என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சி தங்களுக்கே சொந்தம் என இருவரும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து உள்ளது. டாக்டர் ராமதாஸ் தி.மு.க. பக்கம் செல்வதா அல்லது அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கூட்டணியில் பா.ம.க.வை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ராமதாஸ் எந்த பக்கம் செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள 21 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்களுடன் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை ராமதாஸ் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
    • கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

    கோவை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டல அளவில், மாநாடு நடத்தி வருகிறது.

    முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடானது இன்று மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடக்க உள்ளது.

    இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இதற்காக அவர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    பின்னர் அவர் கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்று நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சி.டி.சி மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு சென்றார். அங்கு கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.

    அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் பகுதிக்கு வருகிறார்.

    அங்கு நடக்கும் தி.மு.க இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.

    துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.

    அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட மாநகர செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக மாநாட்டிற்கு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    கோவையில் நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள், 39 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை, வாக்குச்சாவடி அளவிலான இளைரணி நிர்வாகிகள் அனைவரும் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

    மாநாட்டையொட்டி கணியூர் டோல்கேட் பகுதியில் பிரமாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.

    மாநாட்டு பந்தலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    70வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப். 21) கேரளா மாநிலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய திரையுலகின் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர், நடிகர் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படத்திற்காக முதன்மை கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சிவகார்த்திகேயன் வென்றார்.

    விருது வாங்கிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், "13 ஆண்டுகளுக்கு முன் ஃபிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு தனுஷ் சாருடன் வந்திருந்தேன். ஜாலியாக சென்று வருவோம் என்று தனுஷ் என்னை அழைத்து வந்திருந்தார். அப்போது இரண்டாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆனது.

    அமரன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கமல் ஹாசன் சார் அலுவலகத்தில் நிறைய விருதுகள் இருந்தன. அப்ோது அவர், எனக்கு இது போதும் இனி இளம் திறமைசாலிகள் விருது பெற வேண்டும் என்று கூறினா்.

    அப்போது எனக்கு அமரன் திரைப்படத்திற்காக இந்த விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து, தூக்கி வீசினாலும், தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இன்று ஃபிலிம்ஃபேர் விருதுடன் நிற்கிறேன்," என்றார்.

    • அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.
    • , வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    பூமத்தியரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

    இந்த காற்றழுத்த பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடக்கத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வடகிழக்கு திசை நோக்கி நகரும்.

    இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
    • அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

    சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.

    பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

    தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • ரிஷபம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம்.
    • மிதுனம் பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம்.

    மேஷம்

    அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். பண வரவு சிறப்பாக இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், இன்னல்கள் மறையும். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். குடும்ப குழப்பங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் விலகி மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகமாகும்.

    சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை பலன் தரும். சிலருக்கு வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும். திருமண முயற்சி வெற்றி தரும். புதிய வீடு வாகன யோகம் கிடைக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாழக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.

    ரிஷபம்

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய காலம். ராசிக்கு செவ்வாயின் 4-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. இரு அசுபகிரகங்களின் பார்வை ராசிக்கு உள்ளதால் சற்று ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். புதிய தொழில் துவங்க ஏற்ற காலம். அரியர்ஸ் ஓவர் டைம் ஊதியம் இப்பொழுது கிடைக்கும்.

    சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திருமணம், குழந்தை பேறில் நிலவிய தடைகள் அகலும். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். வாராகி அம்மனை வழிபடவும்.

    மிதுனம்

    பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம். இந்த வாரத்தில் ராசி அதிபதி புதன் வக்கிரகதியில் செல்ல இருக்கிறார். எனினும் ராசியில் நிற்கும் குருவின் பலத்தால் உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். அடமான நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். குல தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    இஷ்ட தெய்வ அனுகிரகம் உண்டாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினைகள் கூட தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். புதன் கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை வழங்கவும்.

