என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ராமதாஸ்- அன்புமணி இடையிலான சண்டை விரைவில் தீர்ந்து விடும்.
- நம்முடைய கூட்டணிக்குதான் வருகிறார்கள் என இ.பி.எஸ். உறுதிப்பட கூறியதாக தகவல்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கூட்டணி பற்றி பேசும்போது, அதிமுக கூட்டணி பாமக கட்டாயம் வரும் என உறுதிப்பட தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாமக-வில் டாக்டர் ராமதாஸ்-க்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல் அவர்களுடைய குடும்ப சண்டை. அந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வந்துவிடும். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நம்முடைய கூட்டணிக்குதான் வருகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியை மேலும் வலுவடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் பகுதியில் சிறிய கட்சிகள் இருந்தால், அவற்றை அதிமுக-வுடன் கொண்டு வந்து இணைக்கும் பணிகளை பாருங்கள் எனவும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- மிகுந்த வயலன்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக "பாகி 4" {Baaghi 4 } உருவாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷெராப் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடிக்கும் மிகுந்த வயலன்ஸ் காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக "பாகி 4" {Baaghi 4 } உருவாகியுள்ளது.
இந்த படத்தை சாஜித் நதியாட்வாலா எழுதி தயாரித்திருக்கிறார். படத்தை ஹர்ஷா இயக்கியுள்ளார். படத்தில் ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா, ஷ்ரேயாஸ் தல்பதே, சௌரப் சச்தேவா, உபேந்திர லிமாயேஉள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.டிரெய்லர் முழுவதும் ரத்தக் களரியாக அமைந்துள்ளது.
டிரெய்லரில் டைகர் வில்லன்களை அரிவாளால் நறுக்குவது, தலையை அறுப்பது, ஒருவரின் உடலை இரண்டாக வெட்டுவது போன்ற கொடூர ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சஞ்சய் தத்தும் அதேபோல் வன்முறையுடன் காட்சியளிக்கிறார்; ஒரு காட்சியில் துண்டிக்கப்பட்ட விரல்களுடன் விளையாடுகிறார்.
தொழில்நுட்பக் குழு
திரைக்கதை & உரையாடல்கள்: ரஜத் அரோரா
ஒளிப்பதிவு: ஸ்வாமி ஜே கவுடா
எடிட்டிங்: கிரண் கவுடா, நிதின் FCP
இசை: பாத்ஷா, தனிஷ்க் பாக்சீ, பயல் தேவ் உள்ளிட்ட பலர்
"பாகி 4" வரும் செப்டம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் **விவேக் அக்னிஹோத்ரியின் "தி பெங்கால் ஃபைல்ஸ்"** படமும் வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டி காத்திருக்கிறது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
- இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதோடு இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஜப்பான் இடையிலான 15-வது வருடாந்திர உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடி இன்று ஜப்பானில் உள்ள சுமார் 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்கள் இடையிலான கூட்டு ஒத்துழைப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா புறப்பட்டார்.
சீனாவில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். சீன அதிபரையும் சந்தித்துப் பேச திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை.
- நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின்போது, தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் என் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம். கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்படாதா? என பலர் காத்திருப்பதால் அதற்கு இடம் தந்து விடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது "எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்.
- நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதே திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கங்களில் ஒன்று என்று விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.
மத்திய அரசு 2025-2026-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையைவிட விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்கும் திட்டத்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்.
கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் நலம் காத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு இந்த ஆண்டில் நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545 என உயர்த்தி உள்ளார். அதே போல, பொதுரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500 என உயர்த்தியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 1.9.2025 முதல் 31.8.2026 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.
இதற்கான முதலமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு 29-ந்தேதி அன்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இந்த ஆண்டில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதில் சன்ன ரக நெல் 30 லட்சம் மெட்ரிக் டன். பொதுரக நெல் 12 லட்சம் மெட்ரிக் டன்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுஉள்ளது.
