என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெள்ளப் பெருக்கு ஏற்படும் என பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
- இந்த எச்சரிக்கையால் 1.5 லட்சம் பாகிஸ்தானியர் உயிர் தப்பினர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கனமழை பெய்து வரும் சூழலில் சிந்து நதியின் கிளையான தவீ ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக மனிதாபிமான அடிப்படையில் அந்நாட்டுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.
பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு இது குறித்துத் தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய அரசின் எச்சரிக்கையால், பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள ஆற்றங்கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1.5 லட்சம் பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்த நிலையிலும், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால் 1.5 லட்சம் பேர் உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
- இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
சூரிச்:
டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். இறுதிச்சுற்றில் ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3வது இடம் பிடித்தார்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் சாதவிக் சிராக் ஜோடி 2வது சுற்றிலும் வெற்றி பெற்றது.
பாரிஸ்:
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி, சீனாவின் லியனக் வெய் காங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21 என முதல் செட்டை இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது.
- வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்,
புதுடெல்லி:
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே விதித்த 25 சதவீதம் வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீதம் வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா வரி விதிப்பால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று வழியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக கூறியதாவது:
வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசிடம் இருந்து உடனடி பதில் எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பொருட்களுக்கான 11 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது உள்ளூர் வணிகத்தை கடுமையாக பாதிக்கும். பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அடிபணியவில்லை; அவர்கள் கூடுதல் வரியை விதித்துள்ளனர். எனவே நாமும் கூடுதல் வரியை விதிக்க வேண்டும்.
அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தால், இந்தியா 100 சதவீத வரியை அமெரிக்காவிற்கு விதிக்க வேண்டும். மொத்த நாடும் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கும். எந்தவொரு நாடும் இந்தியாவை புண்படுத்த முடியாது. 140 கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா என தெரிவித்தார்.
- தனி ஒருவன் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
- இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'. இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இப்படமே படச்சுருள் வைத்து எடுக்கப்பட்ட கடைசி திரைப்படமாகும். இதற்கு பிறகு அனைத்தும் டிஜிட்டல் ஆனது. இப்படத்தின் பலமே படத்தின் திரைக்கதையும் காட்சியமைப்பும் தான். இப்படத்திற்கு பின் பல துணை இயக்குநர்கள் மற்றும் ஜீவா,ரவி சக்கரவர்த்தி போன்ற பல இணை இயக்குநர்கள், எழுத்தாளர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பு அதிகம் இருக்கிறது.
தனி ஒருவன் திரைப்படம் நடிகர் ரவி மோகன் நடித்து 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் திரைப்படமாகும்.
இந்தநிலையில், 2015-ம் ஆண்டு தனி ஒருவன் இயக்குநர் ராஜாவுடன் ஹிப்-ஹாப் குழு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளின் அதிகாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்"என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் ரவி மோகன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டோர் தங்களது பதிவுகளை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
- ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது.
- கிடைக்கும் வருவாயை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு.
இந்திய பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சீனா செல்கிறார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இருநாட்டின் 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசெய் அகாசவா, இன்று அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்ல இருந்தார்.
பேச்சுவார்த்தை முடிவில் 550 பில்லியன் டாலர் முதலீடு திட்டத்தை முறையாக உறுதிப்படுத்த இருந்தது.
அமெரிக்க தரப்புடன் ஒருங்கிணைப்பின் போது நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
- இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடைசியாக கிங்ஸ்டன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதனை தொடர்ந்து பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.
- உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை.
- நாங்கள் முடிவு செய்வதில்லை.
பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேடும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். இதனால் பாஜக தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபர்தான் பாஜக-வின் தேசிய தலைவராவார் என்ற பார்வையும் உள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-
உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை (நகைச்சுவையாக). நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் முடிவு செய்வதாக இருந்தால், இவ்வளவு காலம் எடுத்திருக்கமாட்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நான் நிபுணர். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை மட்டுமே சொல்ல முடியும். எங்கேயும் மோதல் இல்லை. ஆனால், எல்லா பிரச்சனையிலும் ஒரே பக்கமாக இருக்கும் என்பது சாத்தியமற்றது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்புகிறோம்.
இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.
- சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'மதராஸி' படத்தின் டிரெய்லர் யூடியூபில் பல மொழிகளை சேர்த்து 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
இதற்கிடையே, மதராஸி படத்தின் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.படத்தின் நேரளவு 2 மணி நேரம் 47 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
- துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
- பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12.20 மணிக்கு துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
மதுரையில் இருந்து துபாய் செல்ல தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
130 பயணிகளுடன் ஓடுபாதைக்கு சென்றபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- இந்திய இளைஞர் அணி,16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கசகஸ்தானில் நடைபெற்றது.
- இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.
இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அபார வெற்றி பெற்று, பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியது.
டிராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவு
தனிஷ்கா – தங்கப் பதக்கம்
நிலா ராஜா பாலு – வெள்ளிப் பதக்கம்
அந்த்ரா ராஜ்சேகர் – வெண்கலப் பதக்கம்
டிராப் யூத் மகளிர் அணி – தங்கப் பதக்கம்
டிராப் யூத் ஆண்கள் தனிநபர் பிரிவு
யுகன் S M – தங்கப் பதக்கம்
டிராப் யூத் ஆண்கள் அணி – தங்கப் பதக்கம்
இந்த வெற்றியின் சிறப்பம்சம், இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.
மேலும், நிலா, தமிழ்நாடு மாநில அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மகள்.
அந்த்ரா ராஜ்சேகர், பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அவர்களின் மகள்.
இளம் வீரர்கள் பெற்ற இந்த அற்புத சாதனை, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
- Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.
- ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார்.
Origin Studios சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. Production NO 1 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ராஜ்குமார் ரங்கசாமி இப்படத்தை இயக்குகிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.
குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் ஃபேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். படம் பற்றி இயக்குனர் ராஜ்குமார் ரங்கசாமி கூறியதாவது:
இந்த உலகில் காதலும் அன்பும் அதன் இயல்பு தன்மையை மாற்றாமல் இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளும் அதே வேளையில் அவற்றின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பதை நாம் மறுக்க இயலாது.
90s கிட்ஸ், 2K கிட்ஸ் .. வரிசையில் இன்றைய இளைஞர்களை ஜெனரேஷன் ஆல்ஃபா என்று சொல்கிறார்கள்..
இவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் முழுமையாகப் பிறந்த முதல் தலைமுறை மற்றும் COVID-19 தொற்றுநோய் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் ஆதிக்கத்தால் வடிவமைக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை அனுபவித்தவர்கள். எல்லா தருணங்களிலும் CELEBRETING MINDSET - ல் இருக்ககூடியது இந்த ஜென் தறைமுறை. இவர்கள் மிகவும் அட்வான்சாக யோசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சகிப்புத்தன்மை, வெறுப்புணர்வு மேலோங்கி இருக்கும் இந்த சூழலில் உறவுகள் என்பது வேர்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படாமல் அதை விட்டு விலகிய நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொருவர் கருத்தை ஒத்து கொள்வதை தாண்டி அதை கேட்க கூட யாரும் தயாராக இருப்பதில்லை. ஆனால் அடிப்படையான ஒன்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எந்த தறைமுறையாயிருப்பினும் அதன் ரூட் அதாவது வேர் என்பது முக்கியம். வேர்களை விட்டு விலகாத ஒரு வாழ்க்கை வேண்டும். அதுவே
அடுத்த தறைமுறையினரின் மீட்சியாக இருக்கும். சிந்தனைகளிலும், தொழில்நுட்பத்திலும் மிகவும் அட்வான்சாக வாழ்ந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினர் காலம் காலமாக இருந்து வரும் மனிதர்களின் இயல்பான சில நல்ல விஷயங்களை கற்று கொள்ளாமல், கற்று கொடுக்க படாமல் இருப்பதை மனதில் கொண்டு அதை கருவாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
அலட்டி கொள்ளாத, உறவுகள் இன்றி வாழும் ஒருவன்.., குடும்பம், பெற்றோர் என்று சார்ந்திருக்கும் ஒரு இளம் பெண் இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் உறவு எப்படி செல்கிறது என்பதே இப்படத்தின் கதை.
96 படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.
பட தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறியதாவது:
இயக்குனராக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் எனது நண்பர் ராஜ்குமார் ரங்கசாமி இந்த கதையை என்னிடம் கூறினார். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சரியான கதையாகவும், சொல்ல வேண்டிய கதையாகவும் இருந்ததால் அதனை தயாரிக்க முடிவு செய்தேன்.
இப்படத்தை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க எங்களது நிறுவனம் திட்டமிட்டுள்ளது
இவ்வாறு தயாரிப்பாளர் கண்ணதாசன் கூறினார்..







