என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
பாடந்தொரை-அலவயல் பிரதான சாலை முழுவதும் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தண்ணீர் வடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே மக்கள் அவ்வழியாக சென்றனர். கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மெதுவாக சென்றன.
கனமழைக்கு பாடந்தொரை மற்றும் அலவயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வாளி மூலமாக வெளியேற்றினர். சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு தேவாலா அருகே வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் மனைவி சந்திரிகா(50) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் அந்த பகுதியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது.
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி பொன்னானி, நெலாக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் கூடலூர், கோழிக்கோடு சென்ற அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த படியே சென்றன.
ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.
மேலும் நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
- திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.
நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.
இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
- கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது.
தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது பண்பாடு.
தாய்லாந்தில் காலை 8 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்படி ஒரு பள்ளியில் காலை 8 மணிக்கு தேசியகீதம் இசைக்கப்பட்டபோது பள்ளியின் கீழ்தளத்தில் நடந்து கொண்டிருந்த மாணவன், நடந்தபடியே சிலைபோல அசையாமல் நின்றான்.
படத்தில் பார்க்கும்போது அது ஓவியம்போல தெரிந்தாலும், வீடியோவாக காணும்போதுதான் மேல் தளத்தில் மற்ற மாணவர்கள் நிற்பதும், கீழ் தளத்தில் அந்த மாணவர் தனியே நடக்கும் சிலையாக தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதும் வினோத காட்சியாக பதிவாகி உள்ளதை உணர முடியும். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வைகளை ஈர்த்தது.
கடந்த ஆண்டு ஒரு பள்ளி மாணவன் தண்ணீர் குடித்த நிலையில் அசையாமல் நின்ற காட்சி வீடியோவில் பரவியது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
- கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.
இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.
பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.
பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.
துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
- நடிகர் விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- விஷாலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, இந்த நடிகை, அந்த நடிகை என பல நடிகைகளுடன் விஷால் காதல் என கிசுகிசுக்கள் வந்தன.
இதற்கிடையே, பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். விஷாலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, பிறந்த நாள் அன்று திருமணம் என்று விஷால் அறிவித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
வழக்கம்போல் இந்த முறையும் விஷால் ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.
- மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
- மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
- தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 51). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் அங்குள்ள வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சதீஷ் பா.ஜ.க. கட்சியின் நகர் வர்த்தகப்பிரிவு தலைவராகவும் இருந்தார்.
இவர் வேலை முடித்து விட்டு தினமும் நண்பர்களை சந்தித்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வேலை முடித்துவிட்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக் கடையில் சந்தித்து மது அருந்தினர். அதே பகுதியில் தாரை தப்பட்டை குழுவினர் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது அருந்தினர் போதை தலைக்கேறிய நிலையில் அந்த குழுவை சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பை சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் சரமாரியமாக தாக்கி கொண்டனர். இதில் சதீஷின் நண்பர் மணிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரை தாக்கி கீழே தள்ளினர். இதில் தவறி விழுந்ததில் அவர் மயங்கினார்.
மோதல் குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்திருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் பா.ஜ.க. நிர்வாகி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் தீலிப்குமார் கூறும்போது, "தற்போது, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி,
சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்" என்றார்.
- பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
- எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர்.
உலகம் நாகரிக வளர்ச்சி அடைந்தாலும், மூடநம்பிக்கையில் இருந்து இன்னமும் ஒரு சிலர் விடுபடவே இல்லை என்பதற்கு உதாரணமாக நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் காமினி, இவருடைய மகன் பியூஷ் (வயது 17), அங்குள்ள சரஸ்வதி வித்யா மந்திரி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற பியூஷ் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த காமினி, தனது மகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பியூஷை தேடிவந்தனர்.
இந்தநிலையில் அங்குள்ள ஒரு ஓடையில் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று, அந்த தலையை மீட்டனர். பின்னர் அதே ஓடையின் வெவ்வேறு பகுதிகளில் மற்ற உடல் பாகங்கள் தனித்தனியாக கிடந்தன. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட உடல்பாகங்களையும், காமினி கூறிய அடையாளத்தையும் வைத்து போலீசார் ஒப்பிட்டு பார்த்தபோது, அது மாயமான மாணவர் பியூஷ் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், யாரோ ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் துணியால் சுற்றப்பட்ட எதையோ அந்த ஓடையில் வீசிச்சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, அதே பகுதியை சேர்ந்த சரண்சிங் என்பவரை போலீசார் தேடினர். அவருடைய தம்பியின் பேரன்தான் பியூஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பிரயாக்ராஜில் உள்ள கரேலியில் பதுங்கி இருந்த சரண்சிங்கை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் தனது தம்பியின் பேரனை கொன்றதை ஒத்துக்கொண்டார்.
பின்னர் போலீசாரிடம் அவர் கூறியதாவது:-
என்னுடைய மகன் கடந்த 2023-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு என்னுடைய மகளும் தற்கொலை செய்து கொண்டனர்.
எனது குடும்பத்துக்கு யாரோ கெடுதல் செய்து இருப்பதால்தான் இவ்வாறு நடந்துவிட்டது என்று சிலர் கூறினர். இதனால் அதனை சரிசெய்ய உள்ளூரில் இருக்கும் மந்திரவாதி ஒருவரை சந்தித்தேன். அவர் உனது தம்பியின் பேரனால்தான் உனக்கு இந்த துன்பம் நேர்ந்துள்ளது. அவனை கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
அவரது ஆலோசனைப்படி பியூசை நரபலி கொடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து பியூசை கடத்தி, அவனது தலையை துண்டித்து கொன்றேன். பின்னர் உடல் பாகங்களையும் துண்டு, துண்டாக வெட்டி ஓடையில் வீசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சரண்சிங்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நரபலி சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர், மேக்ஸ்வொர்த் நகர், பங்களா தூபி, மாதா நகர், பொன்னியம்மன் கோவில் தெரு.
ஈஞ்சம்பாக்கம்: பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர் மெயின் ரோடு, சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச் ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, ராயல் என்கிளேவ், 1, 2வது அவென்யூ, வெட்டுவாங்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ, குப்பம் நகர், சரவண நகர், செங்குன்றம் கார்டன்.
கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, மற்றும் கெங்குரெட்டி சாலை.
கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1 முதல் 5வது தெரு, ஏ முதல் டி பிளாக், பூமகள் தெரு, சௌத் கட்டம், மவுண்ட் ரோடு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர்.
ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், இ.காந்தி நகர், பால்ராஜ் நகர், பெரியார் சாலை, கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர் மற்றும் ரூகி வளாகம்.
பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.
திருவேற்காடு: பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளாகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, பி.எச்.ரோடு, நூம்பல், பரிவாக்கம், கண்ணபாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர்.
- பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் விவாதிக்கிறார்கள்.
- இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இருக்கும்.
15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றடைந்தார். இந்த பயணம் பிரதமர் மோடியின் 8-வது ஜப்பான் பயணம் ஆகும். அவர் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் நடைபெறும் முதல் உச்சி மாநாடு ஆகும்.
இந்த மாநாட்டில் இரு நாட்டு பிரதமர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்கிறார்கள்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் விவாதிக்கிறார்கள். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இருக்கும்.
பிரதமர் மோடி, தனது பயணத்தின் 2-வது கட்டமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், 31-ந் தேதியும், செப்டம்பர் 1- ந் தேதியும் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், பல நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






