search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதி தொடங்குமா?
    X

    நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதி தொடங்குமா?

    • நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ந்தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
    • நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ந்தேதிக்கு தள்ளிப் போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25-ந்தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    சென்னை:

    இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஆகஸ்டு 25-ந்தேதி தொடங்கி அக்டோபர் 21-ந்தேதி முடிவடையும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    ஆனால் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராததால் என்ஜினீயரிங் கவுன்சிலிங் வருகிற 25-ந்தேதி தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஏன் என்றால் நீட் தேர்வு எழுதி இருக்கும் மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்கும் பட்சத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேராமல் மருத்துவ படிப்புக்கு சென்று விடுவார்கள்.

    இதனால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டு விடும். இப்படித்தான் கடந்த ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் 631 இடங்கள் காலியாக இருந்தன. இதை தவிர்ப்பதற்காகத்தான் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த 7 நாட்களுக்குள் மாணவர்கள் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலியாக இருப்பதாக கருதப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என்று புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.

    நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 21-ந்தேதி வெளியாகும் என்பதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங் 25-ந்தேதிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இப்போது நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 28-ந்தேதிக்கு தள்ளிப் போவதால் தமிழகத்தில் என்ஜினீயரிங் கவுன்சிலிங் திட்டமிட்டபடி 25-ந்தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    எனவே என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை 1 வாரம் தள்ளி வைக்கலாமா? என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதற்கு முன்பு ஏற்கனவே ஆகஸ்டு 20-ந்தேதி கவுன்சிலிங் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் 25-ந்தேதிக்கு அதை தள்ளி வைத்தனர். இப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகாததால் இன்னும் 1 வாரம் வரை தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து தொழில் நுட்ப கல்வி இயக்குனரக அதிகாரி கூறுகையில், கவுன்சிலிங் தேதியை ஏற்கனவே ஒருமுறை மாற்றி தள்ளி வைத்து விட்டோம். மீண்டும் இப்போது அறிவித்துள்ள தேதியை தள்ளி வைக்கலாமா? அல்லது 25-ந்தேதி கவுன்சிலிங்கை தொடர்ந்து நடத்தலாமா? என்றும் ஆலோசித்து வருகிறோம். முதற்கட்ட இடஒதுக்கீடு கிடைக்கும் மாணவர்கள் செப்டம்பர் 7-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேருவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கலாமா? என்றும் ஆலோசித்து வருகிறோம்.

    இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறுகையில், நீட் தேர்வு முடிவுகள் இந்த மாதம் கடைசியில் வெளியாகும் என தெரிகிறது.

    எனவே முதல் ரவுண்ட் என்ஜினீயரிங் கவுன்சிலிங் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 14,524 மாணவர்களுக்கு நடத்தலாமா? என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இதுபற்றி முடிவெடுத்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×