என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
- பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் பாசமிகு அண்ணன் எச். ராஜா அவர்களை, மருத்துவமனையில் சந்தித்தேன். அண்ணன் அவர்களின் உடல்நலத்தில், நல்ல முன்னேற்றம் இருப்பதில் பெருமகிழ்ச்சி.
அவர் விரைவில் உடல் நலம் தேறி, மீண்டும் தேசப்பணிக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் முருகபெருமானை வேண்டுகிறேன்" என்று தெரிவித்தார்.
- நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது.
- அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனாளர்களை கடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
பாஸ்டேக் என்பது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நில்லாமலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாமலும் கட்டணம் செலுத்துவதற்காக, தேசிய மின்னணு சுங்க வசூல் திட்டத்தின் கீழ், ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்ப டுத்தி செயல்படும் ஒரு டிஜிட்டல் முறை ஆகும்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு 15-ந்தேதி முதல் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பாஸ் வாங்கிய நாளில் இருந்து, ஓராண்டுக்கு அல்லது 200 சுங்கச்சாவடிகள், இதில் எது அதிகமோ அதுவரை செல்லுபடியாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனாளர்களை கடந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தமாக 26.55 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. மாநிலங்கள் வாரியான பயன்பாட்டில், நாட்டின் மொத்த ஆண்டு பாஸ் பரிவர்த்தனைகளில் 14 சதவீதத்துடன் சண்டிகார் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு 12.3 சதவீதத்துடன் 2-ம் இடமும், டெல்லி 11.5 சதவீதத்துடன் 3-ம் இடத்தில் உள்ளன. டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள பிஜ்வாசன் சுங்கச்சாவடி, அந்த சாவடியில் இடம் பெறும் மொத்த கார் கடப்புகளில் சுமார் 57 சதவீதம் ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுவதால் முதலிடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள முண்டகா சுங்கச்சாவடி மற்றும் சோனிபட் மாவட்டத்தின் ஜின்ஜோலி சுங்கச் சாவடி, இரண்டிலும் வணிகமற்ற வாகனங்களின் சுமார் 53 சதவீத கடப்புகள் ஆண்டு பாஸ் மூலம் நடைபெறுகின்றன. அனைத்து வணிகமற்ற வாகனங்களுக்கும் இந்த பாஸ் பொருந்தும்.
ராஜ்மார்க் யாத்திரா செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய இணையதளம் மூலம் ஒருமுறை கட்டணம் செலுத்திய பின், அதே வாகனத்துடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக்கில் இரண்டு மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படுகிறது.
- கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
- தாம்பரத்தில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக்கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை (8 மணி நேரம்) 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும்.
இதில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையிலும், மறுமார்க்கமாக செல்லும் ரெயில்கள் 5-வது நடைமேடையிலும் இயக்கப்படும். இதன் காரணமாக சில மின்சார ரெயில் சேவைகள் பகுதிநேரமாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
அதன் விவரம் வருமாறு:-
* இன்று முதல் 18-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.55, 10.20, 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரெயில் சேவைகள் முழுவதுமாகவும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9.05, 10.10, 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில் சேவைகள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
* இன்று மற்றும் 15-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து இரவு 10.00, 11.00. 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வெகுமக்களுக்கு எதிராக நாம் முடிவெடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சிக்கின்றனர்.
- ஒரு சாதியினருக்கோ ஒரு மதத்தினருக்கோ எதிராக நமது கட்சி சிந்தித்ததுமில்லை; செயல்பட்டதுமில்லை!
விடுதலைச் சிறுத்தை கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல்களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஊடகங்கள் அனலை ஊதி ஆதாரமில்லாத ஊகங்களையெல்லாம் பரபரப்புக்குரிய செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. இச்சூழலில் சில கருத்துகளைத் தங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். குறிப்பாக, தேர்தல் குறித்து நமது கட்சி எத்தகைய நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.
