என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
    • இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும்.

    புதுடெல்லி:

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

    குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அத்துறை கடுமையாக பாதிக்கும்.

    இந்த நிலையில் பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ஜவுளித்துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, கடந்த 19-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை பருத்திக்கான இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது.

    ஏற்றுமதியாளர்களை மேலும் ஆதரிக்கும் வகையில், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை செப்டம்பர் 30-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. மேலும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 18-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.

    இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும். உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    உள்நாட்டு சந்தையில் கச்சா பருத்தி கிடைப்பதை அதிகரித்து பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தம் குறையும். இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும் என்று அரசு தெரிவித்து உள்ளது.

    • கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
    • வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் சுமார் 30 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15000 கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மேலும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் விலை அதிகம் உள்ள ஆடைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இதில் லாபமும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 50 சதவிகித வரி விதித்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் அவை விற்பனையின்போது 150 ரூபாய் என்ற உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம் வியட்நாம் ஜோர்டான் போன்ற நாடுகளில் பனியன் ஆடைகளை வாங்க வர்த்தக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு பெற்ற ஆர்டர்கள் முழு பணியும் நிறைவடைந்து பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெறாமல் அமெரிக்க வர்த்தகர்கள் தாமதம் செய்து வருவதால் தங்களின் முதலீடு முடங்கி உள்ளதாகவும் பெரும் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் தயார் நிலையில் உள்ள ஆடைகளை பெறாமல் அப்படியே நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை பெற முடியாமல் உள்ளேன். இந்த தொகை முழுவதும் கடன் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என தெரியவில்லை வர்த்தகர்கள் உடனான சந்திப்புக்கு பிறகே நிலை தெரியும் இந்த நிலை மாற விரைவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுகுறு நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரும் என தெரிவித்தார்.

    திருப்பூரில் தயார் நிலையில் 10 லட்சம் ஆடைகள் மற்றும் உற்பத்தி நிலையில் 25 லட்சம் ஆடைகள் என சுமார் 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேங்கி உள்ளதாகவும் வரி விதிப்பு குறித்த முறையான தெளிவான அறிவிப்பு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆரம்ப நிலையிலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் மேலும் இடைக்காலமாக மற்ற நாடுகளிடமிருந்து ஆடைகள் வாங்கப்பட்டால் வர்த்தகர்களை மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வருவது சிரமமான நிலையை அடையும் என்பதால் இதில் தாமதமின்றி அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது.
    • பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை.

    பெரம்பலூர்:

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடந்த த.வெ.க. மாநில மாநாட்டில் கட்சி தொண்டர் சரத்குமார் என்பவரை தலைவர் விஜய் முன்னாலே பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடந்த மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது சரத்குமார் இல்லை என த.வெ.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி போட்டது சரத்குமாரே இல்லை. புகார் கொடுத்துள்ள சரத்குமார் அந்த இடத்திற்கு வரவே இல்லை. சரத்குமாரின் அம்மா பேட்டியை பார்த்து விட்டு அவரிடம் அது பற்றி கேட்ட போது, அது நான் இல்லை, அங்கு நான் செல்லவில்லை என தெரிவித்தார்.

    மேலும் எனது சட்டையை பார்த்து விட்டு யாரோ சொன்னதைக் கேட்டு எனது அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனில் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.

    நாங்கள் 100 சதவீதம் சொல்கிறோம் பவுன்சர்கள் தூக்கி போட்டது இந்த பையன் இல்லை. இது ஒரு தவறான தகவல். யாருடைய தூண்டுதலின் பேரிலே இப்படி புகார் கொடுக்கப்பட்டு, எங்கள் கட்சித் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு என்பது முக்கியம். ரசிகர் என்ற முறையில் அதை தாண்டி அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை பவுன்சர்கள் தடுக்கிறார்கள். யாரையும் தூக்கி போடவில்லை.

    தள்ளி விடும்போது அவர் கம்பியை பிடித்து இறங்கி வருகிறார். உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது. கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் தான். அவரும் பேட்டி கொடுத்துள்ளார். நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன், நான் சென்றது தவறுதான், நான் போய் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    மாநாட்டுக்கு சரத்குமார் 2-வது நாள் தான் சென்றதாக கூறினார். முதல் நாள் சென்றவர்கள் மட்டுமே நடைமேடை அருகே செல்ல முடியும், காரணம் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்று செய்கிறார்கள்.

    இதன் பின்னணியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், தற்போது உள்ள ஆளுங்கட்சி தான், அவர்களாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. புகார் கொடுத்த சரத்குமார் போட்டிருந்த சட்டையை வைத்து முடிவுக்கு வர முடியாது. அதுமட்டுமின்றி கீழே விழுந்தவருக்கும், புகார் கொடுத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யான வழக்கு. அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கட்சி தலைமையின் ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன.
    • குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வராக்கடன்களாக அறிவிப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) கடுமையான இன்னல்களுக்குள்ளாகியுள்ளன; இதன் விளைவாக வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல், அவை வராக்கடன்களாக (NPAs) ஆக மாறும் அபாயமும் உள்ளது என எனது கவனத்திற்கு தொழில் முனைவோர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன. ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகள்—அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ள இவை - மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தத் துறைகளில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 70% க்கும் அதிக பங்கு உள்ளது. இரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது; அந்தத் துறையின் ஏற்றுமதியில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 40% பங்கு உண்டு.

