என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில் மற்றும் கார்கள் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவா்கள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தீபாவளி முன்பதிவின்போது உடனடியாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். 300-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிடுவார்கள்.
இதுபோன்று காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் இருந்து கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த சிறப்பு ரெயில்களும் போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு முழுமையாக முடிந்து காத்திருப்பு பட்டியலில் பலரும் உள்ளனர். இதற்கிடையே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைகளின்போது பயணிகளின் வசதிக்காக இந்தியா முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆனால், தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்திற்கும், எழும்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியத்திடம் தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவிலான சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ரெயில் பயணிகள் கூறியபோது, 'தீபாவளி பண்டிகை ரெயிலுக்கான முன்பதிவின்போது வழக்கமான ரெயில்களுக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுதீர்ந்துவிடுகிறது. இதனால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆனால் பண்டிகை காலங்களில் போதுமான அளவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. கூடுதல் ரெயில்கள் இயக்க தொடர்ந்து கோரிக்கை எழுப்புகிறோம். ஆனால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதில்லை. இந்த ஆண்டும் வெறும் 11 ரெயில்கள் இயக்க பரிந்துரை செய்துள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம். சொந்த ஊர்களுக்கு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததால் மிகவும் அவதியுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது' என்றார்கள்.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'தெற்கு ரெயில்வேயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க போதுமான ரெயில் பெட்டிகள் இல்லை. எனினும் பயணிகள் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.
எனவே, கொல்லம், செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும். இதுதவிர, 2 பயணிகள் ரெயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூடுதலாக எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும்' என்றார்கள்.
- பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கள், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.
- லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். தனது பயணத்தின் ஒரு அங்கமாக, லண்டன், கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஓ.ஏ.எஸ்.) உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளரும், எம்.பி.யுமான ஐ.எஸ்.இன்பதுரை, மு.க.ஸ்டாலினின் சித்தாந்த தடுமாற்றம் என்ற தலைப்பில், நெற்றியில் விபூதி வைக்கப்பட்ட திருவள்ளுவரை மு.க.ஸ்டாலின் கும்பிடுவது போன்ற படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''விபூதியுடன் திருவள்ளுவர் இருக்கும் படம் 'எடிட்' செய்த படம்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நெற்றியில் விபூதி இல்லாமல் உள்ள திருவள்ளுவர் படத்தையும், நெற்றியில் விபூதி இருப்பது போன்ற 'எடிட்' செய்யப்பட்டதாக கூறப்படும் திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாரிவாக்கம்: அன்னைக்காட்டுச்சேரி, அமுதூர்மேடு, திருமணம், காவல்சேரி, வயலாநல்லூர், சோரஞ்சேரி, ஆயில்ச்சேரி, சித்துகாடு.
கோட்டூர்புரம்: ரங்கராஜபுரம், சைதாப்பேட்டை, ஸ்ரீ நகர் காலனி, எல்டிஜி சாலை, வெங்கடாபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, சித்ரா நகர், ரிவர் வியூ ரோடு, மற்றும் ஹவுசிங் போர்டு.
- வரும் 13-ந் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு
- திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அதனையும் காவல்துறை நிராகரித்தது. 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடம் குறித்து தவெகவினர் ஆலோசனை நடத்தினர்.
அந்த வகையில் காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
3-வது முறையும் காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை அணுகவும் தவெகவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வு பெற்றார்.
- பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:
மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா தாக்கல் செய்துள்ள மனுவில், 'டி.ஜி.பி. நியமனம், காவல்துறை சீர்திருத்தம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி கூறிய தீர்ப்பில், டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அந்தந்த மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும்.
யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. நியமனத்தில் ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டது. தமிழக டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தபோது, இந்த மனு சற்று முன்னதாக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்து தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'டி.ஜி.பி. நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பின்பற்ற வேண்டும்' என்று வலியுறுத்தியது. டி.ஜி.பி. நியமன நடைமுறைகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்ததன் அடிப்படையில் மனு முடித்துவைக்கப்பட்டது.
தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர்ஜிவால் ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கடராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு டி.ஜி.பி. தேர்வுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பிவைக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று நடைமுறைப்படுத்தும் கடமையை செய்ய தமிழ்நாடு அரசு தவறியுள்ளதால், தலைமைச் செயலாளருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஹென்றி திபேன் சார்பில் மூத்த வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜராகி, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தமிழ்நாடு அரசு கடைபிடிக்கவில்லை என வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, 'தமிழ்நாட்டில் ஏன் தற்காலிக டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும்' என்று கேட்டார்.
இதற்கு தமிழ்நாடு அரசின் வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியத்துடன் ஆஜரான மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி, 'டி.ஜி.பி. பரிந்துரை பெயர் பட்டியலை சேர்க்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் (பிரமோத் குமார்) மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை நாடினார். அவரது மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நிராகரித்தது. இதைத்தொடர்ந்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 22-ந் தேதி தள்ளுபடி செய்தது என்று பதில் அளித்தார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'அடுத்த டி.ஜி.பி. நியமனத்துக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய பெயர்ப்பட்டியலை யு.பி.எஸ்.சி. விரைந்து பரிசீலிக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. அனுப்பும் பரிந்துரை பட்டியலின் அடிப்படையில் நிரந்தர டி.ஜி.பி.யைநியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்படி கோர்ட்டு அவமதிப்பு வழக்கையும் முடித்து வைத்தது.
- தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹாங்காங்கை சந்திக்கிறது.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
2016-ம் ஆண்டில் இருந்து ஆசிய கோப்பை போட்டிக்கான வடிவம், உலக கோப்பை அடிப்படையில் மாற்றப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது 20 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. அடுத்த சீசனில் 50 ஓவர் அடிப்படையில் நடைபெறும். இதுவரை 50 ஓவர் வடிவில் 14 முறையும், 20 ஓவர் வடிவில் 2 முறையும் ஆசிய கோப்பை போட்டி நடந்துள்ளது. இதில் இந்தியா 8 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன. இந்த தடவையும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக அமைந்தால் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த ஆசிய கோப்பை போட்டியில் 3 முறை மோத வேண்டி இருக்கும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை நாளை எதிர்கொள்கிறது.
முதல் நாளான இன்றிரவு 8 மணிக்கு அபுதாபியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் ரஷித்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தசா தலைமையிலான ஹாங்காங்கை சந்திக்கிறது. சுழல்ஜாலத்தால் வலுவாக காணப்படும் ஆப்கானிஸ்தான், நேற்று முன்தினம் முத்தரப்பு தொடரில் அடைந்த தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஆவலில் உள்ளது.
அதே சமயம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்பு 4 முறை பங்கேற்றுள்ள ஹாங்காங் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை. விளையாடியுள்ள 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ள ஹாங்காங், அந்த மோசமான வரலாற்றை மாற்றிக்காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆப்கானிஸ்தான்: ரஷித்கான் (கேப்டன்), ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், டார்விஷ் ரசூலி, செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், கரிம் ஜனத், முகமது நபி, முஜீப் ரகுமான் அல்லது கசன்பார், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.
ஹாங்காங்: யாசிம் முர்தசா (கேப்டன்), அன்ஷூமன் ராத், பாபர் ஹயாத், ஜீஷன் அலி, நிஜாகத் கான், மேத்யூ ஜோட்ஜீ, இசன் கான், அஜாஸ் கான், அதீக் இக்பால், நஸ்ருல்லா ராணா, ஆயுஷ் சுக்லா.
இந்த போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.
நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும். இரு அவைகளிலிருந்தும் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தங்கள் வாக்குகளை செலுத்துவர்.
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கும். இன்றிரவே முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்கள் பின்னணி?
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சி.பி. ராதாகிருஷ்ணன் (67) என்.டி.ஏ வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கோவையிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் மகாராஷ்டிராவின் ஆளுநராகப் இருந்து வருகிறார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (79) இந்தியா கூட்டணியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தனிநபர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட சல்வா ஜூடும் அமைப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற தீர்ப்பு, கருப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது போன்றவற்றின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றவர் ஆவார்.
எதிர்க்கட்சிகள் இவரை சமூக நீதியின் அடையாளமாக நிலைநிறுத்தியுள்ளன.
யாருக்கு பலம்?
