என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
- இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி.
- செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது தவறு.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி.
* அ.தி.மு.க.வில் இருந்தபோது பா.ஜ.க.வை நம்பி இருந்ததாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
* பா.ஜ.க.வை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல.
* செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது தவறு. அப்படி இயக்கி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு சென்றார்.
* பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி, ஒரு கவுன்சிலர் கூட இல்லாத த.வெ.க.வுடன் எங்களை ஒப்பிடக்கூடாது.
* செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதரவாளர்களுக்கு த.வெ.க. துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.
- சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.
பனையூர் உள்ள த.வெ.க. அலுவலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க. வில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு த.வெ.க. துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.
இதனை தொடர்ந்து விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது:-
* அனைவருக்கும் வணக்கம். 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜி.ஆரை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர்.
* இளம் வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.
* அந்த இயக்கத்தில் இருபெரும் தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.
* இப்படி ஒரு 50 ஆண்டு ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், இன்னிக்கு அவர்களுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்றைக்கு அவர்களுக்கும், இணைந்து பணியாற்ற நம்மோடு கைகோர்க்கும் இருக்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்.
* நல்லதே நடக்கும்... நல்லதே நடக்கும்... நல்லது மட்டுமே நடக்கும்... வெற்றி நிச்சயம்... என பேசியுள்ளார்.
- தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
- கண்களை இமை காப்பது போல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:
* செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமமான முடிவு.
* விஜய், செங்கோட்டையன் இருவரில் யார் யாருக்கு அரசியல் பாடம் எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
* செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* கண்களை இமை காப்பது போல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
* தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும்.
* பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. செங்கோட்டையன் சென்றதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம்.
- செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் நன்கு அறியப்பட்ட நபர். கொங்கு மண்டலத்தின் நாடி துடிப்பு என்ன, பிரச்சனைகள் என்ன என்றெல்லாம் அவருக்கு தெரியும். எனவே செங்கோட்டையனின் அனுபவத்தை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் வலுவாக கால்பதிக்க த.வெ.க முயற்சிகளை மேற்கொள்ளும்.
மேலும் எம்.ஜி.ஆரின் அரசியலை கூடவே இருந்து பார்த்தவர் செங்கோட்டையன். எனவே எம்.ஜி.ஆரை அடிக்கடி முன்னிலைப்படுத்தி பேசும் விஜய்க்கு செங்கோட்டையின் அனுபவம் கைகொடுக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் கூட்டங்களை மேலாண்மை செய்த அனுபவமும் செங்கோட்டையனுக்கு உள்ளது. அதிலும் ஜெயலிதாவின் சுற்றுப்பயணங்களை வகுத்து அதற்கு தலைமை தாங்கி பிரசார கூட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்த வியூகவாதியாகவும் அவர் இருந்துள்ளார். இதனால் புவியியல் ரீதியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் அத்துப்படி. த.வெ.கவில் அவர் இணைந்துள்ளதால் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை இவரே மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் போன்ற நெருக்கடியான சூழலில் உள்ள விஜய்க்கு, செங்கோட்டையின் வியூகங்கள் நல்ல வழியை காட்டும்.
இதனையெல்லாம் தாண்டி, செங்கோட்டையன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம், அக்கட்சியில் ஒருங்கிணைப்பை விரும்பும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
எனவே, இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம். இதற்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறார் செங்கோட்டையன்.
இன்று செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்கோட்டையன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனை விஜய் ஏற்று, அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விரைவில் விஜய் ஈரோட்டில் மக்களை உள் அரங்கில் சந்தித்து பேச உள்ளார்.
அரை நூற்றாண்டு காலம் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைவது விஜய்க்கு ஒரு வலிமை தான் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. மேலும் அவர் பல கட்சி தலைவர்களுடனும் உறவை கொண்டிருப்பதால், த.வெ.க சிறப்பான கூட்டணியை அமைக்கவும் அவர் ஒரு பாலமாக செயல்படலாம்.
செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர். 'கோபிசெட்டிப்பாளையத்தை தாண்டி அவருக்கு ஈரோடில் கூட பெரிய செல்வாக்கு கிடையாது. எங்கள் கட்சியிலேயே எம்ஜிஆர் காலத்து தலைவர் என்பதால் அவருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கினர். மற்றபடி அவரால் கொங்கு மண்டல அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரால் இப்போதுள்ள சூழலில் கோபியில்கூட வெல்ல முடியாது' என்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் செங்கோட்டையனின் வருகை என்பது தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஏதோ ஒரு வகையில் லாபம்தான். ஆனால் அதனை விஜய் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.
- பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் நடந்த விழாவில், தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் த.வெ.கவில் இணைந்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்துள்ளது அது த.வெ.க.வுக்கு பலமாக மாறுமா? செங்கோட்டையனின் செல்வாக்கை விஜய் பயன்படுத்திக்கொள்வரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது உள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆரால் 25 வயதிலேயே அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
1977-ம் ஆண்டு முதல் இன்று வரை 9 முறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதுவும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்துள்ளார். 3 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதலே அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் திகழ்ந்து வந்தார். மூத்த தலைவர் என்பதால் கட்சியிலும், கட்சியினர் இடையேயும் அவருக்கு என தனி மரியாதை இருந்தது.
செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் முதலில் நன்றாகவே புரிதல் இருந்தது. ஆனால் ஒற்றை தலைமை என்ற எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி செல்லும் போது அதில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனை செங்கோட்டையன் ரசிக்கவில்லை. இதுதான் பிரச்சனைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் கருத்து மோதல், அவரது சொந்த தொகுதியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என பல்வேறு விஷயங்களில் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் எழுப்பினார். மேலும் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின் போது, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்ததுடன், அவரை கட்சியை விட்டு நீக்கியும் அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.
முன்னதாக விஜய்-செங்கோட்டையன் சந்திப்பானது, நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. சந்திப்பின் போது கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்துள்ளது த.வெ.கவுக்கு நிச்சயமாக கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது உண்மை. ஏனென்றால் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மாற்றுகட்சியினர் சேர்ந்தனர். கமல் கட்சி தொடங்கிய போது திரை பிரபலங்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் இணைந்தனர். ஆனால் கட்சி தொடங்கி 2 ஆண்டு ஆகியும் விஜயின் கட்சியில் அப்படி யாரும் இணையவில்லை. தற்போது செங்கோட்டையன் இணைந்து அந்த குறையைபோக்கியுள்ளார். இதனால் செங்கோட்டையனின் வருகை நிச்சயமாக த.வெ.கவுக்கு வலு சேர்க்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்ந் வரவேற்றார்.
- 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்ந் வரவேற்றார்.
இதையடுத்து த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.க.-வில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர்
- என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார்.
அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
- அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 49-வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி உரையாற்றினார். அவர் பேசுகையில்,
தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.
மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.
- படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் 'காக்கா முட்டை' எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு 'லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