    தமிழ்நாட்டில் இத்தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது, ஏனெனில் இது ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய மாநிலமாகும்; இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி, விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரெனக் கையிருப்புகள் அதிகமாகக் குவிந்து வருகின்றன. நூற்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

    இந்த நிலைமை குறு சிறு நடுத்தர தொழில்கள், வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வராக்கடன் வகைக்கு தள்ளக்கூடும்; இதன் விளைவாக அந்நிறுவனங்களின் எதிர்காலக் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படும்.

    இந்தச் சூழலில், ஒன்றிய நிதியமைச்சரின் உடனடி தலையீட்டை நாடுகிறேன். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.
    • ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த மதுபான பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் அனைவரும் பாரில் இருந்து புறப்பட்டனர். பாரை விட்டு வெளியே வந்தபிறகும் அவர்களுக்கும் தகராறு நடந்தது. அதன்பிறகு ஐ.டி. ஊழியர் அங்கிருந்து தனது காரில் ஆலுவா நோக்கி சென்றிருக்கிறார்.

    அப்போது நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழி மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி தாக்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகார் செய்தார். அவர் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் மதுபான பார் மற்றும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடிகையின் நண்பர்கள், ஐ.டி.ஊழியரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களின் மீது ஆள் கடத்தல், தாக்குதல், மிரட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    அதில் தகராறு நடந்த போது லட்சுமிமேனன் இருந்தது தெளிவாக தெரிந்தது. ஆகவே ஐ.டி.ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடினர்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் தங்களின் மீது புகார் கொடுத்துள்ள நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அவர் ஜாமின் மனுவில் கூறியிருப்பதாவது:-

    புகார்தாரர் என்னை ஒரு பாரில் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் பாரை விட்டு வெளியேறிய பிறகும், அந்த நபர் காரில் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கினார். ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் அந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    அவரது மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கு பரிசீலிக்கப்படும் எனவும் நடிகையின் மனுவை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

    ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
    • பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப (IT) துறைக்கும் அது ஒரு பெரிய சவாலாக உருவாகி வருகிறது. குறிப்பாக, சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளின் பயன்பாடு, அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ஐடி துறையின் வருவாயைக் கடுமையாகப் பாதிக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை எச்சரித்தும் இருந்தது.

    சாட்ஜிபிடியால் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் குறியீடுகளை எழுதுவது, பிழைகளைச் சரிசெய்வது, எளிய தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளைத் திறம்படச் செய்ய முடியும்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறாக பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அமெரிக்காவில் சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பிறகு 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்ஏஐ மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

    • அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனை நடவடிக்கைகளால் இந்தியா அடிபணியாது.
    • இந்தியா அமெரிக்க தடைகளில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், பல வருட பொருளாதார வளர்ச்சியை காண மீண்டும் எழுச்சி பெற்றது.

    பொருளாதாரத் தடைகள் முதல் பரஸ்பர வரிகள் வரை, இந்தியாவிற்கு அளிக்கப்படும் உதவிகளை தடுப்பது, சர்வதேச கடன்களைத் தடுப்பது மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களைத் தடை செய்தல் மூலம் அமெரிக்கா பலமுறை இந்தியாவை அழுத்த முயற்சித்துள்ளது.

    இருப்பினும், இந்தியாவின் திறமையான ராஜதந்திரம் மற்றும் உள்நாட்டு வளர்ச்சி மூலம் இந்த தண்டனை நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்தது மட்டுமல்லாமல், வலுவான இருதரப்பு உறவுகளையும் ஏற்படுத்தியது.

    1998-ம் ஆண்டு பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அளித்த பேட்டியில்,

    ஆம், எங்கள் நடவடிக்கைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. இந்தியாவிடம் மகத்தான வளங்களும் உள் வலிமையும் உள்ளது.

    1998-ம் ஆண்டு இந்தியா அமெரிக்க தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தேசிய பாதுகாப்பிற்காக அணு ஆயுத சோதனைக்கு உறுதியளித்தது.

    புத்தர் மீண்டும் சிரித்தார் என்ற செய்திக்குப் பிறகு, மே மாதத்தில் தடைகள் வந்தன.

    இந்தியா அமெரிக்க தடைகளில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், பல வருட பொருளாதார வளர்ச்சியை காண மீண்டும் எழுச்சி பெற்றது.

    தடைகள் நம்மை பாதிக்காது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனை நடவடிக்கைகளால் இந்தியா அடிபணியாது.

    இந்த வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் இந்தியா தனது கடந்த கால மகிமையையும் எதிர்கால கண்ணோட்டத்தையும் வலுவாக மாற்றி உள்ளது என்று வாஜ்பாய் கூறினார்.

    இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே 11 முதல் 13 வரை, ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா சோதனைகளை நடத்தியது.

    டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வாஜ்பாயின் வார்த்தைகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.

    • தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
    • குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது.

    கோவை:

    கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவி வந்தது. நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியை ஓட்டிய இடங்களில் மழை கொட்டியது.

    இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும், கடும் குளிரால் வெளியில் வர முடியாமல் விடுதிகள், லாட்ஜ்களிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    • சுபமுகூர்த்த நாளையொட்டி தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
    • இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், நேற்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், சுபமுகூர்த்த நாளையொட்டி மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,405-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையாகிறது.

    இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    23-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-08-2025- ஒரு கிராம் ரூ.130

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    23-08-2025- ஒரு கிராம் ரூ.130

    • சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
    • கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சகோதரர் உறவுமுறை உள்ளவரை காதலித்த சிறுமி (17) 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

    சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    ×