என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள்.
* தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
* சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை.
* பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.
* காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.
* மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.
* ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் நவீன கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை விளக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருவாய் பகிர்வு முறை எப்படி வளைந்துள்ளது என்பதையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 38.5 சதவீத வருவாயை எடுத்துக் கொள்வதாக எடுத்துரைத்துள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில், பிசி.சி.ஐ. ஏன் ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் அதிக பங்குகளை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்த அறிக்கையில் ஐ.சி.சி. வருவாயில் பி.சி.சி.ஐ. பங்களிப்புகள் என்னென்ன என்பது பற்றியும் எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இதுதவிர இந்திய சந்தைக்கான ஒளிபரப்பு உரிமம் எவ்வளவு தொகைக்கு விற்பனையாகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. மேலும், இந்த தொகை காரணமாக ஐ.சி.சி.க்கு கிடைக்கும் நிதி எவ்வளவு என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இந்திய அணி போட்டிக்காக விளம்பரதாரர்கள் எந்தளவுக்கு வரிசையில் நிற்கின்றனர் என்பது பற்றியும் இந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.
இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக ஐ.சி.சி. வருவாயில் பெரும் பங்கு பி.சி.சி.ஐ.க்கு செல்வதும் கிட்டத்தட்ட 50 சதவீத தொகை முதல் மூன்று பெரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இது தவிர பி.சி.சி.ஐ.-க்கு வழங்கப்படும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
அறிக்கை குறித்து சந்தை வல்லுநர்கள் கூறும் போது, பால் மார்ச் தலைமையிலான ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த விளையாட்டியின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.
- குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
- காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு சாத்தியமில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதற்கே ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை.
* அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தகுதியில்லை.
* குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
* கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது இணைப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை. பிரிந்தது பிரிந்தது தான்.
* தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.
இந்நிலையில், வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வீர தீர சூரன் படத்தின் 9 மணி காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 9 மணி காட்சிக்கு டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்தில் பணம் திருப்பி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையில், வீர தீர சூரன் படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்யவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார்.
- பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் 15 வயதுடைய பள்ளி மாணவி புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை.
சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உள்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இது தொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆண் டெய்லர் உள்பட 2 பேர் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது உடல் பாகங்களை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 33 சதவீதத்தை குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33முதலீடு செய்கிறார்கள்.
- பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
இந்தியாவில் 30 மில்லியன் டாலருக்கு ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் இதில் எல்லாம் அதிகப்படியாக முதலீடு செய்கிறார்கள் என்பது குறித்து 150 பணக்காரர்களிடம் கோடக் மஹிந்திரா வங்கி ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் தங்களது முதலீடுகளில் 45 சதவீதத்தை கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையில் 33% முதலீடு செய்கிறார்கள்.
குடியிருப்பு ரியல் எஸ்டேட் துறையை விட கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் அதிக வருவமானம் கிடைப்பதால் பணக்காரர்கள் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
குறிப்பாக வெளிநாட்டு ரியல் எஸ்டேட்களிலும் பணக்காரர்கள் சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக அளவில் முதலீடு செய்யும் பணக்காரர்களில் 35% பேர் வெளிநாடுகளில் கமர்ஷியல் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்கள்.
வெளிநாடுகளுக்கு குடிபெயரும் நோக்கத்தில் பெரும்பாலான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியிருப்பு ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்கிறார்கள். கணக்கெடுப்பில் கலந்துகொண்ட பணக்காரர்களில் 5 இல் ஒருவர் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொண்டு வெளிநாட்டில் நிரந்தரமாக வசிக்க விரும்புகிறார்கள்.
பணக்காரர்கள் தங்களது முதலீடுகளில் 32 சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்கிறார்கள். அதில் 89% தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் 83 சதவீதமும், PMS ஃபண்டுகளில் 55 சதவீதமும், காப்பீடு/ULIPகள் 40 சதவீதமும் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக அமெரிக்க பங்குகள், இந்திய முதலீட்டர்களிடையே தற்போது பிரபலமடைந்து வருகிறது.
கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பணக்காரர்கள் தங்களது பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு செலவு செய்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.26 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை சுமார் 2.18 லட்சமாக இருந்தது. இது 2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 4.30 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.
- இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.
தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எதைச்செய்தாலும் குறிப்பிட்ட பிரிவினரை வஞ்சிக்கும் விதமாகவே செயல்படுகிறது.
* ஒன்றிய பா.ஜ.க. அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது.
* இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.
* பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது.
* அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கிறது.
* சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கிற, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, வக்பு நோக்கத்திற்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான குழப்பமான, தேவையற்ற பல்வேறு பிரிவுகள் வக்பு சட்டத்திருத்தத்தில் உள்ளன. எனவே இதனை நாம் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.
- இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.
தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதையடுத்து தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* மத உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம்.
* வக்பு வாரிய சட்டத்திருத்தம் இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது.
* வக்பு வாரிய சொத்துக்களை அரசு நிர்வகிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் அபாயம் உள்ளது.
* இஸ்லாமியர்களின் மத உரிமையில் அரசு தலையிடுகிறது.
* சட்டத்திருத்தம் நிறைவேறினால் அரசின் தலையீடு அதிக அளவில் இருக்கும்.
* வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் நாடு இந்திய நாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள்.
- தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது.
