என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
    • பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    மாநில உரிமைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.

    இந்நிலையில் படத்தை குறித்த அப்டேட்டை சுதா கொங்கரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என அதர்வா, ரவி மோகன் ஆகியோர் உடன் செல்ஃபி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

    மிக வேகமாக படப்பிடிப்பு பணிகள் முடிந்து வருவதால் மொத்த படப்பிடிப்பும் மே மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
    • தாயகம் வேறு; தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்ஷா அபியான்) கீழ் தமிழக அரசுக்கு நடப்பாண்டில் ஒதுக்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் தமிழக அரசு இணைய கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டது.

    பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைந்தால், அது தேசியக் கல்விக் கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால், அதில் தமிழக அரசு இணையவில்லை. இருப்பினும் நிதியை வழங்க கோரி தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

    மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான், மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியை தர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

    தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில் பா.ஜ.க.வின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

    தாயகம் வேறு; தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பா.ஜ.க. செயல்படுகிறது;

    மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் புறக்கணிப்பு ஆகிய காரணங்களால் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பாலத்தை தாங்கி நின்ற ஐந்து 50 மீட்டர் (164.04 அடி) உயர எஃகு கட்டமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.
    • 8,000 க்கும் மேற்பட்ட வெளியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

    தென் கொரியாவில் விரைவு சாலை மீது கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் வீடியோ காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    தென் கொரிய தலைநகர் சியோல் -இல் இருந்து தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்சியோங் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுஞ்சாலை பாலத்தை தாங்கி நின்ற ஐந்து 50 மீட்டர் (164.04 அடி) உயர எஃகு தூண் கட்டமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்தன.

    தீயணைப்புத்துறை அறிக்கையின்படி, இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், நான்கு பேர் படுகாயமடைந்தனர் மற்றும் ஒருவர் லேசான காயங்களுக்கு உள்ளானார்.

    அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ள மேலும் மூன்று பேரை தீயணைப்புத் துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த தற்காலிக அதிபர் சோய் சாங் மோக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தென் கோரிய தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2020 முதல் 2023 வரை ஆண்டில் 8,000 க்கும் மேற்பட்ட வெளியிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது.
    • புதிய அரசு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் ஐ.நா. பொதுச் சபை நேற்று தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது.

    முந்தைய ஜோ பைடன் அரசு உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்தது. மேலும், ரஷியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டில் அமைந்துள்ள டிரம்ப் தலைமையிலான புதிய அரசு ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருக்கிறது.

    193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை உக்ரைன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தாக்கல் செய்த "விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 93 ஆதரவு வாக்குகளும், 18 எதிரான வாக்குகளும் பதிவாகின. மேலும் 65 பேர் இதில் வாக்களிக்கவில்லை.

    ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு கொண்டிருந்தது.

    • தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின்.
    • அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கிறார் நடிகர் கவின். அவர் நடிப்பில் வெளிவந்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

    அதை தொடர்ந்து கவின் ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படங்களில் நடித்தார். இரண்டு திரைப்படங்களுமே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்து மக்களிடம் வரவேற்பை பெற்றது.

    ஸ்டார் திரைப்படத்தை தொடர்ந்து கவின் நடன இயக்குனரான சதிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். கிஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

    கவினின் 6 - வது திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகை யிட்டு பெரியார் ஆதரவு இயக்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். சீமான் வீட்டு அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சீமான் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ராயப்பேட்டை பகுதியில் வைத்து சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்கு திட்டமிட்ட 10 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரியார் பற்றிய சீமானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்யும் வகையிலேயே அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு திட்டமிட்டதாக போலீசில் சிக்கியவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள சீமானின் வீடு இருக்கும் பகுதியில் போலீசார் இன்று தீவிரமாக கண்காணித்தனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நீலாங்கரையில் சீமான் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ), பழைய ஓய்வூதிய திட்டம், அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வருவது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.

    அதன் எதிரொலியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முடிவு காணும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக புதுக்கோட்டை இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மட்டுமே முழு அளவில் இயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சில வகுப்பறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்.
    • மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கோவை வடக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ட ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. அம்மன் அர்ஜூனன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள மு.க. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை. நாடறிந்த "ஊழல் திலகங்களான" இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது "லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை".

    அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது எவப்பட்டுள்ள இந்த சோதனை.

    இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் திரு. அம்மன் K. அர்ச்சுனன் அவர்களை திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக, லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது,

    தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும், இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது திர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
    • தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், 'இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்பதாகும். இன்றும் அதனை எதிர்க்கிறோம். 'இந்தி படிக்காதே!" என்று யாரையும் தடுக்கவில்லை. இந்தியை எங்கள் மீது திணிக்காதே என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை.

    அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கையை கடைபிடிப்பதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. எந்த மொழிக்கும் நாம் எதிரி இல்லை, யார் எந்த மொழியை கற்கவும் தடையாக நிற்பதில்லை. ஆனால் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை அதற்கு எதிரான போராட்டும் தொடரும். இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு.

    ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய் மொழியைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது. தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழியை அடிப்படையாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக கடைபிடித்து வருகிறது தமிழ்நாடு. தமிழை காக்கும் அறப்போரில் உங்களில் ஒருவனாக என்றும் துணை நிற்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. நேற்று தங்கம் விலை சற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

    20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    21-02-2025- ஒரு கிராம் ரூ.109

    20-02-2025- ஒரு கிராம் ரூ.109

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    ×