என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
- நாகை-திரிகோணமலை இடையே எண்ணை குழாய் ஒப்பந்தம்.
சென்னை:
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக் கடலை சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்து பேசுவதை வழக்கத்தில் வைத்து உள்ளனர். இந்த சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, தீவிர வாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விசயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.
"பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாநாட்டில் அவர் வங்க தேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அப்போது அவர் பிரதமர் மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு முன்பு மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் 3 தடவை இலங்கைக்கு சென்று இருக்கிறார். தற்போது 4-வது முறையாக அவர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.
இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது அதிகரித்து வருகிறது.
மீன்பிடி படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிறிது காலத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திரும்பி கிடைப்பது இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி இலங்கை செல்வதால் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசுவாரா? என்ற ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும்.
- பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய உணவு கழக வளாகத்தில் இன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் உணவு கழக நிர்வாக இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ், பொது மேலாளர்கள் சைனி வில்சன், முத்துமாறன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இந்திய உணவுக் கழகத்தில் 30 சதவீத பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இது அரசியல் சூழலில் இருப்பதை விட அதிகம் தான்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும். இந்த அரசாங்கம் பெண்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுபோன்று இருக்கும்போது பெண்கள் படித்து முடித்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றால் அது இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்று அப்போதே கேட்டவர் தந்தை பெரியார். அவரைப் போன்று பெண்களின் உரிமைக்காக விடுதலைக்காக இதுவரை எந்த தலைவரும் குரல் கொடுத்தது இல்லை.
டெல்லியில் ஒரு பெண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பல மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதால் தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் முதல்வராக தகுதியற்றவர் என்று பேசினார்கள்.
இத்தனை மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கேள்விகளும் எழவில்லை ஆனால் ஒரு பெண் தலைமையிடத்திற்கு வரும் பொழுது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது. நம்மால் இந்த செயலை செய்ய முடியுமா? என்று சிந்திக்காமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது. அவர்கள் எங்கு செல்ல நினைத்தாலும் சுதந்திரமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
- டெஸ்ட் திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி.-யில் வெளியாகிறது.
- இந்தப் படத்தில் சித்தார்த், மாதவன் மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர்.
'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.

இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஓடும் ரெயிலில் இருந்து கதவை திறந்து வெளியில் குப்பைகளை வீசி எறிகிறார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக ரெயில்வே துறைக்கு என்ன நேரமோ என்று தெரியவில்லை. ரெயில்வே துறை சம்பந்தமான பிரச்சனைகள் தொடர்பான வீடியோக்கள் பல வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோ ஒன்று ரெயில்வே துறையில் நடைபெறும் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது.
யார் பொறுப்பு என்ற தலைப்பில் 49 வினாடிகளே ஓடும் வீடியோவில், ஏ.சி. கோச் பெட்டியில் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் கையில் குப்பைகளுடன் காணப்படுகிறது. அப்போது அவர் ஓடும் ரெயிலில் இருந்து கதவை திறந்து வெளியில் குப்பைகளை வீசி எறிகிறார். இதுகுறித்து அங்கிருந்த பயணிகள் கேள்விகள் கேட்டும், அதற்கு பதிலளிக்காமல், மீண்டும் அங்குள்ள குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை வீசி எகிறார்.
இதனை தொடர்ந்து பயணிகள் கேள்விகள் கேட்டதற்கு குப்பை கொட்ட வேறு எங்கும் இடம் இல்லை என்று கூறி தனது செயல்களை நியாயப்படுத்துகிறார் அந்த மூத்த அதிகாரி.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
- தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 முதல் 2014 வரை ரூபாய் 675.36 கோடி சமஸ்கிருதத்திற்கும், ரூபாய் 75.05 கோடி தமிழுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அண்ணாமலை கூறியிருக்கிறார்.