கடந்த கால்நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலில் நாம் ஒருபோதும் தேர்தல் ஆதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, அதாவது, வெற்றி-தோல்விகளைக் கணக்கில் கொண்டு முடிவெடுத்ததில்லை. கருத்தியலின் அடிப்படையில் இணக்கமான கட்சிகளோடு தேர்தல் உறவுகளைத் தீர்மானித்துக் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
திமுக மற்றும் காங்கிரசு ஆகிய கட்சிகளோடு கடந்த காலங்களில் நாம் முரண்பட்டு எதிர்நிலையில் நின்றிருக்கிறோம். ஆனால், தற்போதைய சூழலில் தேசம் தழுவிய அளவில் நிலவிவரும் தீங்குநிறைந்த சனாதன அரசியலின் சதியை முறியடிக்க வேண்டிய தேவையை உணர்ந்து, திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்' நாம் அங்கம் வகித்து செயலாற்றி வருகிறோம்.
ஏற்கனவே, 2001 மற்றும் 2011-சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாம் இடம் பெற்றிருக்கிறோம். 2011 இல் அமைந்த திமுக கூட்டணியில் விசிகவும் பாமகவும் இடம் பெற்றிருந்தன. ஆனால், அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது.
அதன்பின்னர், பாமக எடுத்த 'சோசியல் எஞ்சினியரிங்' என்கிற 'சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் தேர்தல் உத்தியைக்' கையில் எடுத்தபோது தமிழக அரசியல் களம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதன்பின்னர் தான் நாம், 'பாஜகவுடன் மட்டுமின்றி பாமகவோடும் இனி தேர்தல் உறவு இல்லை' என்கிற நிலைபாட்டை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
2016 இல் இடதுசாரிகள் மற்றும் மதிமுக ஆகிய தோழமை கட்சிகளோடு இணைந்து மக்கள்நலக் கூட்டணி அமைத்து அப்போதைய சட்டமன்றப் பொதுத் தேர்தலைச் சந்தித்தோம். வெற்றிவாய்ப்பை இழந்தோம்.
அதன்பின்னர் காவிரிநீர்ச் சிக்கலையொட்டி திமுக முன்னெடுத்த முயற்சியின் அடிப்படையில் ஒருங்கிணைந்து களமாடினோம். அதுவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாகப் பரிணமித்தது.
2017இலிருந்து இக்கூட்டணி கருத்தியல் அடிப்படையில் களம்பல அமைத்து போராடி வருவதுடன், அடுத்தடுத்து சில தேர்தல்களையும் சந்தித்து சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக, 2021-சட்டமன்றத் தேர்தல், 2024-நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் என இக்கூட்டணி தொடர்ச்சியாக மக்களின் நல்லாதரவோடு வெற்றிகளைப் பெற்று வருகிறது. தற்போது 2026-சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
மதச்சார்பின்மை, சமத்துவம், மாநில உரிமைகளை நிலைநாட்டும் பரந்துபட்ட நோக்கத்தில் - தெளிவான கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது தான் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதை நாடறியும். கடைசி நிமிட தொகுதிப் பங்கீட்டுக்காக தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பதாக இல்லாமல், மதவெறி சக்திகளையும் அவர்களோடு கைகோர்த்துள்ள இன்னபிற கட்சிகளையும் வீழ்த்தும் வகையில் இந்தக் கூட்டணியை அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை ஏற்று வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அந்த வகையில் நாம் அவருக்கு உற்றத் துணையாக இந்தக் களத்தில் கைகோர்த்து நிற்கிறோம்.
பாஜக தலைமையிலான 'தேசிய ஜனநாயக கூட்டணியில்' இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளோடு, நாம் இத்தகைய கொள்கை அடிப்படையில் தான் முரண்பாடு கொண்டுள்ளோம். அதனடிப்படையில் நமது கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகிறோம். மற்றபடி தனிப்பட்டமுறையில் தனிநபர் யார்மீதும் அல்லது எந்தவொரு கட்சியின்மீதும் நமக்கு காழ்ப்புணர்வு இல்லை. குறிப்பாக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை அந்த வகையில்தான் மதிப்பீடு செய்து இந்த நிலைபாட்டை மேற்கொண்டுள்ளோம்.
