செய்யப்படுகிறது.
மோசடி கும்பலின் வங்கி கணக்கு விவரம் தெரிந்த போதும் பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனுதாரரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 586-ஐ மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும்.
சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.
- கப்பலில் சுமார் 1 லட்சம் டன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன.
- தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை அருகே சீன சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அந்த கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறும் அபாயம் இருப்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷியாவின் பால்டிக் கடற்பகுதியில் அன் யாங்-2 என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான அந்த கப்பலில் சுமார் 1 லட்சம் டன் எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்றவை கொண்டு செல்லப்பட்டன.
சகலின் நெவெல்ஸ்கி நகரில் உள்ள உஸ்ட்-லுகா துறைமுகம் அருகே சென்றபோது அந்த கப்பல் எதிர்பாராதவிதமாக தரை தட்டியது. இதுகுறித்து தகவலறிந்த கடலோர போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் அந்த கப்பலில் சிக்கித் தவித்த 20 பணியாளர்களையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே அந்த கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.
இதனால் கப்பலில் இருந்து எண்ணெய் கசியும் அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக சகலின் நெவெல்ஸ்கி பிராந்திய கவர்னர் வலேரி லிமரென்கோ அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த கப்பலை அங்கிருந்து மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த கப்பல் சிக்கிக் கொண்டது குறித்து கடலோர போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சகலின் நெவெல்ஸ்கி கடற்கரை ஆழமற்றது என்பதால் கப்பலின் என்ஜின் தரையில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.
- இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன.
- வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள டிராஜாகாஸ் என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது. குறிப்பாக கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. எனவே அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அங்குள்ள இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகள் சுற்றித்திரிந்தன. அவற்றை வனத்துறை போலீசார் பத்திரமாக மீட்டு ஆற்றில் கொண்டு விட்டனர். வனத்துறை போலீசாரின் இந்த செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- மாநகராட்சி சார்பில் ‘டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது.
- வேகத்தடை காரணமாக வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தானே:
தானே ரெயில் நிலையம் அருகில் உள்ள சிவாஜி பாத் சாலையில் சமீபத்தில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் 'டயர் கில்லர்' வேகத்தடை அமைக்கப்பட்டது. வாகனங்கள் ஒரு வழிப்பாதையில்(ஒன்வே) விதிகளை மீறி நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சரியாக வரும் வாகனங்கள் வேகத்தடையை எளிதாக கடந்து செல்ல முடியும். அதே நேரத்தில் விதியை மீறி எதிர்திசையில் இருந்து வாகனங்கள் சாலையில் நுழைய முயன்றால், வேகத்தடையில் உள்ள ராட்சத ஆணி வாகனத்தின் டயரை கிழித்து விடும். இந்த வேகத்தடை காரணமாக சிவாஜி பாத் சாலையில் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் நுழைவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களின் டயர்களை கிழிக்க வைக்கப்பட்ட அந்த வேகத்தடை, அந்த வழியாக நடந்து செல்லும் பொது மக்களின் கால்களையும் பதம் பார்த்து வருகிறது. இதுவரை அந்த வேகத்தடை காரணமாக 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "சிவாஜி பாத் சாலை ரெயில் நிலையத்துக்கு மிகவும் அருகில் உள்ளது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் அதிகளவில் நடந்து செல்கின்றனர். பலருக்கு இந்த வேகத்தடை பற்றி தெரியாது. எனவே அதில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு காலில் காயம் ஏற்படுகிறது" என்றார்.
மிதேஷ் ஷா என்பவர் கூறுகையில், "மாநகராட்சியின் நோக்கம் சரியானது தான். ஆனால் அதற்கு முதலில் அவர்கள் பொதுமக்கள் நடந்து செல்ல விசாலமான, ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்வார்கள். சாலையில் செல்ல மாட்டார்கள்" என்றார்.
இதுபோன்ற 'டயர் கில்லர்' வேகத்தடைகளை வைப்பதற்கு பதில் வாகனங்கள் விதி மீறலில் ஈடுபடும் பகுதியில், போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்பு பணியில் நிறுத்தலாம் என ராகுல் பிங்காலே என்பவர் கூறினார்.
- பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு சில நாட்களாக வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






