search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திராவிட மாடல் அரசின் புத்தகப் புரட்சி தொடரட்டும்- கி.வீரமணி வாழ்த்து
    X

    திராவிட மாடல் அரசின் புத்தகப் புரட்சி தொடரட்டும்- கி.வீரமணி வாழ்த்து

    • மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே நடத்தும் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு சிறப்பானது.
    • புத்தகங்கள், நூல்களை விலைக்கு வாங்கி, தமிழ்நாடு அரசு பரப்புவதும் பாராட்டத்தக்கது.

    சென்னை:

    திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே நடத்தும் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு சிறப்பானது. மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே முன்வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஏற்பாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நாள்கள் புத்தகக் கண்காட்சி - விற்பனையை மக்களிடையே பரப்பிடும் அரிய பணி புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகங்களின் செழுமையான விற்பனைக்காக என்பதை விட, அறிவு கொளுத்தும் பகுத்தறிவைப் பரப்பும் ஓர் ஒப்பற்ற பெரும் பணியாகும்.

    மக்களிடையே கல்வி அறிவு, படிப்பறிவு பெருக, குலதர்மமான மனுதர்மத் தடையை அகற்றிட, அனைவருக்கும் கல்வியை பொது உரிமையாகவும், பொது உடமையாகவும் ஆக்கி, வெற்றி பெற்ற தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதன் விரிவாக்கும் பணியாக புத்தகங்களை மலிவு விலையில் வெளியிட்டு, தந்தை பெரியாரே நாட்டின் நாலா பக்கங்களிலும் கூட்டங்களில் மக்களிடையே பரப்பிய வரலாறு - உலகில் எந்தத் தலைவரும், எந்த ஓர் இயக்கமும் செய்யாதது.

    தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் தனித்தன்மையான சமூகநீதி பூமியாக, சுயமரியாதைக் களமாக இருப்பதற்கு இந்த அடிக்கட்டுமானம் போன்ற அறிவுத் திருப்பணியே மூலாதாரம் ஆகும்.

    முற்போக்கு இயக்கங்கள் ஏற்படுத்தி வரும் இந்த முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட, திராவிடர் இயக்கமும், பொது மக்களைத் திரட்டி அவ்வப்போது பொதுக்கூட்டங்களை சிற்றூர், பேரூர், பட்டணம், பட்டிக்காடு வேறுபாடின்றி நடத்தி வருகிறது. அதேபோல, ஏடுகள், நூல்களை அச்சிட்டுப் பரப்புதலும், கலைத்துறை, நாடகம், திரை (பிறகு) என்றும் பிரச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.

    தமிழ்நாடு அரசின் இன்றைய முதல்-அமைச்சர் ஊக்கம் தரும் உற்சாகப் பெருவிழாக்களாக புத்தகத் திருவிழாக்களை நடத்துவதும், நூலகங்களுக்கு நல்ல நூல்களை அவர் அன்பளிப்பாகத் தருவதும் ஒரு புதுமை நிறைந்த பயனுறு பாராட்டத்தக்க ஏற்பாடு.

    அதேபோல, புத்தகங்கள், நூல்களை விலைக்கு வாங்கி, தமிழ்நாடு அரசு பரப்புவதும் பாராட்டத்தக்கது. இடையில் இடைத்தரகர்கள் நுழையாமல் அதன் தூய்மையான தொண்டு அவப்பெயர் எடுக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். புத்தாக்கப் புத்தகப் புரட்சி தொடரட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×