ஆனால், வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வெகுமக்களுக்கு எதிராக நாம் முடிவெடுத்ததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சிலர் முயற்சிக்கின்றனர். அதேபோல பாஜகவை விமர்சித்தால் ஒட்டுமொத்த இந்துச் சமூகத்துக்கும் நாம் எதிரானவர்கள் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிட சனாதன சக்திகள் முயற்சிக்கின்றனர். உண்மையில் குறிப்பான ஒரு சாதியினருக்கோ அல்லது ஒரு மதத்தினருக்கோ எதிராக நமது கட்சி சிந்தித்ததுமில்லை; செயல்பட்டதுமில்லை!
தமிழ்நாட்டைச் சூழும் சனாதன ஃபாசிச சக்திகளை வீழ்த்துவதே நமது இலக்காகும். அவ்வாறு அவர்களை வீழ்த்துவதற்குரிய வெற்றி வியூகத்தை வகுத்து நமது கூட்டணியைத் தலைமையேற்று வழிநடத்தி வரும் திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் அளப்பரிய முயற்சிக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்போம். மதசாரபற்ற முற்போக்கு சக்திகளின் வெற்றிக்கு தீவிர முனைப்போடும் மிகுந்த அர்ப்பணிப்போடும் களப்பணி ஆற்றுவோம்.
இந்நிலையில், திரிபுவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் இடம்தரும் வகையில் நமது இயக்கத் தோழர்களின் கருத்துகள் அமைந்துவிடக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை புரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் வி.எஸ்.பாபு.
- அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.
வடசென்னையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்
சென்னை புரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ.வாக செயல்பட்டவர் வி.எஸ்.பாபு. இவர் வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். பின்னர், திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு அதிமுக வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் ஜுன் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு நீக்கப்பட்டார்.
இந்நிலையில், வி.எஸ்.பாபு இன்று தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த வி.எஸ்.பாபு தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார்.
- இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து உள்ளது
- திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசியமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது 40க்கு 40' என்று விருதுநகர் மாநாட்டில் தான் நான் சொன்னேன். அதை நடத்திக் காட்டினோம். இப்போது 2026. இந்தத் தேர்தலில் புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா? வெல்வோம் 200! இந்த வெற்றிக்கு உழைக்க நீங்கள் தயாரா? நான் ரெடி... நீங்க ரெடியா?
தி.மு.க. என்றால் பிரம்மாண்டம்; இளைஞரணி என்றால் பிரம்மாண்டம். உதயநிதி என்றால் அதைவிடப் பிரம்மாண்டம் என்றுதான் மற்றவர்கள் பார்வைக்கு இந்தக் கூட்டம் தெரியும்.
நமது தாய்மொழியான தமிழுக்கு பல்வேறு காலகட்டங்களில் ஆபத்து வந்தபோதெல்லாம், கடுமையாகப் போராடித் தடுத்த இயக்கம் தி.மு.க.
இப்போது மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து, இன்றைக்கும் நமது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகத்தான் இருக்கிறது.
பெண்களின் உழைப்பிற்கு மகளிர் உரிமைத்தொகை, அவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக் கட்டணமில்லா விடியல் பயணம், பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தோழி விடுதி, பெண்கள் படிக்கப் புதுமைப்பெண் திட்டம் என நீங்கள் கெத்தாகச் சொல்வதற்கு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை இந்தத் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
தேர்தலை மனதில் வைத்தாவது ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்குத் திட்டங்கள் ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வழக்கம்போல் ஈரத்துண்டுதான் கிடைத்துள்ளது. பட்ஜெட்ல ஒன்றிய அரசு நமக்கு கொடுத்தது 0. நாமும் தேர்தல்ல அதையேதான திருப்பிக் தரணும்?
திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது. நம் எதிரிகள் யாருக்கும் இந்த சந்தேகம் கிடையாத. மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநிலக் கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு" என்று தெரிவித்தார்.
- பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாடு உங்களுக்குக் கிடையாது.
- தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்.
விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தையே, இன்றைய தென் மண்டலக் கழக இளைஞரணிச் செயலாளர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் ஓவர்டேக் செய்துவிட்டது.
இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, இது நிர்வாகிகள் சந்திப்பா? அல்லது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடா? என உங்கள் எழுச்சியைக் காணும்போது நினைக்கத் தோன்றுகிறது.
கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டம், இன்றைக்குத் தமிழ்நாட்டில் வெற்றுக்கூச்சல் போட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை; ஏன், அவர்களால் அவர்களுக்கே எந்தப் பயனும் இல்லை.
இந்தியாவிலேயே ஒரு கட்சியின் இளைஞரணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளும், 50 லட்சம் உறுப்பினர்களும் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க.தான். அரசியல் அறிவே இல்லமால் சில அட்டைகள் கத்தினாலும், உளறினாலும் களத்தில் வெற்றிப் பெறபோவது தி.மு.க. தான்.
பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தமிழ்நாடு உங்களுக்குக் கிடையாது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்.
இபிஎஸ் அவர்களே தலையை நிமிர்த்தி வழியை பார்த்து நடந்தால்தான் நேராக நடக்க முடியும். நீங்கள் மோடியின் காலையும், அமித்ஷாவின் காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால் உங்களை போல் முட்டுச் சந்தில்தான் போய் நிற்க முடியும்!"
முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்பீங்க.. முரட்டு அடிமைகள் தெரியுமா? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய முரட்டு அடிமை" என்று தெரிவித்தார்.
- பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதி மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார்
- தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் துரோக பாஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் தென் மண்டலக் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, "உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தென்னகத்தின் எஃகு மனிதர் நம் முதலமைச்சர். பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதி மிக்க தலைவராக முதலமைச்சர் உள்ளார்
இந்த இளைஞர் பட்டாளத்தைப் பார்க்கும்போது, கழக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லத் தோன்றவில்லை; "வெற்றி நமது" என்பதை அவர் உறுதி செய்துவிட்டார் என்று பாராட்டவே வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பது அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அல்ல. பா.ஜ.க தலைமையிலான கூட்டணி. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அள்ளி அல்ல, கிள்ளிக்கூட கொடுக்காத ஒரு துரோகக் கூட்டணி இது. தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் துரோக பாஜக கூட்டத்தோடு அதிமுக கைகோர்த்துள்ளது.
யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
- த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பனையூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று பலர் விருப்பமனு கொடுத்தது பற்றி கேள்வி எழுப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சீமான், "தவெகவில் இருப்பது சின்ன பிள்ளைகள். பனையூர் தொகுதி இல்லைனு அவங்களுக்கு தெரியல. விற்பனை பண்டம் போல நினைத்து விருப்ப மனு வாங்கியுள்ளார்
- முதலமைச்சருக்கு பாராட்டு விழா என்பது எதுவுமே செய்யாதவருக்கு எல்லாம் செய்த சாதனையாளர் விருது வழங்குவதற்கு ஒப்பான நகைச்சுவை.
- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசு அறிவித்தது. அதுவே ஓர் உருப்படாத திட்டம்தான்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்த திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போர்வையில் நன்றி அறிவிப்பு மாநாடு என்ற பெயரில் நாளை ஓர் நாடகம் அரங்கேற்றப்படவுள்ளது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக எரிமலையாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நன்றி அறிவிப்பு என்ற கைகுட்டையைக் கொண்டு அதை அடக்க முடியாது.
