search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீசாரின் சோதனையின்போது முகத்தை அடையாளம் காட்டும் செயலியால் சிக்கிய ரவுடி
    X

    போலீசாரின் சோதனையின்போது முகத்தை அடையாளம் காட்டும் செயலியால் சிக்கிய ரவுடி

    • போரூர், மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    போரூர்:

    குற்ற வழக்குகளில் சிக்கி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு நபர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அவர்களது முகத்தை ஸ்கேன் செய்யும் செயலியை ஏற்கனவே போலீசார் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    இந்த செயலியில் ஒருவரது முகத்தை ஸ்கேன் செய்யும்போது அவர்களது பழைய குற்ற விபரம் மற்றும் தேடப்படும் குற்றவாளியா? என்பது தெரியவரும். இந்த செயலி மூலம் போரூரில் தலைமறைவாக இருந்த ரவுடி ஒருவரை போலீசார் பிடித்து உள்ளனர்.

    போரூர், மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குற்றவாளிகளை கண்டறியும் செயலி (எப்.ஆர்.எஸ் ஆப்) மூலம் ஆய்வு (சோதனை) செய்தனர்.

    அப்போது அவன் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற கர்லிங் கார்த்திக் (வயது27) என்பது தெரிந்தது. ரவுடியான அவன் மீது ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்கு இருப்பதும் 2 வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து கர்லிங் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை வைத்தீஸ்வரன் கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×