என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா?
- எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறார்
தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "திமுகவின் 64 பக்க தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா என்றால் இல்லை. எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறாரே. அதே போல பாராளுமன்ற தேர்தலில் 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்றுவரை இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
- 2 பெண்கள் உள்பட 10 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன் (வயது 70). இவர் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலில் கோவையை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (வயது36) அரவிந்த்குமார், (40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த மோசடியில் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 10 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர்.
இதில் சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.

இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி வக்கீல்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல், வக்கீல்களை அனுப்பலாம், ஒருவேளை சம்மன் பெற மறுத்தால் வீட்டில் சம்மன் ஒட்டுவார்கள். அதன்பிறகும் சம்மனுக்கு மதிப்பளிக்கா விட்டால் கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுத்து வரவழைக்கலாம்.
அப்போதும் வக்கீல் அனுப்பி விளக்கம் தெரிவிக்கலாம். நேரில் அவர்களிடமே விளக்கம் பெற விரும்பினால் வக்கீல் முன்னிலையில் அவர்கள் விளக்கம் தரலாம்.
நல்லெண்ண அடிப்படையில் அந்த விளம்பரத்தில் நடித்தோம். எங்களுக்கு வேறு எந்த தொடர்பும் கிடையாது என அவர்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
மோசடியில் அவர்களுக்கு தொடர்பு இல்லாத நிலையில் அவர்களை அதிகப்பட்சமாக சாட்சியாக சேர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது.
- பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை.
"பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆசிரியை தீபாலி அந்த வீடியோவில், "இந்தியா முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. என்னை இந்தியாவில் எதாவது ஒரு ஊரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக சேர்த்திருக்கலாம்.
கொல்கத்தாவை பலருக்கும் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் நான் அங்கு செல்லவும் தயாராக இருந்தேன். மேற்குவங்கத்தில் எங்கு வேலைக்கு சேர்ந்திருந்தாலும் பரவாயில்லை. எனது நண்பர் டார்ஜிலிங்கில் பணியமர்த்தப்பட்டார், உங்களால் கற்பனை செய்ய முடியுமா? மற்றொரு நண்பர் வடகிழக்கில் உள்ள சில்சாரில் பணியமர்த்தப்பட்டார். இன்னொரு நண்பர் பெங்களூரில் இருக்கிறார். ஆனால் ஒரு மோசமான மாநிலத்தில் (பீகாரில்) என்னை பணியமர்த்தியதற்கு என் மேல் அவர்களுக்கு என்ன விரோதம்?
என்னுடைய முதல் பணி என்றும் என் நினைவில் இருக்கும். என்னை கோவாவிலோ ஒடிசாவிலோ அல்லது தென்னிந்தியாவில் எதாவது ஒரு பகுதியில் பணியமர்த்திருக்கலாம். ஏன் யாரும் செல்ல விரும்பாத லடாக்கில் கூட பணியமர்த்திருக்கலாம். நான் அங்கு கூட செல்ல தயாராகவே இருந்தேன்.
நான் கேலி செய்யவில்லை, பீகாரின் நிலைமை உண்மையில் மோசமாக உள்ளது. நான் இங்கே இருப்பதால், அதை தினமும் பார்க்கிறேன். பீகார் மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. பீகார் இருப்பதால் இந்தியா இன்னும் வளரும் நாடாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாகிவிடும்" என்று பேசியுள்ளார்.
ஆசிரியை தீபாலி பேசிய வீடியோ வைரலாக, பீகார் எம்பி சாம்பவி சவுத்ரி, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஆணையருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- கட்சியை பலப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பிரசாரம், வியூகம், பூத் கமிட்டி, வாக்காளர்கள் சேர்ப்பு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்பாக விஜய் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் விஜய் திட்டவட்டமாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலை த.வெ.க.வினர் மறுத்து உள்ளனர். 2026-ல் முதலமைச்சர் வேட்பாளராக விஜயை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
- சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது.
- அதனை யாரும் வரவரேற்க வேண்டிய அவசியம் இல்லை.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி திருவிழாவில் மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்படி கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.
ஈஷா மைய சிவராத்திரி விழாவில் டி.கே. சிவகுமார் கலந்து கொண்டது சர்ச்சையானது. இது குறித்து விளக்கம் அளித்த டி.கே. சிவகுமார் தனது தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் மைசூரை பூர்விகமாக கொண்ட சத்குரு தன்னை தனிப்பட்ட முறையில் அழைத்த காரணத்தால் நான் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறினார்.
