என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
- படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்தப் படம் நாளை மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் சில சூழ்நிலை காரணங்களால் நாளை திரைப்படம் வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அஸ்திரம் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விசாரணைக்கு சென்ற காவலர்களை தாக்கியது மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டியது ஆகிய வழக்கில் இருவரும் கைது.
- ஒரு வழக்கில் இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் போலீசார் சம்மன் நோட்டீஸ் ஒட்டினர். இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (பிப்ரவரி) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பாதுகாவலர் உள்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து, வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் சீமான் வீட்டு பாதுகாவலர்கள் அமல்ராஜ், சுபாகர் ஆகியோரின் ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன
- பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் சிவஸ்ரீ ஒரு பாடல் பாடினார்.
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சென்னையை சேர்ந்த பாடகியும் பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பெங்களூரில் நடைபெற்ற தேஜஸ்வி சூர்யாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகினறன.
பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா, மத்திய அமைச்சர் வி.சோமன்னா ஆகியோர் தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னை சமஸ்கிருத கல்லுாரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக். பட்டமும் முடித்துள்ளார்.
மேலும், சிவஸ்ரீ சொந்தமாக ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரது சேனலை, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் இவர் ஒரு பாடலும் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் போராடி வருகின்றன.
- அங்கு மக்கள் தொகை இல்லை. ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அவற்றை இயக்க (செயல்படுத்த) மக்கள் இல்லை.
ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசும்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் போராடி வருகின்றன. அங்கு மக்கள் தொகை இல்லை. ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அவற்றை இயக்க (செயல்படுத்த) மக்கள் இல்லை.
ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவர்களுடைய பொருளாதாரத்திற்கு வயது முதிர்ந்த குடிமக்கள் மிகப்பெரிய சவலாக மாறிவருகின்றனர். எனினும், இந்த விவசயத்தில் இந்தியா இன்னும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படாத நாடாக இருக்கிறது.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சமீப காலமாக மக்களை தொகை குறைந்து வருவதால், ஆந்திர பிரதேச மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
- சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.
- ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவும், சிறப்பாக அமையவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார். எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் வேலியண்ட் படைத்திருக்கிறார். இதன் மூலம் ஜோசப் ஹேடன், வூல்ப்காங் அமாடியஸ் மொசார்ட், லுட்விக் வான் பீத்தோவன், பிராண்ஸ் சூபேர்ட், பீலிக்ஸ் மெண்டல்சன் உள்ளிட்டோரின் வரிசையில் அவரும் இடம் பெறுவார். இது அவருக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை ஆகும்.
உண்மையில் சிம்பொனி இசை மட்டுமல்ல. இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் நிரூபிக்கும். வாழ்த்துகள் ராஜா!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.
- செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம்.
ஈரோடு:
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் (சி.என்.சி) கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சி.என்.சி. கல்லூரியை நிர்வாகத்தினர் நடத்த முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு நடத்துவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்துள்ளது.
மொத்தம் 52 ஏக்கர் கொண்ட இக்கல்லூரியில் 40 ஏக்கரில் விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்விற்கு வந்துள்ளார் என்றார்.
பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியாரால் உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்கு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இது பெரியாருக்கான பாராட்டிற்குரிய செயல். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உயர்க்கல்வித்துறை பணிகளை துரிதப்படுத்தும்.
ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் தொடர்ந்து நடத்த வழிவகை உள்ளதா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 2500 கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போதிய அளவில் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை செட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உள்ளோம். கடந்த அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க உள்ளோம். அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணி நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சந்திர குமார் எம்.எல்.ஏ., மேயர் நகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
- மராத்தி தான் மும்பையின் மொழி என்று MLA ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையின் மூலம் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக அரசு முயற்சிப்பதாக ஆளும் திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இக்கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பையாஜி ஜோஷி, "மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். காட்கோபர் பகுதி மக்கள் குஜராத்தி பேசுகிறார்கள். ஆதலால் நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா அமைச்சர் மங்கள் பிரபாத் லோபா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
மராத்தி குறித்து பையாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் காட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
இந்த விவகாரம் குறித்து பேசிய எம்.பி. சஞ்சய் ராவத், "பாஜகவின் கொள்கை வகுப்பாளரும் ஆர்.எஸ்.எஸ் தலைவருமான பையாஜி ஜோஷி, மராத்தி மும்பையின் மொழி இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் கொல்கத்தாவிற்கு சென்று பெங்காலி அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா? அவர் சென்னைக்கு சென்று தமிழ் அவர்களின் மொழி இல்லை என்று கூறுவாரா?" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.
- விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
நெல்லை:
தமிழக அரசு வேளாண்மைக்கு என ஆண்டுதோறும் தனி பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கை வருகிற 15-ந் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில் இடம் பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பான விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் நேரடியாக விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் சூழலில் 5-வது வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.
- ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
- அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது" என்றார்.
மேலும் அவர், "ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை. தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்" என்றார்.
இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நாடகம் போடுவதாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி அளித்துள்ளார்.
இதுகுறித்து ரகுபதி கூறுகையில், " அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ? என்ற அச்சத்தில், கூட்டத்தில் பங்கேற்று நாடகத்தை நடத்தியுள்ளது அதிமுக.
பாஜகவுடன் நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெறப் போவதில்லை" என்றார்.
- தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமினில் வெளியே வந்தார்.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் பலமுறை சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் உள்ள ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில்பாலாஜி உள்ள நிலையில் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
- நாகை-திரிகோணமலை இடையே எண்ணை குழாய் ஒப்பந்தம்.
சென்னை:
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக் கடலை சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்து பேசுவதை வழக்கத்தில் வைத்து உள்ளனர். இந்த சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, தீவிர வாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விசயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.
"பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் அவர் வங்க தேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அப்போது அவர் பிரதமர் மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் 3 தடவை இலங்கைக்கு சென்று இருக்கிறார். தற்போது 4-வது முறையாக அவர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.
இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது அதிகரித்து வருகிறது.
மீன்பிடி படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிறிது காலத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திரும்பி கிடைப்பது இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி இலங்கை செல்வதால் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசுவாரா? என்ற ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும்.
- பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய உணவு கழக வளாகத்தில் இன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் உணவு கழக நிர்வாக இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ், பொது மேலாளர்கள் சைனி வில்சன், முத்துமாறன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இந்திய உணவுக் கழகத்தில் 30 சதவீத பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இது அரசியல் சூழலில் இருப்பதை விட அதிகம் தான்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும். இந்த அரசாங்கம் பெண்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுபோன்று இருக்கும்போது பெண்கள் படித்து முடித்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றால் அது இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்று அப்போதே கேட்டவர் தந்தை பெரியார். அவரைப் போன்று பெண்களின் உரிமைக்காக விடுதலைக்காக இதுவரை எந்த தலைவரும் குரல் கொடுத்தது இல்லை.
டெல்லியில் ஒரு பெண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பல மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதால் தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் முதல்வராக தகுதியற்றவர் என்று பேசினார்கள்.
இத்தனை மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கேள்விகளும் எழவில்லை ஆனால் ஒரு பெண் தலைமையிடத்திற்கு வரும் பொழுது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது. நம்மால் இந்த செயலை செய்ய முடியுமா? என்று சிந்திக்காமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது. அவர்கள் எங்கு செல்ல நினைத்தாலும் சுதந்திரமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.






