என் மலர்
செய்திகள்
- கார்த்திகை தீப திருநாள் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
- நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் கார்த்திகை தீப திருநாள் அன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இந்த உத்தரவை எதிர்த்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது, மேலும், தீபம் ஏற்றும் இடம் தர்காவுக்கு அருகில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநான் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நாளை தீர்ப்பு அளிக்கிறது. நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், ஜெயச்சந்திரன் அமர்வு நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
- 2017 ஆம் ஆண்டு துருவ நட்சத்திரம் படம் துவங்கப்பட்டது.
- பல பிரச்சனையின் காரணமாக துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.
இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.
பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் பட வெளியீட்டிற்கான பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
- அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பாஸ்கரன் நீக்கம்.
- உடன்பிறப்புகள் யாரும் பாஸ்கருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பாஸ்கரன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ ஹ. பாஸ்கரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
- ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அவனியாபுரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு வருகிற பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரம் ஜல்லிட்டு நடைபெற உள்ளது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டிக்கும், தென்கால் பாசன விவசாய சங்கத்திற்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தாங்களே எடுத்து நடத்த அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் அவர்கள் அமைச்சரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், மதுரைக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையிலே 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் வருகை தர உள்ளனர். எப்போதும் போல் 3 ஜல்லிக்கட்டிலும் மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகளுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும். எந்தவித பாகுபாடும் இன்றி இந்த 3 ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெறும் என்றார்.
- ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
- ஜனநாயகன் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது.
'ஜனநாயகன்' நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படம் மற்றும் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது. இதனையடுத்து 'ஜனநாயகன்' படம் சுமார் 80% 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இதனால் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்ற இந்த படம் தற்போது Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
- திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.
- தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நிர்வாகிகள் கட்ச தாவி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று, திமுக மற்றும் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர்.
அதன்படி, தஞ்சை மத்திய மாவட்டம் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் இன்று தவெகவில் இணைகிறார்.
விஜய் தலைமையில் நடக்கும் விழாவில் ஒட்டன்சத்திரம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.
புதுவை முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, காங்கிரஸ், தேமுதிக நிர்வாகிகளும் தவெகவில் இணைகின்றனர்.
நாதகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.
மேலும், சென்னை மாநகராட்ச 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் அதிகாலை 4.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மத்திய கிழக்கு பூடான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்காள தேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 54 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 50 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வை அண்டை பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல் பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசல பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் மத்திய கிழக்கு பூடான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்காள தேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்து எழுந்த பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாதுகாப்பான இடங்களில் வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
- தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
- ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை, ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது என ஐபிடிஎஸ் தகவலை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
யாருக்கு வாக்கு?" – IPDS தரவு சொல்லும் தகவல்.
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது.
அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கனிமொழி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- 2 நாட்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்துள்ளார்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கனிமொழி, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் பயணமாக திருச்சிக்கு வந்துள்ள அமித்ஷா கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை காலையில் குறைந்து மாலையில் அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,00,800-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.12,600-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும், ஒரு கிராம் ரூ.12,600க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
4-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
3-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,800
2-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,640
1-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520
31-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
4-1-2026- ஒரு கிராம் ரூ.257
3-1-2026- ஒரு கிராம் ரூ.257
2-1-2026- ஒரு கிராம் ரூ.260
1-1-2026- ஒரு கிராம் ரூ.256
31-12-2025- ஒரு கிராம் ரூ.257
- ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட் ஆனார்
- ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட்டாக நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.
97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் நெசர் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
- பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.
- பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.
டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்நிலையில் பராசக்தி படத்திற்கு கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பராசக்தி டிரெய்லர் அற்புதமாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாமுரளி, சுதாகொங்கரா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.