இது குறித்து பேசிய டி.கே. சிவகுமார், "ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அது என் தனிப்பட்ட நம்பிக்கை. சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு பதில் அளிக்க முடியாது. அதனை பா.ஜ.க. அல்லது மற்றவர்கள் யாரும் வரவேற்க வேண்டிய அவசியம் இல்லை.
"இது குறித்து ஊடகங்களும் விவாதிக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட நம்பிக்கை. சத்குரு மைசூருவை சேர்ந்தவர், அவர் என்னை அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தார்," என தெரிவித்துள்ளார்.
- இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
- சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன.
இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,
இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.
ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.
இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவை பகிர்ந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது பதிவில், "சமூகத்தைப் பிரிக்கும் இத்தகைய மேலோட்டமான முயற்சிகளால் மோசமான நிர்வாகம் ஒருபோதும் மறைக்கப்படாது.
இந்தி பேசும் தொகுதியின் எம்பி என்ற முறையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதை ஏற்றுக்கொள்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- யாரும் வீட்டில் இல்லை என்பது போல சம்மனை ஒட்டி சென்றுள்ளனர்.
- நேர்மையான விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம்.
நீலாங்கரை:
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானின் மனைவி கயல்விழி, பாலியல் குற்றச்சாட்டு மூலம் சீமானை அசிங்கப்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது:-
* சீமான் நேர்மையான தலைவர், மக்களுக்காக போராடும் தலைவர்.
* யாரும் வீட்டில் இல்லை என்பது போல சம்மனை ஒட்டி சென்றுள்ளனர்.
* என்னிடம் பேசிவிட்டு சம்மனை ஒட்டி விட்டு சென்றிருக்கலாம். சம்மனை படிப்பதற்காகவே கிழிக்க சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்.
* சம்மன் கொண்டு வரும் தகவல் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
* காவல்துறையினரின் செயல்பாட்டை நான் எதிர்பார்க்கவேயில்லை. காவல்துறையினர் திட்டமிட்டே செயல்பட்டனர்.
* நாங்கள் எதற்கும் துணிந்து தான் இருக்கின்றோம். மனதளவில் எங்களை டிஸ்டர்ப் செய்வதே காவல்துறையின் நோக்கம்.
* நேர்மையான விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம்.
* கைது நடவடிக்கை தொடர்பாக காவல் ஆய்வாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தை நாட உள்ளதாக கூறினார்.
இதனிடையே, நேற்று போலீசார் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டதை அடுத்து சீமான் வீட்டு வாசலில் பலகை வைக்கப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை சந்தையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 21-ந்தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 25-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 25-ந்தேதி, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மறுநாளே, அதாவது 26-ந்தேதி, விலை குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.64 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,960-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400
25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600
24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-02-2025- ஒரு கிராம் ரூ.106
26-02-2025- ஒரு கிராம் ரூ.106
25-02-2025- ஒரு கிராம் ரூ.108
24-02-2025- ஒரு கிராம் ரூ.108
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
- சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளிலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னை :
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று)போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.
சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ஆஜராவதாக கூறிய நிலையில், இன்று மாலையே ஆஜராகி சீமான் விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று அளித்த பேட்டியில் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆக முடியாது என்று சீமான் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், தற்போது அவர் இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று சீமான் விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனிடையே, நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளிலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.
- மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்.
சென்னை:
மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இருமொழிக்கொள்கையே போதுமானது என்று கூறி வருகிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.
ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள்/போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக்கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பா.ஜ.க. கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
- அரசியல் முடிவுகள் சுயமாக எடுக்கப்படுகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்திருக்கிறார். த.வெ.க. கட்சியில் ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஆதவ் அர்ஜுனா மேற்பார்வையில் நடைபெற்றது. இவ்விழாவில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த நிலையில் தன் கணவரின் அரசியல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம். தொழில் சார்ந்த முடிவுகளும், அரசியல் முடிவுகளும் சுயமாகவே எடுக்கப்படுகின்றன."
"இதற்கு எங்கள் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள தனியுரிமையையும், கருத்துக்களையும் மதிக்கிறோம்."
"தவறான கருத்துக்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். எங்கள் குடும்பத்தை தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் சிக்க வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.






