என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
    • பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

    பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம்  வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகம் தயங்குவது ஏன்?
    • அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

    அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரையும் ஒடுக்கக் கூடாது.

    1982-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. ஒவ்வொரு சமூகத்தை பற்றி புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்தியாவில் 4,694 சாதிகள் இருந்தன. தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது.

    ஏற்றத்தாழ்வுகள் மறைய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறோம். அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. 2013-ல் கர்நாடகம், 2023-ல் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?

    சமூக நல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள் தான். சமய பெரியவர்கள் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    • நைஜீரியாவில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது பஸ் மோதியது.
    • இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    நைஜீரிய நாட்டின் நைஜர் மாகாண நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    குசோபோகி என்ற பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அந்த பஸ் முந்த முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

    இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என ஜிம்பாப்வேவும் கைப்பற்றின.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    அந்த அணியின் டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. டோனி முன்யோங்கா 43 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் டிரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது.
    • இதுவரை அமெரிக்காவில் இருந்து மூன்று கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரம் முதல் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தி வருகிறது. இதுவரை 3 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நான்காவது கட்டமாக 12 இந்தியர்களுடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று டெல்லி வந்தடைந்தது. இவர்களில் 4 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர் ஆவர்.

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
    • இதைத் தொடர்ந்து அந்த விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி செல்லும் தினசரி விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்சின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நேற்று முன்தினம் இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 285 பயணிகள் பயணம் செய்தனர்.

    காஸ்பியன் கடலுக்கு மேலே சென்று ஐரோப்பா நோக்கித் திரும்பியது.. பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானிகள் நடுவானில் யு-டர்ன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இத்தாலியின் ரோம் நகருக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.

    இதுதொடர்பாக, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏஏ 292 விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நிலைமை சரியானதும் அடுத்த தகவல் வழங்குவோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளது.

    • ஜெர்மனியில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
    • ஆளும் கட்சியின் ஒலாப் ஸ்கால்ப்ஸ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏ.எப்.டி. இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஜெர்மனி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி தோல்வியை ஒப்புக் கொண்டார் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
    • போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என்றார் அதிபர் டிரம்ப்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு போர்நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு இல்லை என டிரம்ப் தெரிவித்தது சர்ச்சையானது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உக்ரைனில் அமைதி திரும்ப நான் எனது பதவியை விட்டுத் தரவேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருக்கிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளேன்.

    உக்ரைனின் நிலைப்பாட்டை டிரம்ப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷியாவின் தாக்குதலால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, டிரம்ப் ரஷியாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

    இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக டிரம்ப் இருக்க வேண்டும். இதை டிரம்ப் புரிந்து கொள்வோர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • கும்பமேளாவிற்கு 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.

    இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 62 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.

    இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை 65 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.

    • இந்திய நேரப்படி இன்று மாலை 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.11 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 70.62 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் வைபாகவும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

    பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று யூடியூபில் இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×