ஆனால், சமஸ்கிருதத்தை பரப்புவதற்கு தலைநகர் டெல்லியில் ராஷ்ட்ரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டன. அந்த அமைப்பிற்கு ரூபாய் 643.84 கோடி மூன்றாண்டுகளில் மட்டும் சமஸ்கிருதத்திற்கு பா.ஜ.க. அரசு வழங்கியிருப்பதை ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறோம். அண்ணாமலை கூற்றின்படி, சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எந்த அடிப்படையில், எதற்காக வழங்கப்பட்டது என்று கூறாமல் பொத்தாம் பொதுவாக கூறுவது அப்பட்டமான அவதூறாகும்.
அதே காலகட்டத்தில் அந்த மூன்றாண்டுகளில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2017-18-ல் ரூபாய் 10.59 கோடி, 2018-19-ல் ரூ. 4.65 கோடி, 2019-20-ரூபாய் 7.7 கோடி என மொத்தம் ரூ. 22.24 கோடி சென்னையில் அமைந்துள்ள மத்திய செம்மொழி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ.க. இந்தி மொழிக்கு நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும் பா.ஜ.க.வின் எதிர்காலத்தின் மீது விழப்போகிற சம்மட்டி அடியாகவே அது அமையப்போகிறது. பா.ஜ.க.வினர் பெறுகிற கையெழுத்தின் மூலமே அவர்களது எதிர்காலம் சூனியமாகிற சூழல் இன்றைக்கு ஏற்படப் போகிறது.
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வருமான வரித்துறையால் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
- சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய முடியும்.
வருமான வரி சட்டம் 2025-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய திருத்தம் காரணமாக அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஒருவர் மீது சந்தேகம் எழும் பட்சத்தில் அவரது தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவைகளை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வருமான வரித்துறையால் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதா காரணமாக அரசாங்கம் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கும் தனிநபர்களின் தனிப்பட்ட, விர்ச்சுவல் டிஜிட்டல் தளமாக வகைப்படுத்தப்பட்டு இருக்கும் நிதி சார்ந்து இயங்கும் டிஜிட்டல் தளங்களை அரசு அதிகாரிகள் சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய முடியும்.
இதன் மூலம் வருமான வரி சட்டம் 1961-இன் கீழ் கணக்கில் வராத வருமானம், ரொக்கப் பணம், தங்கம், நகைகள் அல்லது விலை உயர்ந்த பொருட்கள் அல்லது சொத்துக்களை வைத்திருப்பதாக வருமான வரித்துறை சந்தேகிக்கும் தனிநபர்களின் சமூக வலைத்தள கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல், வங்கி கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டப்படி எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
தற்போது வருமான வரி சட்டம் 1961-இன் 132-வது பிரிவின் படி கணக்கில் வராத வருமானம் அல்லது சொத்துகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தால், சோதனையின் போது கணக்குகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய நடைமுறை சட்டமாக்கப்பட்டால், வருமான வரித்துறையினர் டிஜிட்டல் தரவுகளை கைப்பற்றும் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படும். இதில் அவர்கள் கணினி சார்ந்த சாதனங்கள் மற்றும் விர்ச்சுவல் தளங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய முடியும்.
வருமான வரி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸ் என்றால் என்ன?
புதிய மசோதாவின் "விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸ்" என்பது- இமெயில் சர்வெர்கள், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள், வங்கி கணக்குகள் அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை சேமிக்க பயன்படுத்தப்படும் வலைதளம் உள்ளிட்டவைகளை குறிக்கும்.
மேலும், கணினி சார்ந்து உருவாக்கப்படும் டிஜிட்டல் தளங்கள்: அதாவது தகவல் பரிமாற்றம், கம்ப்யூட்டர் சிஸ்டம்களை கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகள், கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள், கம்ப்யூட்டர் தரவுகள், தகவல் பரிமாற்ற சாதனங்கள், சைபர்-ஸ்பேஸ், இணையதளம், வொர்ல்டுவைடு வெப் மற்றும் தகவல் மற்றும் விவரங்களை பயன்படுத்தும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவையும் விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸ் ஆக கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மசோதாவின் படி, அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களாக மூத்த வரித்துறை அதிகாரிகள், இணை இயக்குநர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை ஆணையர்கள், இணை அல்லது துணை இயக்குநர்கள், துணை அல்லது பொறுப்பு ஆணையர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் வரி மீட்பு அதிகாரிகளை குறிக்கும்.
- காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்தது.
- சர்வதேச அளவில் பொருளாதரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனையான நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது.
காலையில் சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் தற்போது கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,060-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,480-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது.
* தமிழகத்தில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ள நிலையில் திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவாகி உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
* தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
* தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
* சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு தோற்றம் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றி வந்தார்.
- விளரம்பரங்களில் நடித்து உள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானவர் அபிநய். மலையாள மொழி படங்களில் நடித்து வந்த அபிநய் இப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் கால் பதித்தார். மலையாளம், தமிழ் என சின்ன படங்களில் நடித்து வந்த இவர் சிறப்பு தோற்றம் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் விளரம்பரங்களில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அபிநய், லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோயின் பாதிப்பால் வயிறு வீங்கி ஆளே அடையாளம் தெரியாத நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேல் சிகிச்சைக்காக மேலும் தனக்கு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் தேவைப்படுவதாகவும் அதனால் உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
- கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை குரூப் ஏ தலைமை பொறியாளர் டி.டி.நஞ்சுண்டப்பா, பெங்களூரு தரக்கட்டுப்பாடு மற்றும் தர உறுதி மற்றும் நெடுஞ்சாலை கிரேடு-1 பொறியாளர் எச்.பி.காலேஷப்பா, கோலார் உதவி நிர்வாக பொறியார் நாகராஜ், கலபுரகி திட்ட அமலாக்க பிரிவின் ஜெகநாத் உள்பட 8 அதிகாரிகளின் வீடுகளில் லோக்ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் அடிக்கடி தொடரும் இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக சவுத் ஷகீல் விளையாடினார்.
- போட்டியின் போது சவுத் ஷகீல் தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய வர முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சவுத் ஷகீல் இந்த தொடரில் விளையாடினார். அவர் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பிடிவி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சவுத் ஷகீல் களத்திற்கு வரவில்லை. மூன்று நிமிடங்கள் ஆகியும் சவுத் ஷகீல் களத்திற்கு வராததால் பிடிவி அணி கேப்டன் நடுவரிடம் அவுட் கேட்டார்.
இதையடுத்து நடுவர் சவுத் ஷகிலுக்கு அவுட் கொடுத்து விட்டார். இந்த நிலையில் போட்டியின் போது சவுத் ஷகீல் படுத்து தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய அவரால் வர முடியவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே முதல் முறையாக டைம்ட் டவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை சவுத் ஷகீல் படைத்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணி தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் நிலையில், சவுத் ஷகீல் களத்திற்கு வராமல் படுத்து தூங்கிய சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இந்த போட்டியில் முஹம்மது ஷாசாத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சவுத் ஷகீல் பேட்டிங் செய்ய வராமல் தூங்கியதால் அவருடைய அணி 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஒரு விக்கெட் விழுந்த பிறகு களத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் புது பேட்ஸ்மேன் வந்து பேட்டிங் செய்ய தயாராகவில்லை என்றால் அவருக்கு டைம்ட் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும்.
கடந்த 2023 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இவ்வாறு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
- சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது.
- சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
மதுரை:
மதுரையை சேர்ந்த அமாவாசை, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை சாலையோரம் நட்டு வைக்க அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் நிரந்தர கட்சி கொடிக் கம்பங்களை அகற்றவும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம்.
தமிழக அரசு தனியார் நிலங்களில் கொடிக்கம் பங்களை வைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சாலைகளில் கொடி மரங்கள் வைக்க கட்சிக்கொடி ஏற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனிநீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட்டும் என்றனர்.
பின்னர் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன. சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கட்சி கொடி மரங்கள் வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க கூடாது என வாதாடினார்.
விசாரணை முடிவில், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
ஆனால் இதுபோன்று கட்சி கொடி கம்பங்கள் நிறுவப்படுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. எனவே ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம். மேலும் சட்ட விதிகளின்படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அனுமதி வழங்க அரசுக்கு அதிகாரமில்லை. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரி தான்.
திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார், எந்த தெருவிலும் சாலையிலும் நட்டு வைக்கவில்லை. இதனை ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.






