என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
- இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் கதிர் இப்படத்தில் முக்கிய நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், தற்போது 'தலைவர் 173' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருவதால் இனிவரும் நாட்களில் 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் தற்போத சூர்யாவின் 'கருப்பு', ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', அல்லு அர்ஜூன் - அட்லீயின் கூட்டணியில் உருவாகி வரும் AA22XA6 மற்றும் கார்த்தியின் மார்ஷல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
- ஜெயலலிதா அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவுத:-
தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று.
சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர்தம் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது.
- சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கியது. முதலில் தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) மூலமாக 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் உடனடி முன்பதிவு மூலமாக தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டே சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க, உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதனால் சபரிமலை, பம்பை மற்றும் மலைப்பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது. ஆனால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டபடியே இருந்தது. இதனால் பக்தர்கள் சாமி தரினத்துக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
ஐகோர்ட்டு அறிவுறுத்தலின் படி நெரிசல் எதுவும் இல்லாத நேரத்தில் உடனடி முன்பதிவு பக்தர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கூட்ட நெரிசல் எதுவும்இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் அதிக அளவிலான பக்தர்கள், முன்பதிவு செய்த நாள் மற்றும் நேரத்துக்கு சரியாக வருவதில்லை. பலர் தங்களின் பயணத்தை நிறுத்தியிருந்தாலும், பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வருகிறார்கள்.
அவ்வாறு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்வற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அது போன்று வரக்கூடிய பக்தர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். அவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் இருக்கக்கூடிய பக்தர்களில் பலர், வெளி மாநில பக்தர்கள் ஆவர்.
அவர்கள் வரக்கூடிய ரெயில் காலதாமதாக வருவதால், பக்தர்களின் சபரிமலை பயணம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடுகிறது. இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடிய பக்தர்களை தேதி மற்றும் நேரத்தை பார்க்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றும் ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களில் ஏராளமானோர் சபரிமலைக்கு வரவில்லை. இதனால் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு 16,989 பக்தர்களே மலையேறிச் சென்றனர்.
இதன் காரணமாக சன்னிதானம் அருகே பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன்பு உள்ள நடைப்பந்தலில் இரண்டு வரிசையில் மட்டுமே பக்தர்கள் காத்து நின்றனர். சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிகபட்சமாக 30 நிமிடம் மட்டுமே காத்திருந்தனர். இதனால் பதினெட்டாம் படியில் பக்தர்கள் வேகமாக ஏறிச் செல்லாமல், பொறுமையாக ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- ரெப்போ வங்கி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வங்கி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி வகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் ஆக உள்ளது.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வகிதம் குறைக்கப்பட்ட நிலையில் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96,000 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 196 ரூபாய்க்கும் கிலோவுக்கு 4 ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160
03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480
02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560
30-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-12-2025- ஒரு கிராம் ரூ.200
03-12-2025- ஒரு கிராம் ரூ.201
02-12-2025- ஒரு கிராம் ரூ.196
01-12-2025- ஒரு கிராம் ரூ.196
30-11-2025- ஒரு கிராம் ரூ.192
- ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல.
- உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
சென்னை:
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு.. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறார்.
ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ்.. தமிழையும் இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பா.ஜ.க. தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்! உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் தி.மு.க. பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- எந்த அரசியல் தேவை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
- மதுரைக்கு தேவை மெட்ரோ ரெயில், எம்ய்ஸ், புதிய தொழில் வாய்ப்புகள்.
சென்னை:
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
மெட்ரோ இரயில்,
#AIIMS,
புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது! என்று கூறியுள்ளார்.
- பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
- பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
புதுடெல்லி:
புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதராமன் பேசும்போது கூறியதாவது:-
பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டுவருகிறது.
பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது.
பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.
பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
இந்த செஸ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 களங்களான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் கணிக்கக்கூடிய வளத்தை உறுதி செய்யும் என்று கூறினார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை...
- இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதயதெய்வம்,
"மக்களால் நான்; மக்களுக்காவே நான்" என்ற தவவாழ்விற்கே தன்னை அர்ப்பணித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து அளித்த நம் ஒப்பற்ற தலைவி,
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை,
இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை, அவர்தம் 9-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
தமிழ்நாட்டைப் பிடித்துள்ள தீயசக்தி திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்தி, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் தமிழ்நாட்டை செலுத்தும் மக்களுக்கான நல்லாட்சியை, அ.தி.மு.க. தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் வாயிலாக நிறுவி, மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பதே, மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி! என்று கூறியுள்ளார்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
- தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவாகரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.