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 781 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர்
வெற்றிக்கு 391 வாக்குகள் என்ற மேஜிக் எண்ணிக்கை தேவை. ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கு 425 எம்.பி.க்கள் என்ற சொந்த பலம் உள்ளது.
கூடுதலாக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர், இதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை 436 ஆக உயர்ந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் என்.டி.ஏ வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், எதிர்க்கட்சி இந்தியா கூட்டணிக்கு 324 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் என்.டி.ஏ வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானாலும், கடந்த தேர்தலை விட இதில் முன்னிலை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.
2022 இல் ஜக்தீப் தன்கர் 346 வாக்குகள் என்ற மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த முறை முன்னிலை 100 முதல் 125 வாக்குகள் வரை மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.
நாட்டின் தேர்தல் செயல்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தொடர் சர்ச்சைப் பொருளாக இருந்து வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுவரை இவிஎம்கள், 5 மக்களவை மற்றும் 130 சட்டமன்றத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்களில் பயன்படுத்தப்படவில்லை.
இன்று நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.டி.ஏ. கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுத்ர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
இவிஎம் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயருக்கு அடுத்துள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்கு பதிவு செய்யப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதித் தேர்தல்கள் வேறுபட்டவை. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்கும் இந்தத் தேர்தல்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி நடத்தப்படுகின்றன.
இவற்றில், ரகசிய வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. வாக்களிக்கும் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்தைக் குறிக்கும் வகையில் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு அருகில் எண்களை எழுத வேண்டும்.
எண்களை 1, 2... என்ற விருப்பத்தின் வரிசையில் இருக்க வேண்டும். வாக்காளர்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்கள் விரும்பும் அளவுக்கு விருப்ப எண்களை வாக்குச்சீட்டில் எழுதலாம்.
வாக்கு செல்லுபடியாகும் வகையில், முதல் விருப்ப எண்ணை வைக்க வேண்டும். மீதமுள்ள விருப்ப எண்களை அவர்கள் விரும்பினால் போடலாம் அல்லது விட்டுவிடலாம்.
இதற்காக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாக்களை வழங்கும். வாக்காளர்கள் அந்த பேனாவால் தங்கள் வாக்குகளை குறிக்க வேண்டும். வேறு எந்த பேனாவும் பயன்படுத்தப்பட்டால், அந்த வாக்கு செல்லாததாகக் கருதப்படும். முதல் வாக்கை பிரதமர் மோடி செலுத்துவார்.
விருப்ப எண்ணின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். தற்போதுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்த வேறுபட்ட தொழில்நுட்பம் இல்லை. அதனால்தான் அவை ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பயன்படுத்தப்படுவதில்லை.
- இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
- சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி.
ஜம்மு-காஷ்மீரின் ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த சட்டம் யாரையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை காவலில் வைக்க அனுமதிக்கிறது.
சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தனது தொகுதி மக்களுக்கு மருத்துவமனை கேட்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏவை சிறையில் அடைக்க வேண்டிய அளவுக்கு பெரிய குற்றமா? மெஹ்ராஜ் மாலிக் ஆம் ஆத்மி கட்சியின் சிங்கம்.
மக்களின் குரலாக மாறி அவர்களின் உரிமைகளுக்காக அவர் எப்போதும் போராடுவார். சிறை, அச்சுறுத்தல்கள் மற்றும் சதித்திட்டங்கள், இவை அனைத்தும் ஆம் ஆத்மியின் எந்த சிப்பாயையும் ஒருபோதும் பயமுறுத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில், " இது அரசாங்கத்தின் வெளிப்படையான சர்வாதிகாரம், மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறார்கள்.
ஆனால் சர்வாதிகாரம் அதிகரிக்கும் போதெல்லாம் புரட்சி வலுவடைகிறது என்பதற்கு வரலாறு சாட்சி" என்று தெரிவித்துள்ளார்.
- ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
- 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.
மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும்.
அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.
ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.
அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.
பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இரங்கல் தெரிவித்தார்.
- காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இஸ்ரேலிய தீவிர வலதுசாரி தலைவரும் நிதியமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் .
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தி, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம், பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கும், இவை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சுயாதீனமான நடுவர் மன்றத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது,
சந்திப்பின்போது, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.






