search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்
    X

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்

    • பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யபாரதி.
    • குழந்தையை காணாததால் திவ்யபாரதி கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ்.கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யபாரதி.

    இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி திவ்யபாரதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, கணவர் யூனிஸ் பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அங்கு அவருக்கு 29-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து திவ்யபாரதி தனது குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தார். உதவிக்காக அவரது கணவரும் உடன் தங்கி இருந்தார்.

    நேற்று இரவு திவ்யபாரதி, மற்றும் அவரது கணவர் சாப்பிட்டு விட்டு குழந்தையின் அருகே தூங்கினர்.

    இன்று அதிகாலை திவ்யபாரதி எழுந்து குழந்தை படுத்திருந்த தொட்டிலை பார்த்தார். அப்போது தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் தனது கணவரை எழுப்பி தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து 2 பேரும் ஆஸ்பத்திரி முழுவதும் தங்களது குழந்தையை தேடி அலைந்தனர். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் தூங்கிய நேரத்தில் வார்டுக்குள் புகுந்த யாரோ மர்மநபர்கள் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை கடத்தி சென்றுள்ளனர்.

    குழந்தையை காணாததால் திவ்யபாரதி கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் பொள்ளாச்சி போலீசில் புகார் கொடுத்தனர்.

    உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து, குழந்தையின் பெற்றோர் மற்றும் பணியில் இருந்த நர்சுகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குழந்தையை யாராவது கடத்தி செல்லும் காட்சிகள் ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று நினைத்த போலீசார், அங்கு பணியில் இருந்தவர்களிடம் இங்கு சி.சி.டி.வி கேமிரா அறை எங்கு உள்ளது என்று கேட்டனர்.

    அதற்கு இந்த ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு கேமிரா கிடையாது என்றனர். இதனால் குழந்தையை கடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.

    இருப்பினும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள கடைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் பொள்ளாச்சி பஸ் நிலையம், ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஏராளமான மக்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். இப்படி பரபரப்பாக காணப்படும் ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×