முதலமைச்சருக்கு பாராட்டு விழா என்பது எதுவுமே செய்யாதவருக்கு எல்லாம் செய்த சாதனையாளர் விருது வழங்குவதற்கு ஒப்பான நகைச்சுவை ஆகும். 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராடினார்கள். அவர்களின் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசு அறிவித்தது. அதுவே ஓர் உருப்படாத திட்டம்தான். அதுவும் கூட அறிவிக்கப்பட்டு 35 நாள்களாகியும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு பணியாளர்கள், டாஸ்மாக் தொழிலாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் என பலரும் இன்னும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது குரூரமான நகைச்சுவை ஆகும்.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அப்பட்டமான துரோகங்களை செய்யும் திமுக, அவர்களுக்கான அமைப்புகளில் உள்ள தங்களின் ஆதரவாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி பாராட்டு விழா நடத்துவதை காலம் காலமாகவே வாடிக்கையாக வைத்திருக்கிறது. ஆனால், இதுவெல்லாம் எடுபடாது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்த தலைமைச் செயலக ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அதன் உறுப்பினர்கள் கொந்தளித்ததைப் போல ஆளும் திமுகவுக்கு துதி பாடும் நிர்வாகிகளுக்கு எதிராகவும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொந்தளிக்கப் போவது உறுதி.
அடுக்கடுக்கான துரோகங்களால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொதிப்படைந்துள்ள நிலையில், இந்த பாராட்டு விழா படுதோல்வி அடையும் என்பதை ஆட்சியாளர்களும் அறிவார்கள். அதனால்தான் அரசு ஊழியர்களின் நன்றி அறிவிப்பு மாநாடு என அறிவித்து விட்டு, அதில் பங்கேற்க திமுக-வினரை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவர்களை அழைத்து வருவதற்காக தனியார் பள்ளிகளில் இருந்து மாவட்டத்திற்கு 20 பேருந்துகளை அனுப்பி வைக்கவும், தனியார் பள்ளி ஆசிரியர்களை பங்கேற்க செய்யச் சொல்லியும் தனியார் பள்ளி இயக்குனர் மூலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அதனால் மாவட்ட கல்வி அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்னதான் வான்கோழி இறகை விரித்தாலும் கான மயிலாக முடியாது. அதேபோல், கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து, அரசு ஊழியர் அமைப்புகள் பெயரில், திமுகவே பாராட்டு விழாக்களை நடத்தினாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற முடியாது. நம்ப வைத்து துரோகம் செய்த திமுகவை வரும் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பழிதீர்க்கப் போவது உறுதி.
இவ்வாறு அறிக்கையில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
- தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை :
தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சார்பில், தே.மு.தி.க. வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சந்தோஷ்குமார் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பற்றியும் தே.மு.தி.க. பற்றியும் யூடியூப் தளங்களில் சிலர் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள்.
இத்தகைய அவதூறு பேச்சுகள், தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்ற திருச்சி சூர்யா, தமிழா தமிழா, பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 439 பேர் சஸ்பெண்டு நடவடிக்கை காரணமாக போலீஸ் பணியில் இல்லாமல் உள்ளனர்.
- சஸ்பெண்டு காலத்தில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் காவல்துறை பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டது மற்றும் கவன குறைவாக செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக போலீசார் மீதும் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
மாநிலம் முழுவதும் இதேபோன்று 439 பேர் சஸ்பெண்டு நடவடிக்கை காரணமாக போலீஸ் பணியில் இல்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் இவர்களுக்கு சஸ்பெண்டு காலத்தில் வழங்கக்கூடிய குறைந்தபட்ச ஊதியமும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக சஸ்பெண்டு நடவடிக்கையில் இருந்து வரும் 202 போலீசார் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை விடுவிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீஸ் டிஜிபி வெங்கட்ராமன், அனைத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதன்படி நடவடிக்கையில் உள்ள 200க்கும் மேற்பட்ட போலீசார் பணிக்கு திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது.






