search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்பு- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்பு- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • ஒரு குற்றச்சாட்டிற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஓர் அரசு ஊழியரை, அதை விட உயர் பதவியில் அமர்த்தலாம் என்பதுபோல் அமைச்சரின் கூற்று உள்ளது.
    • தவறிழைத்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து கொள்முதல் ஆணை வழங்க வேண்டும் என்பதற்காகவே, கருப்புப் பட்டியலில் சேர்க்காமல் அபராதத்தை மட்டும் அரசு விதித்ததோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல வாக்குறுதிகள், தி.மு.க. தலைவர்களால் மேடைக்கு மேடை பேசப்பட்ட 'நீட் தேர்வு ரத்து', 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்', 'கல்விக்கடன் ரத்து' உள்ளிட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டாலும், தி.மு.க. தலைவரால் மேடைக்கு மேடை முழங்கப்பட்ட மூன்று 'சி'-க்கள் கலெக்சன், கமிஷன், கரப்சன் ஆகியவை மட்டும் தமிழ்நாட்டில் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

    இந்த சூழ்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்தது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்ட அதே மூன்று நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்திற்காக 4 கோடி 'ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்' விநியோகிப்பதற்கும், ஒரு லட்சம் டன் பருப்பு வழங்குவதற்குமான ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது.

    மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார்.

    ஒரு குற்றச்சாட்டிற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஓர் அரசு ஊழியரை, அதை விட உயர் பதவியில் அமர்த்தலாம் என்பதுபோல் அமைச்சரின் கூற்று உள்ளது. தவறிழைத்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து கொள்முதல் ஆணை வழங்க வேண்டும் என்பதற்காகவே, கருப்புப் பட்டியலில் சேர்க்காமல் அபராதத்தை மட்டும் அரசு விதித்ததோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததோடு, அந்த நிறுவனங்களுக்கு புதிதாக ஒப்பந்த ஆணைகளை வழங்கி அவற்றை நியாயப்படுத்திப் பேசுவது என்பது உலகில் எங்கும் கண்டிராத ஒன்று. இதுபோன்ற நடவடிக்கை தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கு சமம்.

    ஒருவேளை, இதுபோன்ற முறைகேடான, நியாயமற்ற, மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபடுவது தான் 'திராவிட மாடல்' போலும். ஊழலை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×