என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.
    • மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது.

    மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் GST-ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டெல்லியில் கூடி ஆலோசித்த புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    GST வரி குறைப்பு சீர்திருத்தம் மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலனை பாதுகாக்க அனைத்து மாநிலங்கள், மத்திய அரசின் ஆதரவு கோரும் வரைவு GST கவுன்சிலிடம் வழங்கப்படும்.

    மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது.

    குறைப்பு விகிதங்களின் நன்மைகள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம்.
    • சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம்.

    ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. ஆக லட்சுமி, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆக அனிஷா ஹுசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சென்னை மாநகர போக்குவரத்துப்பிரிவு வடக்கு மண்டல இணை ஆணையராக சோனல் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சென்னை மாநகர சிபிசிஐடி கண்காணிப்பாளராக ஜவஹர், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக சுஹாசினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * கோவை காவல் தலைமையக துணை ஆணையராக திவ்யா, பதவி உயர்வு பெற்ற சஜிதா சென்னை சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * சிபிசிஐடி-யில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு அதன் எஸ்.பி.யாக சஜிதா ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




     


    • சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
    • சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்

    புதுடெல்லி:

    முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க தான் விடுவித்த கோரிக்கை குறித்து விரைவாக முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது சுப்பிரமணிய சுவாமியின் மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    • ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது.
    • இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது.

    டோக்கியோ:

    இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    டோக்கியோ விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதை கண்டுகளித்த பிறகு பிரதமர் மோடி தனது 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டோக்கியோவில் வந்து இறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்தப் பயணத்தின்போது பிரதமர் இஷிபா மற்றும் பிற தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர் நோக்குகிறேன். மேலும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

    விமான நிலைய வரவேற்புக்கு பிறகு பிரதமர் மோடி இந்திய ஜப்பான் தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்தியா-ஜப்பான் கூட்டு பொருளாதார மன்ற கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று இந்தியா அரசி லில் நிலைத்த தன்மையுடன் உள்ளது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையுடன் உள்ளது. கொள்கைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல உலகளவில் பொருளாதாரத்தில் மிகமிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது.

    மிக விரைவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையான இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்போது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.

    ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் நிலையான, வளர்ந்த, செல்வசெழிப்பு மிக்க ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும்.

    இந்தியாவும், ஜப்பானும் வெற்றிகரமாக ரோபாடிக்ஸ், செமி கண்டக்டர்ஸ், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்காற்ற முடியும்.

    இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் இருந்து ஸ்டார்ட் அப் தொழில் வரை ஜப்பானின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்து இருக்கின்றன. தொடர்ந்து இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வருமாறு நான் அழைக்கிறேன்.

    இந்தியாவில் தயார் செய்து உலகம் முழுக்க கொண்டு செல்ல உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் அதற்கு ஏற்ப நிலையானதாக இருப்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் நீங்கள் செய்யும் தொழில் முதலீடு சாதாரணமாக வளர்ச்சி அடைவது இல்லை. அந்த முதலீடு பல மடங்காக வளர்ச்சி அடையும் ஆற்றல் கொண்டது. எனவே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    அது மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள பொருளாதார நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தோழமை கொடுக்கும் முதல் நாடாக ஜப்பான் விளங்குகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த துறைகளில் தனியார் துறை ஊக்குவிக்கப்படுகிறது.

    இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் கண்காணிப்பதோடு மட்டுமின்றி நினைத்து பார்த்து எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது.

    இந்தியாவில் இளைஞர்கள் சக்தி அதிகம் உள்ளனர். அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களது கடமையாகும். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மீண்டும் அழைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது.
    • கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் உள்ளது.

    இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது.

    இந்நிலையில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (வயது 18) நேற்று தனது மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார்.

    வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி மோட்டார் சைக்கிளை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்று துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளார்.

    வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

    • மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
    • காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

    சென்னை:

    தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள சங்கர் ஜிவால் வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இதையொட்டி இன்று மாலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவாலுடன், காவல் துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் உள்ள டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.

    இதைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த விழாவில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சங்கர் ஜிவால், சைலேஸ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள்.

    டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம்-ஒழுங்கு பதவியில் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது தான் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகள் முன்னணி நிறுவனங்களில் என்ஜினீயராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பிறகே ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். மதுரை மற்றும் சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ள சங்கர் ஜிவால், திருச்சி கமிஷனராகவும், உளவு பிரிவில் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறப்பான பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

    தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ள போலீஸ் டி.ஜி.பி சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். அதேபோல் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

    பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமன் குறித்த தகவல்கள்...

    * 1968-ம் ஆண்டு மே 8-ந்தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    * இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம்.

    * நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார்.

    * ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்.

    * கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.

    * தற்போது சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.

    • நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

    • சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
    • செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    சென்னை:

    நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.

    செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்?
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்தது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். 

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • விஷாலுக்கு இன்று திருமண நிச்சயம் நடந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. திரைப்படம் இதுவரை 500 கோடியை கடந்துள்ளது.

    மேலும் நடிகர் விஷால் அவர் காதலித்து வந்த நடிகை தன்ஷிகா இருவருக்கும் இன்று அவர்களது இல்லத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம்  நடந்தது.

    சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் " சினிமாவில் 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக இருப்பது உலக சாதனை, ரஜினிகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்" என கூறியுள்ளார்.

    • பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
    • விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்கள்.

    எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.

    நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.

    உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.

    மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 



    • விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.

    இந்நிலையில், 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

    ×