முதல்-அமைச்சரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரும்பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற உன்னத லட்சியத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை திறந்தவெளியில் வைத்திடக் கூடாது என்பதற்காக 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களைக் கட்டிஉள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இருவரும் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
- வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
மதுபான உற்பத்தியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட குழு உலகில் சிறந்த பீர் வகைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலிடம் பிடிக்கும் பீர் வகைகளுக்கு தங்க பதக்கமும், 2- வது வகைக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடிக்கும் பீருக்கு வெண்கல பதக்கம் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில் உலக பீர் வகைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிம்பா பீருக்கு சிறந்த சுவைக்கான விருது கிடைத்துள்ளது.

சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பான சிம்பா விட்டிற்கு வெள்ளி பதக்க விருதும், சிம்பா ஸ்டவுட் பீர் வகை வெண்கல பதக்க விருதும் பெற்றுள்ளது.
இதில் சிம்பா விட் பெல்ஜியம் விட் பாணியில் தயாரிக்கப்படுகிறது. மிக குறைந்த கசப்பு தன்மையுடன் ஆரஞ்சு தோல், கொத்தமல்லி, கோதுமை மால்ட் உள்ளிட்டவைகள் அடங்கிய பொருட்களும் சிறந்த நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகிறது.
வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் கிடைத்ததன் மூலம் இந்தியாவில் மதுபான துறை வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது. உலக அளவிலும் இந்திய தயாரிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
- இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- சீனா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் ஏ பிரிவில் உள்ளன.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. சீனா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் மலேசியா 4-1 என்ற கோல் கணக்கில் வங்காள தேசத்தையும், தென் கொரியா 7-0 என்ற கணக்கில் சீன தைபேயையும் (பி பிரிவு), ஜப்பான் 7-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும் வீழ்த்தின.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது. மாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சீனா- கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் வங்காள தேசம்-சீனதைபே, தென் கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (31-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 1-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
திரைப்படம் தமிழில் இன்று வெளியானது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிடுகிறது. திரைப்படம் மக்கள் பலரால் விரும்பப்படுவதால் கேரளாவில் காட்சிகளை அதிகம் செய்துள்ளனர்.
இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்ததற்கு துல்கர் சல்மானை கொண்டாடி வருகின்றனர்.. இப்படம் மலையாள சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. படத்தில் சில நட்சத்திர நடிகர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.
- நினைவேந்தல் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்று இருந்தார்.
- தே.மு.தி.க மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்து வருகிறார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்று இருந்தார். NDA கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்றதால் NDA கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுகிறதா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுதீஷிடம், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுதீஷ், நட்பின் காரணமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க. நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தியில் உள்ளது. அதை தொடர்ந்து, சமீப காலமாக தி.மு.க.வுடன் நட்புறவு கொண்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க மாநாட்டில் அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்து வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தே.மு.தி.க. நீண்ட இழுபறிக்கு பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கிறது. இதனால் கூட்டணி விவகாரத்தில் பிரேமலதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது.
- மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார்.
திருத்தணி:
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாநாடு நடைபெறும் இடத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் இன்று மரங்களின் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து சீமான் பாராட்டினார். மரங்கள் தொடர்பான கவிதை புத்தகங்களை சீமான் வெளியிட்டார். பின்னர் மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம் என்ற தலைப்பில் பேசினார்.
- சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது.
- பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீப காலமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களும் பரவி வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் சமீபத்தில் இரவில் கனமழை, பகலில் வெயில் என தட்பவெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல் பரவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடல் சோர்வு, வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. சிகிச்சை பெற்றாலும் உடனடியாக குணமாவதில்லை. சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பு தொடர்கிறது. இந்த காய்ச்சலால் நடுத்தர வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த காய்ச்சல்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து சுகாதார நிபுணர்கள் கூறியதாவது:-
சென்னையில் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக இருமல், சளியுடன் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது 70 சதவீதத்துக்கு மேல் 'இன்புளூயன்ஸா' காய்ச்சல் பாதிப்பு தான் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
மழை விட்டு விட்டு பெய்வதால் நன்னீரில் வளரக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகளவில் இனப்பெருக்கமாக வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்பும் அதிகரிக்கக்கூடும்.
எனவே திறந்தவெளி இடங்கள், வீடு சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்து, முககவசம் அணிவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