சென்னை :
தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார். அதில், "இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது. இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?" என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:-
"திரு. மு.க. ஸ்டாலின், நீங்கள் நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். வழக்கமாக, ஏமாற்றுபவர்கள் பணக்காரர்களைத் தான் ஏமாற்றுவார்கள். ஆனால் தி.மு.க. எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை; அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள்.
தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த கொள்கையை எதிர்க்கிறது என்பதை இப்போது மொத்த நாடும் அறிந்திருக்கிறது. அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள், மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் அங்கும் இங்கும் திட்டமிட்டு நடத்திய நாடகம் முழு தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார். மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசைதிருப்ப நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை நீங்கள் உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.
உங்கள் அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்க, மு.க. ஸ்டாலின். நாங்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்," என்று கூறியுள்ளார்.
- கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச் மேற் பார்வையாளர் சுஜன் முகர்ஜி இதை நிராகரித்துள்ளார்.
- ஆடுகள மேற்பார்வையாளரின் இந்த கருத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிருப்தி அடைந்தது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. கவுகாத்தியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
கொல்கத்தா மைதானத்தில் தோற்றதால் அதன் ஆடுகள தன்மையை மாற்றி அமைக்குமாறு ஈடன் கார்டன் பிட்ச் அமைப்பாளரிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே கோரிக்கை வைத்தார். பிட்ச்சை மேலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்குமாறும், தங்கள் அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்ச் மேற் பார்வையாளர் சுஜன் முகர்ஜி இதை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக 70 வயதான அவர் கூறியதாவது:-
நான் இங்கு இருக்கும் வரை ஈடன் கார்டன் ஆடுகளம் மாறாது. ஐ.பி.எல். விதிகளின்படி ஒரு அணி அதன் பிட்ச்சினை மாற்றும்படி கூறக்கூடாது. நான் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஆடுகளம் இப்படித் தான் இருக்கிறது. கடந்த காலங்களில் பிட்ச் இப்படித்தான் இருந்தது. இப்போது எதுவும் மாறவில்லை. எதிர்காலத்திலும் பிட்ச் மாறப்போவதில்லை.
பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள் எத்தனை விக்கெட் எடுத்தார்கள்? குணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுயாஷ் சர்மா பந்தினை திருப்பி ரஸ்சலின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இவ்வாறு சுஜன் கூறி உள்ளார்.
ஆடுகள மேற்பார்வையாளரின் இந்த கருத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிருப்தி அடைந்தது. கடந்த ஆண்டும் அந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தங்களது அணிக்கு சொந்த மண் சாதகமாக இல்லை என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
- நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த குணால் கம்ராவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது மத்திய அமைச்சர் குறித்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்கு காவல் நிலையத்தில் விசாராணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் குணால் கம்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், நேற்று (புதன் கிழமை) குணால் கம்ரா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
அந்த வீடியோவில் 1987ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவாய்' என்ற பாடலில் பாப்கார்ன் எமோஜிக்கள் இடம்பெற்று இருந்தன. இவை திரையரங்குகளில் வாடிக்கையாக விற்பனை செய்யப்படும் பாப் கார்ன் மீது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த வீடியோவில் சாலைகளில் குழிகள் இருப்பதும், மெட்ரோ பணிகளுக்காக சாலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சரிவாலி தீதி மற்றும் நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த சர்ச்சைக்கு காவல் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த குணால் கம்ரா காவல் நிலையத்தில் ஆஜராக ஒருவார காலம் அவகாசம் கோரியிருந்தார். காவல் துறையினர் குணால் கம்ரா கோரிக்கையை நிராகரித்ததுடன் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கியுள்ளனர்.
- தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
- திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ். அதே ஊரை சேர்ந்தவர் மிருதுளா. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தனர். பள்ளியிலும் ஒன்றாக படித்து வந்தனர்.
அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
கடந்த 1961-ம் ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த காலம். காதல் திருமணம் என்பது அரிதானது.
இதனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த தங்களது காதலை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
இதனால் ஹர்ஷ் மற்றும் மிருதுளா பள்ளி பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி எளிமையான முறையில் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவர்கள் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை என சபதம் ஏற்றனர்.
இந்த நிலையில் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்கினர்.
அவர்களுக்கும் குழந்தை பிறந்து மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேர குழந்தைகள் என பெரிய குடும்பமாக வளர்ச்சி பெற்றது.
பேரன், பேத்திகளுடன் வாழ்ந்தாலும் தங்களுடைய திருமணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடைபெறவில்லை. பிரமாண்ட முறையில் விருந்து வைக்கவில்லை என வயதான பிறகும் தம்பதி ஏக்கத்துடன் இருந்தனர்.
64 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மகன்கள் தங்களது பெற்றோர் எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு பிரமாண்ட முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமண ஏற்பாடுகள் நடந்தன.
இன்னிசை கச்சேரி ஆட்டம், பாட்டம் என திருமண மண்டபம் களை கட்டியது. தம்பதிக்கு மெஹந்தி வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேர குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண விழாவில் போட்டோ ஷூட் நடந்தது. மண மேடையில் மாலையும் கழுத்துமாக நின்ற தாத்தா, பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
மேலும் செல்பி எடுத்துக் கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இந்த திருமண வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் இந்த தலைமுறைக்கு நீங்கள் முன்மாதிரி என பதிவு செய்து வருகின்றனர்.






