என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
- உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?
உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர்.
- "அரிமா நோக்கு" என்ற ஆய்விதழின் ஆசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் சிறந்தவர். இவரின் கவிதைத் தொகுப்பான "வணக்கம் வள்ளுவ" நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் போன்ற பல்வேறு படைப்புகளை எழுதியுள்ளார்.
பாரதிதாசன் மரபில் வந்த இவர், வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர். செய்தி வாசிப்பாளர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் மற்றும் "அரிமா நோக்கு" என்ற ஆய்விதழின் ஆசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஈரோடு தமிழன்பன் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கபோகிறது என ஊகங்கள் எழுந்து வந்தன.
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்தற்காக இந்த கூட்டணி மாற்றம் அமையும் என்றும் பேச்சுகள் அடிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இதற்கிடையே அணமைக் காலமாக காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கபோகிறது என ஊகங்கள் எழுந்து வந்தன.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்தற்காக இந்த கூட்டணி மாற்றம் அமையும் என்றும் பேச்சுகள் அடிக்கப்பட்டன.
செய்தியாளர்கள் சந்திப்புகளில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில்,அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
- அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.
தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார். அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விஜய் கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல் அவர்களை அழைத்து துக்கம் விசாரித்தது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான்.
- கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும்.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொறுப்பு டி.ஜி.பி. விவகாரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.
எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க. அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை காப்பாற்றி வருகிறார்.
அது டி.ஜி.பி. விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க. அரசு அது டி.ஜி.பி. மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டி.ஜி.பி. மூலம் நடக்க முடியவில்லை.
தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான். 2011-ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி. ஆகவும், சட்ட-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.
ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.யாக கொண்டு வந்ததும் அ.தி.மு.க. தான். தற்போது இதை பற்றி பேசி பா.ஜ.க. அரசின் விசுவாசி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.
அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கோலமாக கடந்த சட்ட ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது.
கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எங்களுக்கு எந்த அளவு போட வேண்டும் என்பது சரியாக தெரியும். யார் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். போலியான தருணங்களை சொல்லி நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
- வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன்பின்பே, இது புயலாக வலுப்பெறுமா? புயலாக வலுப்பெறும் பட்சத்தில் எந்த இடத்தில் கரையைக் கடக்கக்கூடும் என்பதை அதன் நகர்வுகளை பொறுத்து அமையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில், வட தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடிய 24-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
- அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தால் அதற்கு மேல் தேங்கும் நீர் கேரள பகுதிக்கு உபரியாக திறந்து விட வாய்ப்பு உள்ளது.
கூடலூர்:
152 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கிக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் கேரள அரசு தன்னார்வ அமைப்பினர் மூலம் ரூல்கர்வ் விதிமுறைப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அந்த விதிப்படியே தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தேக்கிக்கொள்ளும் முறை பின்பற்றப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேங்கும் தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு திறந்து விடப்படுகிறது.
இதன்படி கடந்த மாதம் 10 நாட்களுக்கு மேலாக ரூல்கர்வ் விதிப்படி 138 அடிக்கு மேல் அணைக்கு வந்த நீரை உபரி நீராக கருதி இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்த நிலையில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாற்றின் கரையோரப்பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. எனவே கரைப்பகுதிகளை சீரமைக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையோரப் பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் அணையில் இருந்து தண்ணீரை முற்றிலும் வெளியேற்றாமல் நிறுத்தியதாலும் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 136 அடியை கடந்தது. இதனால் இடுக்கி மாவட்ட கரையோரப்பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 136.20 அடியாக உள்ளது. நீர்வரத்து 1313 கன அடி. தண்ணீர் திறப்பு இல்லாத நிலையில் நீர் இருப்பு 6168 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்தால் அதற்கு மேல் தேங்கும் நீர் கேரள பகுதிக்கு உபரியாக திறந்து விட வாய்ப்பு உள்ளது.
பருவமழை காலங்களில் அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் உபரியாக திறந்து விடுவதால் 5 மாவட்ட விவசாயிகள் கோடை காலங்களில் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு ரூல்கர்வ் நடைமுறையை ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
- ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
வருகிற 25-ந்தேதி கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினமே கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து 26-ந்தேதி ஈரோடு- மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியதை செலுத்துகிறார். மேலும் ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
- எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராஜேந்திரனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான இராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே அவர்கள் இராஜேந்திரனை சுட்டுக் கொலை செய்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. நிலத்தகராறுக்கு கூட ஆளும்கட்சி நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மோசமடைந்திருப்பதை பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தான் பாதுகாப்பு? என்ற வினா தான் எழுகிறது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதி பா.ம.க. நிர்வாகிகளை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் கைது செய்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை பழிவாங்கத் துடிப்பதில் காட்டும் அக்கறையையும், செலவிடும் நேரத்தையும் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறை செலவிட்டிருந்தால் இத்தகைய படுகொலைகளை தடுத்திருக்க முடியும். ஆனால், திமுக காவல்துறை அதற்கு தயாராக இல்லை.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறேன். அந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் சேலம் மாவட்டத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை, யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சு.சக்கரவர்த்தியை அதே பகுதியைச் சேர்ந்த சமூகவிரோதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தடையின்றி கிடைப்பது தான் அதற்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் தாராளமாக கிடைப்பதாகவும், ரூ.5000 விலைக்குக் கூட துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனாலும், துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக தொடர்ந்து ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விட்டது. தங்களைக் காக்கத் தவறிய திமுகவுக்கு வரும் தேர்தலில் சரியான தண்டனையை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
சென்னை:
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
- ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் கன மழையின் காரணமாக சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வரை தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
- கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார்.
அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து, ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இந்த பொதுக்குழுவில் மீண்டும் த.வெ.க. பயணம் தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி சென்னையை அடுத்த செம்மஞ்சேரி தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில், விஜய் சேலத்தில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதற்காக 3 இடங்கள் தேர்வு செய்து போலீசாரிடம் வழங்கப்பட்டது. ஆனால் தீப திருவிழா மற்றும் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் சந்திப்புக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்பு படையினர் செய்து வருகின்றனர்.
இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் எதுவும் இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக த.வெ.க. தெரிவித்துள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து 11 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பிற்கான திட்டத்தை த.வெ.க.வினர் தயாரித்து விட்டதாகவும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தந்த மாவட்டங்களில் நலிவடைந்த பிரிவினரை மாவட்ட வாரியாக உள்ள அரங்குகளில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






