என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு சமோசா என்றால் அலாதி பிரியம். எனவே தனது கணவரிடம் சமோசா வாங்கி வருமாறு கூறியுள்ளார். அவர் அதனை வாங்க மறந்து வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனால் அது இந்த அளவுக்கு போகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.

    அதாவது அந்த பெண் உடனடியாக தனது பெற்றோரிடம் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். அவர்கள் சென்றதும் இரு குடும்பத்தினருக்கும் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் பெண்ணின் குடும்பத்தினர் அவரது கணவர், மாமனாரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இத்துடன் முடியாமல் மறுநாள் பஞ்சாயத்து வரை இந்த விஷயம் சென்றது. அப்போதும் பெண்ணின் குடும்பத்தினர் கணவன் வீட்டாரை தாக்கினர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலான நிலையில் சமோசாவுக்காக ஒரு குடும்பமே சண்டையிடுவதா? என நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை வசைபாடி வருகின்றனர்.



    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையைச் செலவிட நேரிடலாம். இடமாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் உருவாகும்.

    ரிஷபம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழிலில் ஒப்பந்தங்கள் வரலாம்.

    மிதுனம்

    பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எடுத்த காரியத்தை முடிக்கப் பெரும் பிரயாசை எடுக்க நேரிடும். விலைமதிப்புள்ள பொருள்களைக் கையாள்வதில் கவனம் தேவை.

    கடகம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயம் உண்டு. உறவினர்களால் பிரச்சனைகள் வீடு தேடி வரலாம்.

    சிம்மம்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

    கன்னி

    கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    துலாம்

    சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். திடீர் வரவு மகிழ்ச்சி தரும். புத்திசாலித்தனமான கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    விருச்சிகம்

    செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    தனுசு

    சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.

    மகரம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கும்பம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    மீனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும்.

    • 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
    • மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளன. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.

    மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்.

    இவை வெறும் எண்ணிக்கை அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடல் அரசின் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.



    • இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.
    • சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைகிறது.

    56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.

    ஆனால் இந்த மாற்றங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்த சீர்திருத்தங்கள் நுகர்வு அதிகரிக்வும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறியுள்ளது.

    சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைப்பது சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அதில் குறிப்பிடடுள்ளது.

    மேலும் வருடம் ரூ.3,700 கோடி இழப்பு என்பது மிகக் குறைவாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
    • அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும்.

    நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    4 அடுக்குகளை கொண்ட ஜிஎஸ்டி வரிமுறையில் 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்த நிலையில் 5 மற்றும் 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே இனி இருக்கும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே வரியை கொண்டு வரக் கோரி கோரிக்கைகள் எழுந்தன.

    இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பதிலளித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியில் கடுமையான வேறுபாடுகள் உள்ளன. இந்த சூழலில் நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.

    ஆடம்பர பென்ஸ் கார் மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும் Flip flop செருப்புக்கும் ஒரே வரி விதிப்பது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.

    மேலும் அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும் என்று அவர் உறுதியளித்தார். 

    • பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால்.
    • வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆறு முக்கிய சவால்கள் உள்ளன என்று முப்படை தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அனில் சவுகான், சீனாவுடனான தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். பாகிஸ்தானின் மறைமுகப் போர் உத்தி இரண்டாவது பெரிய சவால். இந்தப் பிரச்சினைகள் தற்காலிகமானவை அல்ல. அதனால்தான் தயார்நிலை அவசியம்.

    மூன்றாவது பெரிய சவால் அண்டை நாடுகளில் உள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார உறுதியற்ற தன்மை. இது வெளிப்புற சக்திகள் தலையிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

    நான்காவது சவால் போரின் தன்மையில் முழுமையான மாற்றம். தற்போது போர்கள் விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் வரை பரவியுள்ளன.

    பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அணுசக்தித் திறன்கள் ஐந்தாவது சவால். இராணுவ தொழில்நுட்பத்தில் விரைவான மாற்றங்கள் ஆறாவது பெரிய சவால்" என்று தெரிவித்தார்.

    எனவே அவற்றை எதிர்கொள்ள நாடு தொடர்ந்து தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  

    • என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு என்றார்.
    • பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு சோலாப்பூர் மாவட்டத்தின் மாதா தாலுகாவில் உள்ள குர்து கிராமத்தில், சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மண் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக வந்த புகார்களின் பேரில் ஐபிஎஸ் அதிகாரியும் கர்மலா டிஎஸ்பியுமான அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் ஊழியர் ஒருவர் தனது தொலைபேசியில் தலைவருக்கு போன் போட்டு ஐபிஎஸ் அஞ்சனாவிடம் கொடுத்துள்ளார்.

    தொலைபேசியை வாங்கிஅஞ்சனா "நீங்கள் துணை முதல்வர் என்பதை நான் எப்படி அறிவது? தயவுசெய்து எனது தொலைபேசியை நேரடியாக அழைக்கவும்" என்று பதிலளித்தார்.

    இந்தப் பதிலால் கடும் கோபமடைந்த அஜித் பவார், "உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உன் மொபைல் எண்ணை கொடு, அல்லது வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து பார்.

    என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு" என்றார்.

    பின்னர் வீடியோ கால் மூலம் பேசி, அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஐபிஎஸ் அஞ்சனாவிடம் அஜித் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் இதுகுறித்து அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "சோலாப்பூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியுடனான உரையாடல் தொடர்பான சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல. நிலைமை மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம்.

    பொறுமையாகவும் உண்மையாகவும் தங்கள் கடமையைச் செய்யும் நமது காவல்துறை மற்றும் பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.

    மணல் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
    • அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு அதிபர் டிரம்ப் கடந்த நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வைத்தார்.

    இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விருந்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில் இதுகுறித்து ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசிய மஸ்க், அதிபர் டிரம்பின் நிர்வாகத்திடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

    இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் செல்ல முடியவில்லை என்றும் தனக்கு பதிலாக தனது நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பியதாக மஸ்க் கூறினார். நெருங்கிய நண்பர்களாக இருந்த மஸ்க் - டிரம்ப் அண்மையில் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.  

    • அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.
    • இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியப் போவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், "ரஷிய எண்ணெய்யாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்ற முடிவை எடுப்போம்.

    குறிப்பாக விலை மற்றும் போக்குவரத்து போன்ற காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம். அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.

    எனவே, நாங்கள் நிச்சயமாக ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.

    • தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.
    • தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.

    மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

    இந்த சட்ட திருத்தம் மூலம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.

    இந்த நடவடிக்கை, மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.

    ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, , தெலங்கானா, உத்தரப் பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்கள் இதை அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச வரத்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து மூன்று தலைவர்களும் விவாதித்தனர்.
    • தனது ட்ரூத் சோஷியல் சமூக வலயத்தளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த வார தொடக்கத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் நெருக்கம் காட்டினர்.

    சர்வதேச வரத்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து மூன்று தலைவர்களும் விவாதித்தனர்.

    இந்நிலையில் இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலயத்தளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதாவது, "இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அந்த மூன்று நாடுகளும் நீண்ட மற்றும் வளமான வாழ்க்கையை ஒன்றாக வாழ வாழ்த்துகிறேன்" என்று டிரம்ப் தனது பதிவில் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    இந்திய பொருட்கள் மீது டிரம்ப் விதித்த 50 சதவீத வரி காரணமாக, அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்த இந்திய தற்போது சீனா, ரஷியாவுடன் அதிகம் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
    • மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காய்ச்சல் மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    முன்னதாக, அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தது. பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பாவந்த் மான் ஆய்வு செய்து வந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

     

    ×