என் மலர்
இந்தியா

மணல் கடத்தலை தடுக்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார் - வீடியோ வைரலானதால் விளக்கம்!
- என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு என்றார்.
- பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சோலாப்பூர் மாவட்டத்தின் மாதா தாலுகாவில் உள்ள குர்து கிராமத்தில், சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மண் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக வந்த புகார்களின் பேரில் ஐபிஎஸ் அதிகாரியும் கர்மலா டிஎஸ்பியுமான அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் ஊழியர் ஒருவர் தனது தொலைபேசியில் தலைவருக்கு போன் போட்டு ஐபிஎஸ் அஞ்சனாவிடம் கொடுத்துள்ளார்.
தொலைபேசியை வாங்கிஅஞ்சனா "நீங்கள் துணை முதல்வர் என்பதை நான் எப்படி அறிவது? தயவுசெய்து எனது தொலைபேசியை நேரடியாக அழைக்கவும்" என்று பதிலளித்தார்.
இந்தப் பதிலால் கடும் கோபமடைந்த அஜித் பவார், "உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உன் மொபைல் எண்ணை கொடு, அல்லது வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து பார்.
என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு" என்றார்.
பின்னர் வீடியோ கால் மூலம் பேசி, அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஐபிஎஸ் அஞ்சனாவிடம் அஜித் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இதுகுறித்து அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "சோலாப்பூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியுடனான உரையாடல் தொடர்பான சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல. நிலைமை மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம்.
பொறுமையாகவும் உண்மையாகவும் தங்கள் கடமையைச் செய்யும் நமது காவல்துறை மற்றும் பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.
மணல் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.






