search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?- குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்ப்பு
    X

    ரேஷன் கடை

    ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?- குடும்ப அட்டைதாரர்கள் எதிர்பார்ப்பு

    • எடை சரியாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் எடை போட்டு பார்த்தால் அளவு குறைவாகத்தான் இருக்கிறது.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்சார தராசை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஏழை-எளிய மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் பொது வினியோக திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா புழுங்கல் அரிசி, பச்சரிசி, மானிய விலையில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.25, துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30, பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை-எளிய மக்களின் பட்டினியை போக்கும் இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்று விடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக இருந்து வருகிறது. எனவே ரேஷன் கடையில் எவ்வளவு பொருட்கள் இருப்பு இருக்கிறது? என்ற விவரங்கள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் இணையதளத்தில் (tnpds) அன்றாடம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ரேஷன் கடையின் வெளியே உள்ள தகவல் பலகையில் தினமும் பொருட்கள் இருப்பு விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சில ஊழியர்கள் இதனை கடைபிடிப்பது கிடையாது. 'பயோ- மெட்ரிக்' (கை ரேகை பதிவு) முறையும் அமல்படுத்தப்பட்டது. அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கியவுடன் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

    ரேஷன் கடைகளில் எடைக்கல் தராசு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் வினியோகம் நடைபெற்ற போது, எடை குறைவு பிரச்சினை எழுந்தது. எனவே எடைக்கல் தராசுக்கு பதில் மக்கள் எடை அளவை சரிபார்த்து வாங்கி கொள்ளும் வகையில் மின்சார தராசு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

    ஆனால் மின்சார தராசிலும் ஒரு சில ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எடை அளவு சரியாக இருக்கிறதா? என்பதை உற்று நோக்குவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென்று எடையை போட்டு விடுகின்றனர். எடை அளவு முழுமை அடைவதற்குள் கையை வைத்து எடையை ஈடு செய்து பொருட்களை பையில் போடுகின்றனர்.

    இந்த பாணியை பின்பற்றி ஒவ்வொரு அட்டைதாரரிடமும் சர்க்கரை, துவரம் பருப்பில் தலா 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், அரிசியில் கால் கிலோ முதல் அரை கிலோ வரையிலும் எடுத்து விடுகின்றனர் என்பது அட்டைதாரர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

    ரேஷன் கடைகளில் உள்ள எடை குறைவு பிரச்சினை தொடர்பாக அட்டைதாரர்கள் சிலர் வேதனையுடன் கூறியதாவது:-

    ரேஷன் கடையில் மின்சார தராசில் ஊழியர்கள் பொருட்களை எடை போடும்போது உன்னிப்பாக கவனிப்போம். எடை அளவு நெருங்கும் சமயத்தில் கண்கட்டி வித்தை காட்டுவது போன்று ஊழியர்கள் பொருளை போடுவதும், எடுப்பதும் என்று சில நொடிகளில் குழப்பி விடுகின்றனர்.

    எடை சரியாக இருக்குமா? என்ற சந்தேகத்தில் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் எடை போட்டு பார்த்தால் அளவு குறைவாகத்தான் இருக்கிறது. இது பற்றி ஊழியர்களிடம் கேட்டால், அதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று வசைபாடுகிறார்கள். இதனால் வேறு வழியின்றி அவர்கள் போடும் எடை அளவை வாங்கி செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

    பொது வினியோக திட்டத்தை வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, ரேஷன் கடைகளில் உள்ள எடை குறைவு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்சார தராசை நோக்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

    இதன் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டால் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விடும் என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் ஏற்படும். இதையடுத்து அனைத்து அட்டைதாரர்களுக்கும் சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×