search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்-  அரசு ஆஸ்பத்திரி உணவகத்துக்கு சீல் வைப்பு
    X

    உணவகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தபோது எடுத்த படம்.


    உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்- அரசு ஆஸ்பத்திரி உணவகத்துக்கு சீல் வைப்பு

    • உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவருந்திய 4 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம்.
    • உணவகத்தில் உள்ள உணவு கூடம் மிக மோசமாக இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் அங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உணவருந்த வசதியாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.மேலும் தனியார் மூலமாகவும் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த உணவகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவருந்திய 4 பேருக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் உணவகத்தை சீல் வைத்து மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மாநகர நகர்நல அதிகாரி பொறுப்பு ஜான் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ஆல்ரின்,வருவாய் உதவியாளர் முருகன் ஆகியோர் இன்று காலை அந்த உணவகத்திற்கு சென்றனர்.

    அங்கு மதியம் உணவு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த உணவை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கு தயார் செய்த உணவுகள் அனைத்தையும் மாநகராட்சி வண்டியில் ஏற்றினார்கள். பின்னர் அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகம் சீல் வைக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் உணவகத்தில் உள்ள உணவு கூடம் மிக மோசமாக இருந்தது.

    மேலும் இங்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டபோது தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×