search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 28 பேரை கடித்த தெரு நாய்க்கு வெறிநோய் பாதிப்பு
    X

    சென்னையில் 28 பேரை கடித்த தெரு நாய்க்கு வெறிநோய் பாதிப்பு

    • தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    • தெரு நாய்களை பிடிக்க பயன் படுத்தப்படும் வாகனம் அடிக்கடி பழுதாகி விடுகிறது

    ராயபுரம்:

    சென்னை ராயபுரத்தில் கடந்த வாரம் தெருநாய் ஒன்று 28 பேரை கடித்தது. தொடர்ந்து பலரை கடிக்க முயன்றதால் அப்பகுதி மக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டோர் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    கொல்லப்பட்ட நாயை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அதில் 28 பேரை கடித்த தெரு நாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) பாதிப்பு இருந்தது உடல் பிரேத பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையில் நாய் கடித்தவர்களுக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு தலின்படி வெறிநாய் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    தெரு நாய் கடித்ததில் சிலர் வகை 2 ஆகவும், சிலர் வகை 3 ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களுக்கு வெறிநாய் தடுப்பூசி 5 டோஸ் போட வேண்டியிருக்கும். அதனை பின்பற்றி தடுப்பூசி போடப் படுவதாக ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து மாநாகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து மீண்டும் அந்த இடத்திலேயே விடப்படுகிறது. சென்னையில் ஒரு லட்சம் தெருநாய்கள் இருக்க கூடும் என தோராயமாக கணக்கிடப்படுகிறது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு 16 ஆயிரம் தெருநாய்களுக்கும், இந்த வருடம் 17,813 தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 13,486 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

    ஆனாலும் தங்கள் பகுதியில் உள்ள தெரு நாய்களின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டால் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தெரு நாய்களை சமூக ஆர்வலர்கள் தத்தெடுக்க முன்வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ராயபுரம், கல்மண்டபம், எம்.சி. ரோடு, ஜி.கே.ரோடு ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் 2 நாட்களாக பிடிக்கப்பட்டு வருகின்றன. நேற்று 25 நாய்கள் பிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தெரு நாய்களை பிடிக்க பயன் படுத்தப்படும் வாகனம் அடிக்கடி பழுதாகி விடுகிறது. கடந்த ஒரு மாதமாக தேனாம்பேட்டையில் உள்ள நாய் வாகனம் பழுதாகி விட்டது. அதனால் தெருநாய்களை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    Next Story
    ×