    கடகம்

    தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் பார்வை உள்ளது. இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடைந்து வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வரக்கூடிய இடர்பாடுகளை உணரும் உள்ளுணர்வு அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.

    உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். பூர்வீகத் தொழிலால் கவுரவம் கூடும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். போட்டி பந்தயங்கள், கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. வெளிநாட்டு பயணம் சுமூகமாகும். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். சுப பலன்களை அதிகரிக்க சனிக்கிழமை காளியை வழிபடவும்.

    சிம்மம்

    வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். ராசி அதிபதி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், ராகுவுடன் இணைந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவருக்கும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

    மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விற்பனை முலம் பெரும் பணம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்தவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய அற்புதமான காலம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த நோய்கள் சாதாரண வைத்தியத்தில் குணமாகும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள். அம்பிகையை வழிபடவும்.

    கன்னி

    நிம்மதியான வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறில் வக்ரம் அடைகிறார். முக்கிய முடிவுகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள். தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப்பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். குல தெய்வம், பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள்.

    உங்கள் முயற்சி புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். தந்தையின் ஆரோக்கியத்திற்கு வைத்திய செலவு செய்ய நேரும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் நிலவிய மனக்கசப்புகள் தீரும். 23.2.2026 அன்று இரவு 10.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.

    துலாம்

    அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். அதிர்ஷ்டத்தை கூறுமிடமான ஐந்தாம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு சேர்க்கை உள்ளது. இது எதிர்பாராத பணவரவை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம். பங்குச்சந்தை ஆதாயம் பல மடங்கு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலக பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்குச் சென்று நீண்ட நாட்களாக நினைத்திருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

    கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் நன்மைகள் உண்டு. 23.2.2026 அன்று இரவு 10.12 முதல் 26.2.2026 நள்ளிரவு 12.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதே போல் விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் கொடுப்பதை வாங்குவதை தவிர்க்கவும். தினமும் லலிதா சகஸ்ரநாமம் கேட்கவும்.

    விருச்சிகம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்து நான்காமிடமான சுகஸ்தானம் செல்கிறார். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும், ஆதாயம் அதிகரிக்கும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். மனத் தடுமாற்றம் குறையும். மாணவர்கள் ஆர்வமாக படிப்பார்கள். தான தர்மங்கள் செய்வதால் நிம்மதி அதிகமாகும்.

    பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். காதல் திருமணம் கைகூடும். 26.2.2026 நள்ளிரவு 12.55 முதல் 28.2.2026 அதிகாலை 3.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் சொந்த பந்தங்களின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். சிவ வழிபாட்டால் மேன்மை பெற முடியும்.

    தனுசு

    இடப்பெயர்ச்சி பற்றிய சிந்தனை உதயமாகும் வாரம். ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை உள்ளது. இது அர்த்தாஷ்டம சனியின் காலம் என்பதால் வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர்மாற்றம் பற்றிய சிந்தனைகள் கூடும். கணவன்-மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். திருமண முயற்சி சாதகமாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

    மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கலாம். தியானம், யோகா போன்ற ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். ஸ்ரீ கால பைரவரை வழிபட நிம்மதி கூடும்.

    மகரம்

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசியில் சஞ்சரித்த உச்ச செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயரும். திருமணத் தடை அகலும். காதல் திருமணம் முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். உயர் அதிகரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி தரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

    உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். குலதெய்வத்திடம் ஒரு முக்கிய கோரிக்கை வைப்பீர்கள். தினமும் சிவபுராணம் படிப்பதால் அமோகமான மாற்றங்கள் உண்டாகும்.

    கும்பம்

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசியில் சில கிரகச் சேர்க்கை உள்ளது. சில பாதகங்கள் மற்றும் சாதகங்களும் இருக்கும் என்பதால் தெளிவான மனநிலையில் செயல்படுவது நல்லது. சில கும்பராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். தந்தைவழி உறவில் நல்ல விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

    பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். சிலர் பிள்ளைகளின் கல்விக்காக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சாதகமாகும். குடும்ப உறவுகளுக்கு நண்பர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பல சாதகங்கள் நடந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும். ராகுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடவும்.

    மீனம்

    பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி குரு சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கிடைக்கும். வீடு, வாகன முயற்சி சித்திக்கும். தாய்வழிச் சொத்து தேடி வரும். உபரி வருமானம் கிடைப்பதால் தாராளமாக செலவு செய்து சந்தோஷமாக இருப்பீர்கள். பங்குச் சந்தை ஆதாயமும் சேமிப்பும் அதிகரிக்கும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    மனதை மகிழ்விக்கும் சம்பவங்கள் நடக்கும். உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைப்பது உறுதி. புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். விண்ணப்பித்த அரசு உத்தியோகம் தொடர்பான நல்ல செய்தி தேடி வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் வாரிசு உருவாகும். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

    ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட் சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் வேலைகளை செய்து வருகிறது. அப்படியாக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தரப்பில் குழுக்களை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

    தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.

    முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது. டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளை தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வரும் 26-ந்தேதி பேச்சுவார்த்தைக்கு தி.மு.க. அழைத்துள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.
    • மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை.

    தருமபுரி:

    தருமபுரி அருகே வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, திருமணம் மண்டபம் கட்ட, 80 லட்சம் ரூபாயை, பா.ம.க. தலைவர் அன்புமணி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.

    இதில், ஒன்றிய பொதுநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதி உட்பட, 1.14 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம், உணவருந்தும் கூடம், சுகாதார வளாகம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. அதை, பா.ம.க. தலைவர் அன்புமணி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பது, பொங்கலுக்கு, 3,000 ரூபாய் கொடுப்பது என, மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் ஆண்டு முழுவதும் தான் பாதிக்கப்படுகின்றனர்.

    அதற்கு பணம் கொடுத்து விட்டால் தீர்வாகி விடாது. மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி தான் தேவை. கடந்த, 2021-ல், தி.மு.க. அளித்த, 505 தேர்தல் வாக்குறுதியில், 66 மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது.

    கடந்த, 12 நாளில், 16,000 கோடி ரூபாய்க்கு, 4,385 ஒப்பந்த பணிகள் போடப்பட்டுள்ளன.

    ஆட்சியின் கடைசி காலத்தில் கொள்ளையடிக்கும் வேலையை, தி.மு.க.வினர் செய்கின்றனர்.

    2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் போட்டி. தமிழகத்தில் பெண்களால், அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    • தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.
    • தமிழகம் முழுவதும் ஏராளமானோர் வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.

    உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வை யாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி வெளியானது.

    இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 பேர் எழுதினார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தது.

    அதனைத்தொடர்ந்து அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த 8-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு நடைபெற இருந்தது. சென்னையில் 7 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது.

    தேர்வர்களுக்கான தேர்வு மைய விவரங்கள், ஹால் டிக்கெட்டில் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மையத்திற்கு தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறால் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, தமிழகம் முழுவதும் குரூப்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமானோர் வந்து தேர்வு எழுதி வருகின்றனர்.

    • திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கழுவனை சேரியை சேர்ந்தவர்கள், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சி விளக்கு அருகே சென்று கொண்டிந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் கோயமுத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.

    இதில் கழுவனை சேரியை சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து பந்தல்குடி இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். 

    • பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
    • 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

    வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.

    இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.

    இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்தது.

    இதனால், டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.

    பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறினார்.

    இந்நிலையில், இந்தியா வங்கதேசம் இடையே 2 மாதங்களாக முடங்கியிருந்த விசா சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

    புதிய அரசு பொறுப்பேற்றபின் இந்தியாவுடன் சுமூக உறவை கடைபிடிக்க வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர் பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜயின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் தி.மு.க. தரப்பில் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. சக்தி நடராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

     

    ×